

அவ்வப்போது கருப்பு காபி சாப்பிடுவது உங்கள் வாழ்நாளை அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.20 வருடங்களாக 46,000 பேரிடம் நடத்தப்பட்ட டஃப்ட்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் 1-2 கப் காபி குடிப்பது புற்றுநோய், இதயக் கோளாறுகளை தவிர்க்கிறது என்கிறார்கள். 2-3 பிளாக் காபி காபி தினமும் குடிப்பது 17 சதவீதம் துரித மரணத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. கருப்பு காபி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 14 சதவீதம் மரண அபாயத்தை தடுக்கும். அதில் சர்க்கரை சேரும்போது அதன் வீரியத்தை இழக்கிறது என்கிறார்கள். கருப்பு காபி 35 சதவீதம் இதயக் கோளாறுகளை நீக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
காபி கல்லீரலில் கொழுப்பு படிவதையும், கல்லீரல் வீக்கத்தையும் குறைப்பதாக நார்வே நாட்டின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரண்டு அல்லது மூன்று காபி எடுத்துக்கொள்வது 40 சதவீதம் கல்லீரல் சம்பந்தமான மரணத்தை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.
குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிப்பது, சர்க்கரை நோய் தவிர்ப்பது, ரத்த அழுத்தம் குறைக்க, உடல் எடை குறைக்க, கெட்ட கொழுப்பை குறைக்க என பலவிதங்களில் காபி உதவுகிறது. ஞாபக மறதி, ஆன்டி இம்பிளமென்ட்ரி , பக்கவாதம் போன்றவைகளையும் தவிர்க்க உதவுகிறது.
பதட்டம், தூக்கமின்மை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்றவைகளை காபி உருவாக்கும் என்று கூறப்பட்டாலும். அதுவெல்லம் , தினமும் மூன்று கப்களுக்கு மேல் காபி குடிப்பவர்களுக்குதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காபியில் 100 க்கும் மேற்பட்ட 'பையோ ஆக்டிவ் 'சேர்மங்கள் உள்ளது. இது குளோரோசெனிக் அமிலத்தை போன்று செயல்படும். குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid - CGA) என்பது ஒரு முக்கிய பாலிபினோலிக் கலவை ஆகும். இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்புக்கு உதவவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
காபி ஒரு மருந்தல்ல அது ஒரு பானம். ஆனால், தினமும் சரியான நேரத்தில் சரியான அளவில், சரியான முறையில் குடித்தால் அது மருந்தாக செயல்படுகிறது என்கிறார்கள். காபி நல்லது எப்போது? தினமும் காலையில் 1-2 கப் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கும்போது. காபி கெட்டது எப்போது? தினமும் 4 கப் சாப்பிடும்போது, இரவு தூங்கும் முன் காபி சாப்பிடுவது, பாலும், சர்க்கரையும் அதிகம் சேர்த்து சாப்பிடும்போது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது.
இந்தியாவில் காபியில் சர்க்கரை மற்றும் பால் கலந்து குடிக்கிறார்கள் இதனால் காபியின் பயன் குறையுமா? காபியில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் பால் அதன் அசிடிட்டி தன்மையை குறைக்கும்.அதேவேளையில் அது குளோரோஜெனிக் அமில அளவையும் குறைக்கும். எனவே பாலும் சர்க்கரையும் கலக்காமல் கருப்பு காபி குடிப்பதே நல்ல பலன்களை தரும்.
காபி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். காபி குடிப்பது கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். பார்கின்சன் நோய் (Parkinson) மற்றும் அல்சைமர் (Alzheimer )நோயின் அபாயத்தைக் குறைக்கவும் காபி குடிப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, காபி உங்கள் உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலத்திலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். பிளாக் காபியில் காணப்படும் காஃபின், மூளையின் செயல்பாட்டைத் தூண்டி, கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. இதுநாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உணவுத் திட்டத்தில் பிளாக் காபியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பிளாக் காபி குடிப்பதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையக்கூடும். கருப்பு காபி குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பெருமளவில் துரிதப்படுத்தும், இது கொழுப்பை எரிப்பதில் ஆற்றல் காட்டுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. இது அட்ரினலின் அளவையும் அதிகரித்து, உடலை கடின உழைப்புக்குத் தயார்படுத்துகிறது. காபி ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக திகழ்கின்றது, அது செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் பெரிதும் துணைபுரிகின்றது.
காபி இயல்பாகவே டோபமைன் அளவை உயர்த்துவதன் காரணமாக உங்களை நன்றாக உணர வைக்கும், ஆனால் அதிகப்படியான காபின் நுகர்வு உங்களை பதற்றத்துக்கு ஆளாக்க கூடிய வாய்ப்பு உண்டு. தூக்கத்தில் இது தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்கு படுக்கைக்கு முன் குறைந்தது ஆறுமணி நேரம் காபி குடிக்காமல் இருப்பது சிறப்பு. மேலும் சிலருக்கு தொடர்ச்சியான காபி குடிப்பது வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக வெறும் வயிற்றில் குடிக்கும்போது செரிமான சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.