

தீபாவளி குஷியில் மீந்து போன அத்தனையையும் அப்படி அப்படியே வைத்துவிட்டு விருந்தினர்களை கவனிப்போம். அதன் பிறகு ஒவ்வொரு பாத்திரத்திலும் மீந்து போன பொருட்களை பார்க்கும் பொழுது இதை தீர்ப்பது எப்படி என்று கவலைத் தொற்றிக் கொள்ளும்.
அப்பொழுது மீண்டு போன கார இனிப்பு வகைகளை அந்தந்த இனிப்பு கார வகைகளுடன் சேர்த்து வேறு விதமாக புது மாதிரியான பலகாரம் செய்து கொடுத்தால் வீட்டினர் விரும்பி சாப்பிடுவார்கள். நமக்கும் வீணாக்காமல் செய்த திருப்தி கிடைக்கும். தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வீட்டில் மீதமாகும் லட்டு, மைசூர் பாகு, பூந்தி, பாதாம் லட்டு போன்ற இனிப்புகளை, மிக எளிமையாக வேறு சுவையான 4 புதிய பலகாரங்களாக (Makeover Recipes) மாற்றும் அசத்தலான ஐடியாக்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
1. லட்டு கேக் செய்முறை:
தீபாவளிக்கு நம் வீட்டில் செய்து உதிர்ந்தது மற்றவர்கள் செய்து வந்து கொடுத்தது போன்ற மீதமிருக்கும் பூந்தி லட்டுகளை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் திணை மற்றும் கோதுமை மாவை அரைக்கப் சேர்த்து, பேக்கிங் சோடா, காய்ச்சிய பால் மற்றும் உருக்கிய நெய், வெள்ளரி, பூசணி விதைகளை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் போதுமான அளவு இனிப்பு உள்ளதால் சர்க்கரை சேர்க்க தேவையில்லை.
இப்படி கலந்த மாவை குக்கரில் உள்ள இட்லி தட்டுகளில் அல்லது விரும்பிய அழகான கப்புகளில் நெய்யைத் தடவி வைத்துச் சுட்டெடுத்தால், அருமையான "லட்டு கேக் அல்லது கப் கேக்" தயார்! குக்கர் தட்டை விரும்பாதவர்கள் தட்டையான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த மாவை ஊற்றி குக்கரில் வேகவைத்து எடுத்து ஆறவிட்டு கட் செய்து சாப்பிடலாம்.
2. ரவா கேசரி மற்றும் ஹல்வா செய்ய வேண்டியது:
மிஞ்சிய மைசூர் பாகு, பால்கோவா அல்லது ஒன் டூ த்ரீ பர்பி, பால் பாதாம் லட்டு வகைகள் மீந்து போய் கட்டியும் துகள்களாக இருந்தால் அவற்றை எல்லாம் ஒன்றாக எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றிப் பொடித்துக் கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு நெய் ஊற்றி, அதில் தேவையான அளவு கோதுமை மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்தப் பொடித்த இனிப்புக் கலவையைக் கலந்து, தேவையான அளவு பால் ஊற்றிக் கிளறி சிறிதளவு நெய் சேர்த்தால், அருமையான சுவையில் புதிய ஹல்வா உடனடியாகத் தயாராகிவிடும்.
இதற்கு கட்டாயமாக இனிப்பை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் இந்த பொருட்களில் இனிப்பு அதிகமாக இருக்கும். விரும்பினால் நட்ஸ் ஃப்ளேக்ஸ் மேலே தூவி பரிமாறலாம். மேலே உள்ள இனிப்பு பொருட்களில் நட்ஸ் வகைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதால் அதை தவிர்த்து குங்குமப் பூவை தூவியும் பரிமாறலாம். பார்ப்பதற்கு அழகாகவும் சுவைப்பதற்கு அருமையாகவும் இருக்கும்.கேசரியை அதிகம் விரும்புபவர்கள் 1/2 கப் ரவையை வறுத்து தண்ணீரில் வேக வைத்து அதனுடன் மேலே கூறிய பொருட்களை சேர்த்து கொஞ்சம் நெய் விட்டு நன்றாக கிளறி கேசரியாக செய்து பரிமாறலாம்.
3. இனிப்பு சோமாசா மற்றும் பிரெட் ரோல் செய்முறை:
மீதமுள்ள ரவாலட்டு, வறுத்த பாதாம் பருப்பு லட்டு போன்ற இனிப்பு வகைகளை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு துருவிவறுத்த தேங்காய், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்துப் பூரணம் போல் தயார் செய்து கொள்ளவும்.மைதா மாவில் சிறிதளவு ரவை மற்றும் நெய் சேர்த்து மாவைச் சப்பாத்தி மாவு போலப் பிசைந்து, சிறிது நேரம் மாவை ஊற விடவும்.
பின்னர் அதில் இந்தத் தித்திப்புப் பூரணத்தை வைத்துச் சோமாசா (Somasa) போலச் செய்து பொரித்து எடுக்கலாம். அல்லது பிரெட் துண்டுகளுக்குள் இந்தப் பூரணத்தை வைத்துத் திரட்டி நெய்யில் டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம். இது குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்! சப்பாத்தி மாவுக்குள் இதைத் தூவி மடித்து இனிப்பு பரோட்டாவாகவும் செய்து கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
4. ஐஸ்கிரீம் டாப்பிங் மற்றும் மில்க் ஷேக் செய்முறை:
குறைவாக மீதமுள்ள லட்டு, மைசூர் பாகு போன்றவற்றை மிக்சியில் பொடியாகப் பொடித்துக் கொள்ளவும். கூடவே சிறிதளவு நட்ஸையும் எடுத்துக் கொண்டு, ஸ்ட்ராபெரி பழத்தை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.வீட்டில் வெண்ணிலா ஐஸ்கிரீம் (Vanilla Ice Cream) இருந்தால், அதை அட்ராக்ட்டிவ் ஆன ஒரு கப்பில் எடுத்து அதன் மேலே இந்தப்பொடி மற்றும் நட்ஸைத் தூவி பழத்தை சொருகி பரிமாறலாம்.
ஐஸ்கிரீம் ரிச் ஆக மாறிவிடும். இந்த அழகான ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் உண்டோ? உடனே காலி ஆகிவிடும்.இன்னும் எளிமையாக சட்டென்று செய்ய வேண்டுமானால் ஆறிய பாலுடன் இந்த இனிப்புகளையும் சேர்த்து மிக்சியில் அடித்துச் செய்தால் அருமையான "டிரெடிஷனல் மில்க் ஷேக்" (Traditional Sweet Milkshake) தயார்!
அருமையான மில்க் ஷேக்கை அசத்தலாக செய்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.இதுபோல் மீந்து போன பலகாரங்களை குப்பையில் தூக்கி போடாமல் நம் கற்பனைக்கு தகுந்த மாதிரி பலகாரங்களை செய்து வீட்டினருக்கும், சாப்பிடும் பொழுது யாராவது வந்தால் அவர்களுக்கும் கொடுத்து மகிழலாம்.
தீபாவளிக்குச் செய்த பலகாரங்கள் வீணாகிவிடுமோ என்ற கவலையைப் போக்கி, குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் புதிய சுவையில் அசத்தலான பலகாரங்களை எளிதாகத் தயாரிக்கும் வழியை அறிந்துகொள்ளலாம்.