

பிரியாணி என்றாலே பொதுவாகச் சிவப்பு நிறத்தில், காரசாரமாக இருக்கும் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், பெங்களூர் பக்கம் சென்றால் அங்கு மிகவும் பிரபலமான ஒன்று 'டோன் பிரியாணி' (Donne Biryani). பனை ஓலையால் செய்யப்பட்ட தொன்னை போன்ற கிண்ணங்களில் சுடச்சுடப் பரிமாறப்படும் இந்த பிரியாணிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சீரக சம்பா அரிசியில், புதினா, கொத்தமல்லி அரைத்து ஊற்றிச் செய்யப்படும் இந்த பச்சை நிற பிரியாணியின் வாசனை ஊரையே கூட்டும். பொதுவாக இது அசைவத்தில்தான் செய்யப்படும். ஆனால், அதே சுவையிலும் மணத்திலும் காய்கறிகளைச் சேர்த்து ஒரு அட்டகாசமான 'டோன் வெஜ் பிரியாணி' எப்படிச் செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 1 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
கெட்டித் தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2
எண்ணெய் மற்றும் நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 10 பற்கள்
மிளகு மற்றும் சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
செய்முறை!
டோன் பிரியாணியின் சீக்ரெட்டே மசாலாவில்தான் இருக்கிறது. இதில் நாம் மிளகாய்த் தூள், மல்லித் தூள் போன்ற பொடி வகைகளைச் சேர்க்கப் போவதில்லை. மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக நைஸான பச்சை நிற விழுதாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
இப்போது ஒரு குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றுங்கள். சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அரைத்து வைத்துள்ள பச்சை நிற மசாலாவைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மசாலாவின் பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்ததும், நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள்.
காய்கறிகள் வதங்கியவுடன், 1 கப் சீரக சம்பா அரிசிக்கு 1.5 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். தண்ணீர் வற்றி, அரிசியும் தண்ணீரும் சரிசமமாக வரும்போது, அடுப்பை முற்றிலும் சிம்மில் வைத்துவிட்டு, குக்கரை மூடி விசில் போட்டு 10 முதல் 12 நிமிடங்கள் வரை விசில் வராமல் 'தம்'மில் வேகவைக்க வேண்டும்.
தம் அடங்கியதும் குக்கரைத் திறந்தால், வீடு முழுவதும் மணக்கும் சூடான, உதிரி உதிரியான 'டோன் வெஜ் பிரியாணி' தயார். கரண்டியின் காம்பால் அரிசி உடையாமல் மெதுவாகக் கிளறி விட்டு, தொன்னை அல்லது தட்டில் பரிமாறுங்கள். புதினா மற்றும் கொத்தமல்லியின் வாசனையோடு, சீரக சம்பா அரிசியின் மணமும் சேர்ந்து ஒரு தேவாமிர்தமான சுவையைத் தரும்.
இந்த வார இறுதியில் இதை முயற்சித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.