

1. கேப்ஸிகம் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
பெரிய குடமிளகாய் - 1
கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சோள மாவு - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, விதை நீக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும். சுவையான கேப்ஸிகம் பஜ்ஜி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி, புதினா சட்னி வெகு பொருத்தம்.
2. கேப்ஸிகம் ரைஸ்
தேவையான பொருட்கள்;
பாசுமதி அரிசி - ஒரு கப்
கேப்ஸிகம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முந்திரி - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - 5
தனியா - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
உளுந்து - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1க்ஷ2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
வேர்கடலை - சிறிது
செய்முறை:
அரிசியை கழுவி உதிரியாக வடித்து வைக்கவும். வறுக்க தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளித்து, இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து 4 நிமிடம் வதக்கவும். இதில் பொடி, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
சூடாக சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் விட்டு எடுக்கவும். வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையான கேப்ஸிகம் ரைஸ் தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவை மேலும் கூடும்.
3. கேப்ஸிகம் பல்சுவை பச்சடி
தேவையான பொருட்கள்:
குடமிளகாய் - அரை கிலோ
பச்சை மிளகாய், புளி - தலா 50 கிராம்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெல்லம் - 250 கிராம் (பொடிக்கவும்)
நல்லெண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குடமிளகாயை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புளியை நன்றாக கரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தாளித்து பெருங்காயத்தூள் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி உப்பு சேர்த்துக் கிளறவும்.
இதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். 15 - 20 நிமிடம் கொதித்ததும், பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறவும். எல்லாம் நன்றாகக் கொதித்து குழம்பு பதம் வரும்போது இறக்கவும். இனிப்பு, காரம், புளிப்பு என பல்சுவைகளில் அசத்தும் கேப்ஸிகம் பச்சடி தயார்!
இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கும், பூரி, சப்பாத்தி, தோசை, உப்புமாவுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
4. கேப்ஸிகம் ப்ரைடு இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கேப்ஸிகம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இட்லி மற்றும் குடைமிளகாய் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் நன்கு கிளறி, இறக்கி விடவேண்டும். சூப்பரான குடைமிளகாய் ப்ரைடு இட்லி ரெடி.
ஒரே ஒரு குடைமிளகாயைக் கொண்டு மாலை நேரச் சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை குடும்பத்தினருக்கு விருப்பமான 4 விதமான சுவையான உணவுகளை மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்ய முடியும்.