

1. கர்நாடகா ஸ்பெஷல் தார்வாட் பேடா (Dharwad Peda):
பால் - 1 லிட்டர் (முழு கொழுப்புள்ள பால்)
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன்
கோவா - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடிகனமான வாணலியில் பாலை விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து காய்ச்சவும். பால் நன்கு சுண்டி கோவா பதம் வரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும். பால்கோவா பதத்திற்கு வந்ததும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பை பெரிதாக எரியவிடாமல் மிதமான சூட்டில் வைத்துக் கிளறும்போது இதன் நிறம் பழுப்பு நிறமாக மாறிவரும். இதனுடன் நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும்.
இந்தக் கலவை நன்கு ஆறியதும் மிக்சியில் சேர்த்து ஒருமுறை லேசாக ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். அதிகம் அரைக்கக்கூடாது. இதனை மீண்டும் வாணலியில் போட்டு இரண்டு நிமிடம் சூடாக்கி, கைகளில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த உருண்டைகளை சிறிது சர்க்கரைப் பொடியில் புரட்டி எடுக்க மிகவும் ருசியான தார்வாட் பேடா தயார்.
2. காஜூ பிஸ்தா ரோல்:
காஜு (முந்திரி) மாவின் வெளிப்புற அடுக்கிற்குள் சுவையான பிஸ்தா கலவையை வைத்து உருட்டி செய்யப்படும் ஒரு பிரீமியம் இனிப்பு வகையாகும். ரிச் லுக் தரும் இதனை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.
வெளிப்புற அடுக்குக்கு:
முந்திரி பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்
பிஸ்தா கலவைக்கு:
பொடித்த பிஸ்தா - 1/2 கப்
சர்க்கரைப் பொடி - 2 ஸ்பூன்
பச்சைக் கலர் (விருப்பப்பட்டால்) -1 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். அதில் அரைத்து வைத்துள்ள முந்திரிப் பொடியை சேர்த்து கைவிடாமல் கிளறிவிடவும். இதில் சிறிது நெய் சேர்த்து மாவு பதம் வந்ததும் இறக்கி ஆறியதும் கையால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பொடித்த பிஸ்தாவுடன் சர்க்கரைப் பொடி, பால் மற்றும் விருப்பப்பட்டால் பச்சைக் கலர் பொடி சிறிது சேர்த்து சப்பாத்தி மாவுபோல பிசைந்து கொள்ளவும்.
முந்திரி மாவை மெல்லிய சப்பாத்திபோல தேய்த்து, நடுவில் பிஸ்தா கலவையை நன்கு பரப்பி விடவும். முந்திரி மாவால் பிஸ்தா ரோலைச் சுற்றி உருட்டி மூடி நீளமான உருண்டையாகச் செய்யவும். பின்னர் இதை விரும்பிய அளவில் (சுமார் 2 அங்குலம்) துண்டுகளாக வெட்டினால் ருசியான காஜு பிஸ்தா ரோல் தயார். செய்வது சுலபம். ருசியோ அபாரம்.
விரும்பினால் இதன் மேல் சில்வர் வார்க் கொண்டு அலங்கரிக்கலாம்.
தீபாவளி நம்கின் என்பது தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகளுக்கு இணையாக செய்யப்படும் மொறு மொறுப்பான பாரம்பரிய காரப்பலகாரங்கள் ஆகும். இதனை கார பட்சணங்கள் என்றும் சொல்வதுண்டு.
3. தீபாவளி ஸ்பெஷல் சக்லி:
அரிசி மாவு - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வெண்ணெய் (அ) சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஓமம் அல்லது எள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையானது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, ஓமம் அல்லது எள் அவரவர் ருசிக்கேற்ப, மிளகாய்த் தூள், பெருங்காயப்பொடி, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் வெண்ணெய் அல்லது காய்ச்சிய சூடான எண்ணெயை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, முறுக்கு அச்சில் (ஒற்றை நட்சத்திர அச்சு) மாவை நிரப்பி எண்ணெய் காய்ந்ததும் சுருள் வடிவில் பிழியவும். சக்லி இருபுறமும் வெந்து, எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் எடுத்து பத்திரப்படுத்த ருசியான மகாராஷ்டிரா ஸ்பெஷல் சக்லி தயார்.
ஒரே தொகுப்பில் இனிப்பும் காரமும் சேர்ந்த கலவையைக் கற்றுக்கொண்டு அசத்தலாம்.