

அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் ஊறவைத்த கச கசாவையும் சேர்த்து அரைத்துப்பயன்படுத்தினால் அவியல் திக்காக இருக்கும். சுவையும் பிரமாதமாக இருக்கும்.
பச்சைப்பயறை காலையில் தண்ணீரில் ஊறவைத்து, மாலையில் தண்ணீரை வடித்துவிட்டு ஹாட் பேகில் போட்டு மூடிவைத்தால் மறுநாள் முளை கட்டியிருக்கும். சுண்டல், சூப், கூட்டு போன்றவை செய்யும்போது இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அரிசி ரவை உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிப் பிசிறி வைத்துக்கொண்டு உப்புமா செய்தால் கட்டி தட்டாமல் பொலபொலவென்று வரும்.
ரவாதோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
பஜ்ஜிமாவில் பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்த்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும். ஓமவல்லி இலைகளைச் சேர்த்தால் பஜ்ஜி வாசனையாக இருக்கும்.
சப்பாத்தி சாப்பிடக் கடினமாக இருந்தால் அதை சிறு துண்டுகளாக்கி, சூடான குருமாவை அதன்மேல் ஊற்றிக்கிளறி அரைமணி நேரத்துக்குப் பிறகு சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
கேரட், பீட்ரூட் ஆகியவற்றை துருவும்போது, துருவும் கட்டையில் சிறிது எண்ணெய் தடவி துருவினால் எளிதில் விழுந்துவிடும்.
எலுமிச்சம்பழத்தை பயன்படுத்திய பிறகு தோலை தூக்கி வீசாமல், அதைத் துண்டுகளாக்கி, ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் தினம் ஒரு துண்டு எலுமிச்சைத்தோல் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைத்தால் குக்கரின் உள்பாகம் கறுக்காமல் இருக்கும்.
பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியும் சூடு செய்து சேர்த்தால் பாதுஷா மிருதுவாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும்.
அரைத்த இட்லிமாவு உளுந்து பற்றாக்குறையால் கெட்டியாகி விடுகிறதா? கவலை வேண்டாம் வறுக்காத அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் ஒரு நிமிடம் அரைத்து, இட்லி மாவுடன் கலந்தால் இட்லி சூப்பராக வரும்.
பூரிக்கு கோதுமை மாவைப் பிசையும்போது ஒரு டேபிள் ஸ்பூன் சோயா மாவு, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துப் பிசைந்து செய்தால் ஹோட்டல் பூரி தோற்றுப்போகும்.
பித்தளைப் பாத்திரங்களை எலுமிச்சைச் சாறு சேர்த்துத் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.