தக்காளி சட்னி போரடிக்குதா? வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை இப்படி அரைச்சு பாருங்க!

tomato-peanut-chutney
tomato-peanut-chutney
Updated on

கர்நாடகா பக்கம், குறிப்பாகப் பெங்களூர் சென்றால் அங்குள்ள உணவகங்களில் கொடுக்கப்படும் சட்னியின் சுவையே அலாதியாக இருக்கும். வழக்கமாக நாம் வீட்டில் அரைக்கும் தக்காளி சட்னியை விட, அவர்கள் தரும் சட்னி சற்று கெட்டியாகவும், லேசான இனிப்பு மற்றும் காரத்துடன் இருக்கும். இந்தத் தனித்துவமான சுவைக்குக் காரணம், தக்காளியோடு அவர்கள் சேர்க்கும் வறுத்த வேர்க்கடலைதான். 

வேர்க்கடலை, சட்னிக்கு ஒரு நல்ல தடிமனான பதத்தையும், அருமையான மணத்தையும் கொடுக்கும். சுடச்சுட மல்லிகைப்பூ இட்லிக்கும், மொறுமொறுப்பான தோசைக்கும் இந்தச் சட்னி அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். எந்தவிதமான சிரமமும் இல்லாமல், அசலான பெங்களூர் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கடலை சட்னியை வீட்டிலேயே மிக சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • நன்கு பழுத்த தக்காளி - 3

  • வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

  • பெரிய வெங்காயம் - 1 

  • பூண்டு - 4 பற்கள்

  • காய்ந்த மிளகாய் - 4 

  • உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

  • கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

  • புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை! 

 முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
அசத்தல் சுவையில் மணத்தக்காளி காய் காரக்குழம்பு!
tomato-peanut-chutney

இவை வறுபட்டதும் ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். ஒருவேளை நீங்கள் பச்சையான வேர்க்கடலை வைத்திருந்தால், அதையும் இதே கடாயில் நன்றாக வறுத்துத் தோல் நீக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அதே கடாயில் மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு பற்களைச் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புளியைச் சேர்க்கவும். 

தக்காளி நன்றாகக் குழைந்து, அதன் பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்க வேண்டும். தக்காளி தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இந்தக் கலவையை நன்றாக ஆறவிட வேண்டும். சூடாக அரைத்தால் சட்னியின் சுவை மாறிவிடும்.

பொருட்கள் அனைத்தும் முழுமையாக ஆறிய பிறகு, முதலில் வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் மற்றும் வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸான பதத்திற்கு அரைத்து எடுக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
கொசுக்கள்: சிறிய பூச்சி... பெரிய அச்சுறுத்தல்! - நாம் அறியாத உண்மைகள்!
tomato-peanut-chutney

இறுதியாக ஒரு சிறிய கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் கொட்டினால், கமகமக்கும் 'பெங்களூர் ஸ்பெஷல் தக்காளி கடலை சட்னி' தயார். நாவுக்கு ருசியான இந்த சட்னியைச் செய்து பரிமாறினால், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் இன்னும் இரண்டு இட்லி கூடுதலாகக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com