தீபாவளி ஸ்பெஷல் சோமாஸ்: மொறுமொறுப்பான சுவையில் செய்ய ஈஸியான வழி!

எண்ணெய்ல போட்டதும் உடைந்து விடுகிறதா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்!
சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil
சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி என்றாலே வீட்டில் பலகாரங்கள் செய்வதில் தனி உற்சாகம் இருக்கும். முறுக்கு, அதிரசம், லட்டு எனப் பலகாரங்கள் வரிசையில் இருந்தாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இனிப்பு வகைகளில் சோமாஸுக்கும் தனி இடம் உண்டு. மொறுமொறுப்பான வெளிப்புற மாவுக்குள் இனிப்பான தேங்காய் பூரணம் வைத்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கும் சோமாஸின் சுவையே அலாதிதான்.

முன்பெல்லாம் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே வீட்டில் உள்ள பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து சோமாஸ் செய்வார்கள். ஒருவர் மாவு தேய்க்க, இன்னொருவர் பூரணம் வைக்க, மற்றொருவர் ஓரங்களை அழுத்தி ஒட்ட எனக் கலகலப்பாக வேலை நடக்கும்.

ஆனால் சோமாஸ் செய்யும்போது சிலருக்கு ஏற்படும் பெரிய கவலை, எண்ணெயில் போட்டதும் சோமாஸ் உடைந்து பூரணம் வெளியே வந்துவிடுவதுதான். சில நேரங்களில் உப்பாமல், கடினமாகவும் வந்துவிடும்.

சோமாஸ், சந்திரகலா, சூரியகலா!

சோமாஸ் என்பது தென்னிந்திய வீடுகளில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு. மைதா அல்லது கோதுமை மாவில் வெளிப்புற உறை தயாரித்து, அதற்குள் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய், பொட்டுக்கடலை போன்றவற்றைக் கலந்து செய்த பூரணத்தை வைத்து அரை வட்ட வடிவில் மடித்து ஓரங்களை நன்றாக ஒட்டி எண்ணெயில் பொரிப்பார்கள். சிலர் சோமாஸ் நன்றாக உப்பி வரும்படி செய்வார்கள்.

இதே போன்ற இனிப்பு வகைகளே வடஇந்தியாவில் சந்திரகலா, சூரியகலா என்ற பெயர்களிலும் பிரபலமாக உள்ளன. சந்திரகலா பொதுவாக அரை வட்ட வடிவிலும், சூரியகலா வட்ட வடிவிலும் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் பூரணம் மற்றும் தயாரிக்கும் முறையில் இடத்துக்கு இடம் வேறுபாடுகள் இருக்கும். பெயர்கள், வடிவங்கள் மாறினாலும் இனிப்பான பூரணத்தை மாவுக்குள் வைத்து தயாரிக்கும் முறையில் ஒற்றுமை உண்டு.

சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil
சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil

சோமாஸ் செய்வதற்குத் தேவையான பொருட்கள்:

வெளிப்புற மாவுக்கு:

மைதா – 2 கப்

ரவை – 2 டேபிள்ஸ்பூன்

நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

பூரணம் செய்ய:

துருவிய தேங்காய் – 1 கப்

பொட்டுக்கடலை – ½ கப்

சர்க்கரை – ¾ கப்

ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன்

முந்திரி – 10

திராட்சை – சிறிதளவு

நெய் – 1 டீஸ்பூன்

பொரிப்பதற்கு:

எண்ணெய் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய முறையில் மணக்க மணக்கச் சுவையான அதிரசம் செய்வது எப்படி?
சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil

பாரம்பரிய சோமாஸ் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலக்கவும். அதனுடன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து மாவில் நன்றாகப் பிசையவும். பின்னர் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவைவிடச் சற்றுக் கெட்டியாகப் பிசைந்து மூடி 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

இப்போது பூரணம் தயாரிக்கலாம். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் துருவிய தேங்காயைப் போட்டு ஈரப்பதம் போகும் வரை லேசாக வதக்கவும். தேங்காய் நிறம் மாறிவிடக் கூடாது.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக வதக்கிய தேங்காயையும் சேர்த்து நன்றாகக் கலந்தால் சுவையான பூரணம் தயார்.

ஊறவைத்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிரிக்கவும். ஒவ்வொரு உருண்டையையும் சிறிய பூரி அளவுக்குத் தேய்த்து, நடுவில் தேவையான அளவு பூரணம் வைக்கவும். மாவின் ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி

அரை வட்டமாக மடித்து, ஓரங்களை விரல்களால் அழுத்தி ஒட்டவும். விருப்பப்பட்டால் சோமாஸ் கரண்டியால் ஓரங்களை அழகாக வெட்டிக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மிதமான சூட்டில் சோமாஸைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்கள் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil

சோமாஸ் உடையாமல், பூரணம் வெளியே வராமல் இருக்க 4 முக்கிய குறிப்புகள்!

1. மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும்

மாவு மிகவும் இளக்கமாக இருந்தால் சோமாஸ் எண்ணெயில் போடும்போது பிரிந்துவிடும். மிகவும் கெட்டியாக இருந்தாலும் ஓரங்களை ஒட்டுவது சிரமமாக இருக்கும். எனவே சப்பாத்தி மாவைவிடச் சற்றுக் கெட்டியான பதத்தில் பிசைந்து குறைந்தது 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

2. பூரணத்தில் ஈரப்பதம் இருக்கக் கூடாது

தேங்காயை அதிக நேரம் வதக்க வேண்டியதில்லை. அதிலுள்ள ஈரப்பதம் மட்டும் போனால் போதும். பூரணம் ஈரமாக இருந்தால் பொரிக்கும்போது ஆவி உருவாகி சோமாஸ் வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே பூரணத்தை நன்றாக ஆறவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

3. ஓரங்களை நன்றாக ஒட்டவேண்டும்

பூரணத்தை அளவுக்கு அதிகமாக வைக்கக் கூடாது. ஓரங்களில் சிறிது இடம் விட்டு, தண்ணீர் தடவி நன்றாக அழுத்தி ஒட்ட வேண்டும். ஓரங்களில் சிறிதளவுகூட இடைவெளி இருந்தால் எண்ணெயில் போட்டதும் பூரணம் வெளியே வந்துவிடும். விருப்பப்பட்டால் சோமாஸ் கரண்டியால் ஓரங்களை அழுத்தி வடிவமைக்கலாம்.

4. எண்ணெய் சூடு மிதமாக இருக்கவேண்டும்

எண்ணெய் மிகவும் சூடாக இருந்தால் வெளிப்புறம் உடனே சிவந்துவிடும்; உள்ளே சரியாக வேகாது. எண்ணெய் போதுமான அளவு சூடானதும் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் சோமாஸைப் பொரிக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே வரை நன்றாக வெந்து, வெளியே மொறுமொறுப்பாக வரும்.

தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து மகிழுங்கள்!

சில சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே கடைகளில் வாங்குவதைவிடச் சுவையான சோமாஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்குப் பிடித்தமான இந்த இனிப்பை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து செய்து, தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த விஷயத்தை செய்ய மறந்தா பெரிய ஆபத்து!
சோமாஸ் செய்முறை - Somas recipe in Tamil