
கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற ரெச காளன் (Rasa kaalan) என்பது குருவாயூர் கோயிலில் செய்யக்கூடிய பிரசாதம் ஆகும். இதில் தயிர், புளி மற்றும் எந்த காய்கறி வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இங்கு வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி மற்றும் முருங்கைக்காய் சேர்த்து செய்வோம்.
ரெச காளன் (Rasa kaalan)
தேவையானவை:
வெள்ளைபூசணி _150 கிராம்
மஞ்சள்பூசணி _150 கிராம்
முருங்கைக்காய் _150 கிராம்
புளித்தண்ணீர் _1கப்
மஞ்சள்தூள் _1/2 ஸ்பூன்
உப்பு _ தேவையான அளவு
மோர் _1 கப்
தேங்காய்துருவல் _1 கப்
பச்சைமிளகாய் _2
பொடித்த வெல்லம் _2 ஸ்பூன்
கருவேப்பிலை _1 கீத்து
வறுக்க:
வெந்தயம் _1/2 ஸ்பூன்
முழு நல்லமிளகு _3/4 ஸ்பூன்
பச்சரிசி _1 ஸ்பூன்
வரமிளகாய் _5
செய்முறை: முதலில் காய்களை தோல் சீவி சுத்தப்படுத்தி துண்டுகளாக நறுக்கவும். ஒரு குழிவான கடாயை எடுத்து அதில் நறுக்கிய பூசணி துண்டுகள், புளித்தண்ணீர் மற்றும் காய் வேக தேவையான தண்ணீர் வட்டு, மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு அடுப்பில் வைத்து வேகவைக்கவும்.
அது வேகும் வேளையில் ஒரு வாணலியில் வறுக்க கொடுத்திருக்கும் பொருட்களை சேர்த்து மிதமான தீயில் கருகி போகாமல் வறுத்துக் கொள்ளவும். இறுதியில் வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவிடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்தப் பொருட்கள், பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வேகவைத்த பூசணிக்காய் முக்கால்வாசி வெந்ததும் முருங்கைக்காய் சேர்த்து வேகவைத்து அரைத்த மசாலாவை சேர்த்து கருவேப்பிலை போட்டு நன்கு கொதிக்கவிடவும். கொதித்ததும் வெல்லத்தூள் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு பின்னர் தீயை சிறுக வைத்து இறுதியாக மோர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். பின்னர் தேங்காய் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்.
சமைத்து பாருங்கள், இதன் சுவையின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.
ரேகி கைமணி புட்டு
ரேகிமாவு _ 2 கப்
உப்பு _1/2 ஸ்பூன்
சர்க்கரை _1 ஸ்பூன்
நெய் _1 ஸ்பூன்
தேங்காய்துருவல் _11/2 கப்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ரேகிமாவு, உப்பு, சர்க்கரை, நெய் இவற்றுடன் ½ கப் தேங்காய் துருவலை அரைத்து சேர்த்து கை வைத்து நன்கு கலந்துவிட்டு கொதித்த சுடு தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி ஒரு கரண்டியால் கிண்டி விடவும். பின்னர் ½ மணி நேரம் மூடி வைத்து ஊறவிடவும். நன்கு ஆறியதும் கைவிட்டு நன்கு பிசைந்து மிருதுவாக வரும் வேளையில் உருட்டி வைத்து விட்டு பின்னர் ஒரு விரிவான பாத்திரத்தில் ரேகிமாவைத்தூவி அதன் மேல் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி பரத்தி வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் துண்டு வாழை இலை விரித்து அதன் மேல் தேங்காய் துருவல் பரத்தி மேலே ரேகி உருண்டைகளை போட்டு வைக்கவும்.
பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து ரேகி உருண்டை இருக்கும் பாத்திரத்தை உள்ளால் வைத்து ஆவியில் வேகவைக்கவும். வெந்ததும் தனியாக பாத்திரத்தில் எடுத்து அதன் மேல் சர்க்கரை, நெய் சேர்த்து கரண்டியால் நன்கு கலந்துவிட்டு சாப்பிட தயாராகி விடலாம். சுடச்சுட சாப்பிட ரேகி கைமணி புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.