பருப்பு குழம்பு போர் அடிக்குதா? வீடே மணக்கும் தாபா ஸ்டைல் 'தால் ஃப்ரை' - சீக்ரெட் உள்ளே!

Dal fry
Dal fry
Published on

நாம் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடும்போது, பட்டர் நான் அல்லது ஜீரா ரைஸ் ஆர்டர் செய்தாலே, அதற்குத் தொட்டுக்கொள்ள நம் கண்கள் தேடுவது "தால் ஃப்ரை" தான். “தால்" என்றால் பருப்பு, "ஃப்ரை" என்றால் வதக்குவது. வேகவைத்த பருப்பை, நறுமணமிக்க மசாலாக்களுடன் நெய்யில் வதக்கிச் சேர்ப்பதுதான் இதன் சூட்சுமம். மிகக் குறைவான பொருட்களை வைத்து, சரியான பக்குவத்தில் செய்தால், இனி உங்கள் வீட்டிலும் ரெஸ்டாரன்ட் மணம் வீசும். வாருங்கள், அந்தப் பக்குவத்தைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு - ¾ கப்

  • பாசிப்பருப்பு - ¼ கப் 

  • வெங்காயம் - 1 

  • தக்காளி - 2 

  • பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • பூண்டு பற்கள் - 4 

  • மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - ½ டீஸ்பூன்

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்

  • கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

  • நெய் அல்லது வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க

  • உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

முதலில் பருப்பை வேகவைப்பதில்தான் விஷயமே இருக்கிறது. துவரம் பருப்பையும், பாசிப்பருப்பையும் நன்கு கழுவி குக்கரில் போடவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு 3 முதல் 4 விசில் வரும் வரை வேகவிடவும். 

பருப்பு குழைய வெந்திருக்க வேண்டும், அதே சமயம் மாவு போல ஆகிவிடக்கூடாது. வெந்த பருப்பை ஒரு மத்து அல்லது கரண்டியால் லேசாக மசித்துவிட்டு தனியாக வைக்கவும்.

அடுத்ததாக, தாலைத் தாளிக்கலாம். ஒரு கனமான கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் சீரகம் போடவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கவும். தக்காளி மசிந்ததும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது வேகவைத்த பருப்பை இதில் ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.

இதையும் படியுங்கள்:
ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் டிக்கா: வீட்டிலேயே ஈஸியாகச் செய்யலாம்!
Dal fry

இப்போதுதான் ரெஸ்டாரன்ட் சுவைக்கான முக்கியமான "தட்கா" தயார் செய்ய வேண்டும். பருப்பு கொதித்துக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு சிறிய தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். பூண்டு சிவந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து, உடனே அந்தத் தாளிப்பை கொதிக்கும் பருப்பின் மேல் கொட்டவும்.

தாளிப்பைக் கொட்டியவுடனேயே பாத்திரத்தை ஒரு மூடி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும். அப்போதுதான் அந்த நெய் மற்றும் பூண்டின் வாசனை வெளியே போகாமல் பருப்பில் இறங்கும். கடைசியாக மூடியைத் திறந்து, கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தியை கசக்கித் தூவவும்.

இதையும் படியுங்கள்:
ஒரே செடியில் மேலே தக்காளி, கீழே உருளைக்கிழங்கு: இதென்ன அதிசயம்?
Dal fry

மேலே நிறைய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கவும். சுடச்சுட ஜீரா ரைஸ் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால், "இன்னும் கொஞ்சம் வேண்டும்" என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com