
வர்ணங்கள் இல்லாத இனிப்பு மற்றும் இதர உணவுகளை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புவதில்லை. லட்டு, ஜிலேபி மற்றும் அல்வா என்று எந்த ஒரு உணவிலும் ஏதாவது ஒரு வர்ணத்தில்தான் விற்பனைக்கு வருகிறது. உணவுப் பொருட்களின் வர்ணத்திற்கு உதவுவது வர்ண சாயங்கள்.
செயற்கை உணவு சாயங்கள் என்பவை, உணவுகள், பானங்கள் மற்றும் மருந்துகள் போன்ற பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் வண்ணமூட்டும் சேர்க்கைகள் ஆகும். இவை இயற்கையான பொருட்களில் இருந்து பெறப்படாமல், இரசாயன முறையில் தயாரிக்கப்படுகின்றன.
சில பொதுவான செயற்கை சாயங்கள் சிவப்பு 40, மஞ்சள் 5 மற்றும் மஞ்சள் 6 ஆகியவை ஆகும். உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அந்த சாயங்கள் உடல் நலனுக்கு தீங்கானது என எட்டு செயற்கை உணவு சாயங்களை பயன்படுத்தி வரகூடாது என்று அமெரிக்க உணவு நலத்துறை அமெரிக்காவில் தடை விதித்துள்ளது. அதேபோல ஐரோப்பிய உணவுத் துறையும் தடை விதித்தள்ளது .
உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட சில செயற்கை உணவு சாயங்களும் அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளும் இங்கே.
1) எல்லோ 5 (Tartra zine): இது சரும அரிப்பு, ஆஸ்துமா, ஆட்டிசம் பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு வரை ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள். சில நேரங்களில் குரல்வளை அழற்சி, மூக்கு ஒழுகுதல், மார்பு சளி, வாந்தி, மூச்சடைப்பு போன்றவைகள் ஏற்படலாம் என்கிறார்கள்.
2) எல்லோ 6 (sun set yellow FCF) : அலர்ஜி பாதிப்பு மற்றும் ஆண்மை குறைவு பாதிப்பு வரை பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமையும்.
3) ரெட் 40 (Red 40): (Allura Red AC): அலர்ஜி பாதிப்பு மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டிக்கு காரணமாகிறது.
4) ரெட் 3 (Red 3): (Erythrosine): தைராய்டு ஹார்மோன்கள் சுரப்பை பாதிக்கிறது, தைராய்டு சதை வளர்ச்சியை தூண்டுகிறது, மூளை பாதிப்பு வரை பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமையும்.
5) ரெட் 10 (Red 10-Carmoisine): இதன் நீண்ட கால பயன்பாடு மரபணு பாதிப்பை ஏற்படுத்தும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும்.
6) புளூ 1(Blue 1-Brillant blue FCF): நியூரோ டாக்ஸிட்டி, குழந்தைகளிடம் ஹைப்பர் தன்மை, ஆட்டிசம் பாதிப்பு, அலர்ஜி, ஆஸ்த்துமா, குடல் சார்ந்த நோய்கள் ஏற்பட காரணமாகிறது.
7) புளூ 2 (Blue 2-indigo carmine): மூளையில் கட்டிகளை உருவாக்கும், பிரைன் கிளியோமாஸ் (gliomas ) எனும் தண்டுவட செல் பாதிப்பை ஏற்படுத்தும்.
8) கிரீன் 3 (Green 3 (Fast Green FCF): சிறுநீரக பாதிப்பு, அலர்ஜி, மரபணு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேற்கூறிய பல உணவு சாயங்களை ஆபத்தானது என்று ஆய்வுகள் கூறினாலும். இன்றும் பலதரப்பட்ட குழந்தைகள் உண்ணும் மிட்டாய்கள் மற்றும் உணவுப் பொருட்கள். குளிர் பானங்கள் மற்றும் பாஸ்ட் புட்கள் போன்றவற்றில் இந்த நிற சாயங்களை கலந்தே விற்பனைக்கு வருகின்றன.
இதில் குறிப்பாக ரெட் 40, எல்லோ 5 மற்றும் 6 எனும் நிற செயற்கை வண்ணங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். அதிலும் குறிப்பாக புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் ரெட் 3 குழந்தைகள் விரும்பும் பபுள்கம் மற்றும் பல்வேறு வகையான சிற்றுண்டிகளில் சேர்க்கப்படுகிறது என்கிறார்கள்.
செயற்கை நிறங்கள் முற்றிலும் ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டு அவை உணவுகளில் பயன்படுத்தப் படுகிறது. ரசாயன முறையில் தயாரிக்கப்படும் செயற்கை நிறங்கள் கொண்ட உணவுகள் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கும்.
மேலும், ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ள குழந்தைகள் இதனை சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கக்கூடும் அபாயம் உள்ளது. அதனால் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது சிறந்தது.