
உங்களுக்கு மைசூர் பாக் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இந்தப் பதிவில் சொல்லபோவது போல தேங்காய் பயன்படுத்தி மைசூர்பாக் ஒருமுறை செய்து பாருங்கள். உண்மையிலேயே அதன் சுவை சூப்பராக இருக்கும். நெய், சர்க்கரை, கடலை மாவு, தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் இந்த இனிப்பு, சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
நெய் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை:
மைசூர் பாக் செய்வதற்கு முதலில் சர்க்கரைப் பாகு தயாரிக்க வேண்டும். ஒரு கடாயில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர், சர்க்கரை கரைந்து பாகு கம்பி பதத்திற்கு வரும்வரை கொதிக்க வைக்கவும். சர்க்கரை பாகு தயாரானதும் அடுப்பை அணைத்து விடவும்.
மற்றொரு கடாயில் கடலை மாவு போட்டு லேசாக வறுக்கவும். இந்த மாவு லேசாக நிறம் மாற வேண்டும் ஆனால் கருகிவிடக்கூடாது. மாவை வறுத்ததும் சிறிது நேரம் அப்படியே ஆறவிடவும்.
நெய்யை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்கவும். பின்னர், அதில் வருத்த கடலை மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். கடலை மாவு நெய்யில் நன்றாகக் கலந்ததும் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின்னர், சர்க்கரை பாகை அந்த கலவையில் ஊற்றி நன்றாகக் கிளறினால், கலவை கெட்டியாக மாற ஆரம்பிக்கும்.
கலவை கடாயில் ஒட்டாமல் வரும்வரை கிளறிக் கொண்டே இருந்தால் அது நன்றாகத் திரண்டு வரும். அப்போது ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இறுதியாக ஒரு தட்டில் நெய் தடவி அதில் மைசூர் பாக் கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். இது நன்றாக ஆறியதும் நீங்கள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.
இந்த தேங்காய் மைசூர் பாக் வீட்டில் செய்வது மிகவும் எளிது. மேலே கொடுக்கப்பட்ட செய் முறையை பின்பற்றி நீங்களும் சுவையான தேங்காய் மைசூர் பாக் தயாரித்து உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்ணுங்கள்.