சாக்லேட்டில் மிளகாயா? அஸ்டெக் காலத்து ஒரிஜினல் ரெசிபி!

நாம் குடிக்கும் ஹாட் சாக்லேட்டுக்கும் மெக்சிகன் பானத்திற்கும் உள்ள சுவாரஸ்யமான வரலாறு.
ஹாட் சாக்லேட்
ஹாட் சாக்லேட்Gemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

இன்று உலகம் முழுவதும் விரும்பப்படும் சாக்லேட் (Chocolate) முதன்முதலில் உருவானது மெக்சிகோவில் தான். அஸ்டெக் மக்கள் கொக்கோ (Cacao) விதைகளை அரைத்து, அதில் மிளகாய் மற்றும் மசாலாக்கள் கலந்து கசப்பும் காரமும் நிறைந்த ஒரு பானமாக அருந்தினர். அஸ்டெக் மொழியான நஹுவாட்லில் (Nahuatl) 'சொகோலாட்ல்' (Xocolatl) என்று அழைக்கப்பட்டதே பின்னாளில் 'சாக்லேட்' என மாறியது.

பாரம்பரிய மெக்சிகன் ஹாட் சாக்லேட் (Mexican Hot Chocolate) என்பது நாம் வழக்கமாகக் குடிக்கும் சாதாரண சாக்லேட் பானத்தை விட வித்தியாச சுவை கொண்டது. இதில் சேர்க்கப்படும் பட்டையின் மணமும், லேசான காரத்தன்மையும் (Cinnamon & Chili) இதற்கென ஒரு தனித்துவமான சுவையைத் தருகின்றன.

பழங்கால அஸ்டெக் (Aztec) முறையின் தாக்கத்தோடு, சுடச்சுட மணமணக்கும் பாரம்பரிய மெக்சிகன் ஹாட் சாக்லேட் செய்முறை பற்றி இதில் காண்போம்!

தேவையான பொருட்கள்:

முழு கொழுப்புப் பால் - 2 கப்

டார்க் சாக்லேட் - 100 கிராம் (துருவியது)

பட்டைத் தூள் - அரை தேக்கரண்டி (அல்லது 1 சிறிய பட்டைத் துண்டு)

மிளகாய்த் தூள் - அரை சிட்டிகை

வேகவைத்த கொக்கோ தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பழுப்புச் சர்க்கரை அல்லது நாட்டுச்சக்கரை - 2 டேபிள் ஸ்பூன் (சுவைக்கேற்ப)

வெண்ணிலா எசென்ஸ் - அரை தேக்கரண்டி.

ஹாட் சாக்லேட்
ஹாட் சாக்லேட்Gemini image

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் பாலை ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வைத்துச் சூடாக்கவும். பால் லேசாகச் சூடேறும் போது, அதில் பட்டைத் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் சேர்க்கப்படும் மிளகாய்த்தூள் சாக்லேட்டின் சுவையை நன்றாக எடுத்துக் காட்டுமே தவிர, காரமாக இருக்காது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் சாப்பிடும் மீல்மேக்கர் உண்மையானதா? கலப்படத்தைக் கண்டறியும் சீக்ரெட்!
ஹாட் சாக்லேட்

பால் கொதிநிலைக்கு வரும் முன், அடுப்பைக் குறைந்த தீயில் (Low Flame) வைக்கவும். அதில் கொக்கோ தூள், துருவிய டார்க் சாக்லேட் மற்றும் நாட்டுச்சக்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும். சாக்லேட் பாலில் முழுமையாகக் கரைந்து, கலவை திக்காகவும் பளபளப்பாகவும் மாறும் வரை ஒரு கைப்பிடியுள்ள விஸ்க் (Whisk) கொண்டு நன்றாகக் கலக்கிக்கொண்டே இருக்கவும்.

சாக்லேட் முழுமையாகக் கரைந்ததும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். மெக்சிகோ நாட்டின் பாரம்பரியக் மர மத்தாலான 'மொலினில்லோ' (Molinillo) அல்லது சாதாரண விஸ்க் கொண்டு கலவையை வேகமாகக் கடைந்து மேலே நல்ல நுரையை வரவழைக்க வேண்டும். இந்த நுரைதான் இந்த பானத்திற்கு நல்ல ருசியை தருகிறது. ஆதலால் நன்றாக நுரை வருமாறு கலக்குவது அவசியம். இப்படி நன்றாக கலந்து நறுமணம் கமழும் சுடச்சுட நுரைபொங்கும் பானத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
பட்டாசுக்கு மட்டுமல்ல, சிவகாசி இந்த மண்பானை பரோட்டாவுக்கும் ஃபேமஸ்தான்! 
ஹாட் சாக்லேட்

பரிமாறும் முறை:

இதைக் கோப்பைகளில் (Mugs) ஊற்றி, மேலே லேசாகப் பட்டைத் தூள் தூவிச் சூடாகப் பருகலாம்.

மெக்சிகோ மக்கள் இத்துடன் 'சுரோஸ்' (Churros) எனப்படும் இனிப்பு பலகாரத்தைத் தொட்டுச் சாப்பிடுவது வழக்கம்.

முக்கியக் குறிப்பு: மிளகாய்த் தூள் மிக மிகக் குறைந்த அளவிலேயே (ஒரு சிட்டிகை) இருக்க வேண்டும். அது சாக்லேட்டின் இனிப்பையும், பட்டையின் மணத்தையும் சமநிலைப்படுத்தித் தொண்டைக்கு ஒருவித கதகதப்பைத் தரும்.

மிளகாய்த்தூளுக்கு பதில் நல்ல மிளகுத்தூளை கலந்தும் இதில் நுரை பொங்க அடித்து கலக்கலாம். சுவையில் அதிகம் மாறுபாடு இருக்காது.

இதை முதன் முதலாக குடிப்பவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்குமோ என்று தோன்றுவதுண்டு. ஆனால் அந்த எக்கச்சக்க நுரையோடு அருந்தும்போது அந்தச் சுவையை அனுபவித்து மகிழலாம். மகனின் நண்பர் ஒருவர் இதை எங்களுக்குப் போட்டுக்கொடுத்தார். அவர் அந்த மத்தால் கலவையைக் கடைந்து அந்த நுரையை மேலே வரவைத்த விதம் அருமை.

உலகப் புகழ்பெற்ற சாக்லேட்டின் உண்மையான பூர்வீகத்தையும், அஸ்டெக் மக்கள் சுவைத்த அதே பாரம்பரிய காரசாரமான ஹாட் சாக்லேட் அனுபவத்தையும் நீங்களும் முழுமையாகப் பெறலாம்.