

தீபாவளி என்றாலே பட்சணங்களும், வெடிகளும் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் நம் வீட்டில் பலகாரங்களை செய்யும்போது சில ஐடியாக்களை தெரிந்துகொள்ள, சுவை கூட்ட அவை உதவியாக இருக்கும்.
முறுக்கு, நாடா பக்கோடா, ஓமப்பொடி போன்ற கார வகைகளை செய்ய, உப்பு தண்ணீர், பிரண்டை ஊறிய தண்ணீர், பெருங்காயம் ஊறிய தண்ணீர், வெண்ணெய், இவற்றை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, சீரகம், ஓமத்தை கையால் தேய்த்து சேர்த்து மாவை பதமாக பிசைந்து கொள்ளவும்.
எல்லா மாவையும் ஒன்றாக திறந்து வைத்துக் கொள்ளாமல் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து முறுக்கு பிழிந்து கொண்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கரகரப்பான முறுக்கை ஆறியதும் பட்டர் பேப்பர் போட்டு பாத்திரத்தில் அடுக்கி இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்க சுவை மாறாமல் இருக்கும்.
நம் வீட்டு பட்சணங்கள் தனித்து தெரிய எல்லா இனிப்பு பலகாரங்களை சர்க்கரையிலேயே செய்யாமல், நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி என கலந்து தயாரிக்க சுவையாக இருக்கும்.
விதை நீக்கிய பேரீச்சம்பழம் எடுத்துக்கொண்டு அதனுடன் பொடித்த பாதாம், முந்திரி, சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்து கெட்டியாக வதக்கவும். இனிப்பு அதிகம் வேண்டுமெனில் பவுடர் சுகர் அரை கப் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும். இதை பட்டர் பேப்பரில் ரோல் செய்து அதன் மேல் கசகசா, வெள்ளரி விதை பரப்பி குளிரவைத்து பின் வட்டமாக கட் செய்து பரிமாற எளிமையான டேட்ஸ் அன்ட் நட்ஸ் ரோல் சுவைக்க அருமையாக இருக்கும்.
கார்ன்ஃப்ளேக்ஸை சிவக்காமல் பொரித்து பாத்திரத்தில் போடவும். சற்று ஆறியதும் அதனுடன் பவுடர் சுகர், சீரக மிட்டாய், வேர்க்கடலை சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைக்க சுவையான ஸ்வீட் மிக்ஸர் தயார்.
அதிரசம் மாவு தயாரிக்க சிறுதானிய அரிசி மாவில் வெல்லப் பாகை விட்டு ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து நன்கு பதமாக கிளறி வைக்கவும். பின் மாவை அதிரசமாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
எண்ணையை வடிகட்ட சட்டுவத்தை உபயோகித்து மெதுவாக எண்ணையை அழுத்தி எடுத்து விட்டு மேலாக வெள்ளை எள், கசகசா தூவி தாம்பாளத்தில் அடுக்கி ஆறியதும் டப்பாவில் எடுத்து வைக்க நன்றாக இருக்கும்.
கடலைமாவை வறுத்துக் கொண்டு அதனுடன் பாதாம் பவுடர்-1 டேபிள் ஸ்பூன், முந்திரிப் பவுடர்-1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து நெய் விட்டு மைசூர்பாகு தயாரிக்க ரிச்சாக சுவையான மைசூர் பாகு சுவையில் அபாரமாக இருக்கும்.
கார வகைகள் செய்கையில் ஓமத்தை அரைத்தோ, பொடித்தோ சேர்த்துக்கொள்ள சுவையாகவும், செரிமானத்திற்கும் நல்லது.
இனிப்பு வகைகள் செய்யும்போது எசென்ஸ்க்கு பதிலாக பச்சை கற்பூரம்-2 சிட்டிகை, ஜாதிக்காய் -1/2 டீஸ்பூன், ஏலக்காய்-4, கிராம்பு-2, ஐ பொடித்துவைத்துக் கொண்டு அதை சேர்க்க சுவை, மணம் அதிகரித்து பட்சணத்தின் டேஸ்டை அதிகரிக்கும்.
பட்சணங்களை செய்து முடித்த பின் நன்கு ஆறியதும் பட்டர் பேப்பர் போட்டு அதில் இடைவெளி விட்டு அடுக்கி டைட்டான மூடி போட்டு மூடி வைக்க கரகரப்பு மாறாமல் இருக்கும்.
சிறுதானிய வகைகளில் பலகாரம் செய்யும்போது ஒரே விதமான தானியத்தை பயன்படுத்த சுவை நன்றாக இருக்கும்.
பெரியவர்கள், சுகர் பேஷண்ட் உள்ள வீட்டில் அவர்களுக்கென சர்க்கரை, உப்பு குறைவாக பட்சணங்கள் தனியாக செய்துவைக்க அவர்களும் சாப்பிட சௌகரியமாக இருக்கும்.
நவதானியத்தை பொரித்து அதனுடன் காரம், உப்பு, பொரித்த கருவேப்பிலை, தட்டிய பொரித்த பூண்டு, மேலாக ஆம்ச்சூர் பவுடர் தூவி கலந்துவைக்க நவதானிய மிக்சர் சுவையில் அசத்தும்.
கேரட், பாதாம், பூசணியில் அல்வா செய்யும்போது அவற்றை பாலில் குழைய வேகவைத்து கொண்டு பின் சர்க்கரை சேர்த்து கரைத்து சேர்ந்து வரும்போது கோவா, நெய்1 கப் தேவையெனில் பார்லி வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு சுருண்டு பளபளப்பாக வரும்போது பாலில் ஊறவைத்த குங்குமப்பூ ஊற்றி இறக்க சுவையான அல்வா சுவைக்க நன்றாக இருக்கும்.
தீபாவளி பலகாரங்களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், ஏப்பம் இருக்கும். இதற்கு திரிபலா சூரணம் அல்லது தீபாவளி லேகியம் தயாரித்து ஒரு உருண்டை இனிப்பு சாப்பிடும் முன் சாப்பிட வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.
ஒவ்வொரு பலகாரமும் எதிர்பார்த்த சுவையையும் சரியான பக்குவத்தையும் பெற இந்த எளிமையான சமையல் ரகசியங்கள் உதவும்.