

கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம்
திருக்கார்த்திகை என்பது தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது கார்த்திகேயன் அதாவது தமிழ் கடவுளான முருகனின் பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளில் இறைவனுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய பலகாரங்களான நெல்பொரி உருண்டை, அவல் பொரி உருண்டை மற்றும் நெய் அப்பம் ஆகியவற்றை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நெல்பொரி உருண்டை:
நெல்பொரி 4 கப்
வெல்லம் 1 கப் (பொடித்தது)
தண்ணீர் 1/4 கப்
துருவிய தேங்காய் (அ) தேங்காய் துண்டுகள் 2 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் 1 ஸ்பூன்
சுக்குத்தூள் 1/4 ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
நெல்பொரியில் உள்ள உமி அல்லது தூசுகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து தனியாக வைக்கவும். வாணலியில் நெய் விட்டு மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஏலக்காய், சுக்கு ஆகியவற்றைப் பொடித்து தயாராக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை சூடாக்கி கல், மண் போக வடிகட்டவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து பாகுப் பதம் வரும் வரை காய்ச்சவும். ஒரு சிறு கப்பில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் இரண்டு சொட்டு வெல்லப்பாகை விட அது கரையாமல் கெட்டியாக உருண்டு வரவேண்டும். இதுதான் சரியான பதம்.
அதில் ஏலக்காய் தூள், சுக்குப் பொடி, வறுத்த தேங்காய் மற்றும் நெல்பொரியை சேர்த்து அடுப்பு அணைத்துவிட்டு நன்றாகக்கிளறவும். கைகளில் லேசாக நெய்யை தடவிக் கொண்டு சூடு பொறுக்கும் பதத்தில் பொரியை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும். நெல்பொரி உருண்டை தயார்.
அவல் பொரி உருண்டை:
அவல் பொரி 4 கப்
வெல்லம் 1 கப் (பொடித்தது)
தண்ணீர் 1/4 கப்
பொட்டுக்கடலை 1 கைப்பிடி
தேங்காய் துண்டுகள் 1/4 கப் ஏலக்காய்த்தூள் 1 ஸ்பூன்
சுக்குத்தூள் 1/2 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த அவல் பொரி, பொட்டுக்கடலை மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளை ஒன்றாகக் கலந்துவைக்கவும்.
வாணலியில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகுபதம் வந்தவுடன் ஏலக்காய் தூள், சுக்குத்தூள் சேர்த்து தயாராக வைத்துள்ள அவல் பொரி கலவையில் வெல்லப்பாகை விட்டு நன்கு கிளறவும். சிறிது சூடாக இருக்கும் பொழுதே கையில் நெய்யை தொட்டுக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு: சிலர் நெய்க்கு பதில் தண்ணீர் தொட்டுக் கொண்டு பிடிப்பார்கள். இப்படி செய்தால் பொரி உருண்டைகள் நமுத்துப் போய்விடும். நெய்யை தொட்டுக்கொண்டு பிடிப்பதே சரியான முறை.
பொரி உருண்டைகள் மொறுமொறுப்பாகவும் உடையாமலும் வருவதற்கு கெட்டிப் பாகு பதம் அதாவது உருட்டு பதம் மிகவும் அவசியம்.
நெய்யப்பம்:
பச்சரிசி 1 கப்
வெல்லம் 3/4 கப்
வாழைப்பழம் 1
துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் பொரிப்பதற்கு
பச்சரிசியை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவும். வெல்லத்தைப் பொடித்து 3/4 கப் எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.
ஊறவைத்த பச்சரிசியை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் கரைத்து வடிகட்டிய வெல்லப்பாகு, மசித்த வாழைப்பழம், துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பணியாரக் கல்லில் (அப்பக்காராவில்) ஒவ்வொரு குழியிலும் அரை ஸ்பூன் நெய் விட்டு மாவைக் குழிகளில் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். நன்கு வெந்ததும் குச்சியால் திருப்பிப் போட்டு பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.
வெல்ல அடை:
கார்த்திகை தீபத்திற்கென்றே ஸ்பெஷலாக சுவாமிக்கு நைவேத்தியமாக செய்யப்படும் பாரம்பரியமான வெல்ல அடை இது.
பச்சரிசி 1/2 கப்
துவரம் பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
நெய் அடை வார்ப்பதற்கு தேவையான அளவு
பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். ஊறிய அரிசி, பருப்பை அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் லேசாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைத் துருவி எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தில் கல், மண், தூசி இல்லை என்றால் நேரடியாக மாவில் போட்டு நன்கு கலந்துவிடலாம். இல்லையெனில் அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர்விட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் சேர்க்கவும். அரைத்த அடை மாவில் சுவையைக் கூட்டுவதற்கு ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை கல்லில் சிறிது தடிமனான தோசையாக வார்த்து சுற்றிலும் நெய் விட்டு, நடுவில் ஓட்டை போட்டு (அப்போதுதான் நன்கு வேகும்) அங்கும் நெய் விட்டு வார்க்கவும். இரண்டு பக்கமும் நன்கு சிவந்து பொன்னிறமானதும் எடுத்து விட ருசியான வெல்ல அடை தயார்.