
கொத்தமல்லிப் பொங்கல்
தேவை:
பச்சரிசி - கால் கிலோ
பாசி பருப்பு - 150 கிராம்
கொத்தமல்லி தழை - அரை கப்
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு
சீரகம், மிளகு - தலா ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
வர மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு - 8.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தை எடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி பச்சரிசி, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், மூன்று ஸ்பூன் நெய் ஆகியவற்றை கலந்துகொண்டு, தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்த்து குழைவாக வேகவைக்க வேண்டும்.
அதே சமயத்தில் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை வதக்கி அவை சூடு ஆறி குளிர்ந்த பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குழைவாக வேகவைத்த பொங்கலுடன் இப்போது அரைத்து எடுத்துக் கொண்டவற்றை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரியை பொங்கலில் போட்டு கிளறவும். கண்ணை கவரும் பச்சை வண்ணத்தில் கொத்தமல்லிப் பொங்கல் தயார்.
கொத்தமல்லி ஜூஸ்
தேவை:
இஞ்சி -சிறு துண்டு, கொத்தமல்லி தழை - அரை கப் ,
தேன் - 4 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 1.
செய்முறை:
எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி தழை சேர்த்து அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன், எலுமிச்சைச்சாறு கலந்து பருகவும். சுவையான கொத்தமல்லி ஜூஸ் ரெடி. காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, அஜீரணம் நீங்கும்; நன்கு பசி எடுக்கும்.
*****
கொத்தமல்லி தோசை
தேவை:
தோசை மாவு – 2 கப்,
நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – 2 பல்.
செய்முறை:
முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கலக்கவும்.
இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். இதை தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து சுட்டெடுக்கவும். சுவையான, பச்சை நிற கொத்தமல்லி தோசை தயார்.
கொத்தமல்லி தொக்கு
தேவை:
பச்சைக் கொத்துமல்லி – 1 கட்டு
வர மிளகாய் – 10
கடலைப்பருப்பு – 1 கப்
உளுந்தம் பருப்பு – 1 கப்
பூண்டு – 10 பல்
புளி – சிறு உருண்டை
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை:
வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியை நன்றாக கழுவி எண்ணெய் விட்டு ஈரம் போக வதக்கவும்.
வதக்கிய மல்லியுடன் பூண்டு சேர்த்து நைசாக தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். வறுத்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து நைஸாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
தூளானதும் அரைத்த மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
சுவையான கொத்தமல்லி தொக்கு ரெடி. சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து பருப்பு பொடிபோல சாப்பிடலாம்.