

முட்டைக்கோஸ் மஞ்சூரியன் என்பது இந்திய-சீன உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு ஆகும். இது சைவ உணவுப் பிரியர்களிடையே மிகவும் பிரபலமானது. முட்டைகோசை எப்போதுமே ஒரே மாதிரி சமைத்து உங்களுக்கு போர் அடித்தால் இதை முயற்சித்துப் பார்க்கவும். மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இந்தப் பதிவில், சுவையான முட்டைக்கோஸ் மஞ்சூரியனை எப்படி செய்வது என விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மஞ்சூரியனுக்கு:
நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்
மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
சாஸுக்கு:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய குடைமிளகாய் (பச்சை மற்றும் சிவப்பு) - தலா 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (நீளமாகக் கீறியது)
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன் (சிறிது தண்ணீரில் கரைக்கவும்)
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
செய்முறை:
மஞ்சூரியன்:
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைக்கோஸ், மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியான கலவையாக பிசைந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, கலவையை சிறிய பந்துகளாக உருட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சாஸ்:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக, வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், சர்க்கரை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.கொதி வந்ததும், கரைத்த சோள மாவை சேர்த்து சாஸை கெட்டியாக்கவும். இறுதியாக, உப்பு சேர்த்து சரிபார்த்து, பொரித்து வைத்த மஞ்சூரியன் பந்துகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
முட்டைக்கோஸ் மஞ்சூரியனை நறுக்கிய கொத்தமல்லி தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும். இதை சாதம், நூடுல்ஸ் அல்லது ஃபிரைட் ரைஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.