

1. பாசிப்பருப்பு பர்ஃபி
தேவையான பொருட்கள்:
வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3/4 கப்
செய்முறை:
சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும். கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும். உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு வில்லைகள் போடவும். சூப்பர் சுவையில் பாசிப்பருப்பு பர்ஃபி ரெடி.
2. பாசிப்பருப்பு முறுக்கு
தேவையான பொருட்கள்:
வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 2 கப்
ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு - 5 கப்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1/2 டீ ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
தேவையான - உப்பு
வறுக்கத் தேவையான எண்ணெய்
செய்முறை:
பாசிப்பருப்பு மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயப் பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். மொறு மொறு பாசிப்பருப்பு முறுக்கு தயார்.
3. பைனாப்பிள் பூந்தி
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - ஒரு கப்,
சர்க்கரை - ஒன்றேகால் கப்,
சோடா - ஒரு சிட்டிகை,
பைனாப்பிள் ஜூஸ் - கால் கப்,
பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
ஒரு சுத்தமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை ஆகியவை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெயை சூடானதும், பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும்.
முக்கால் பதம் பூந்தி வெந்ததும் வெளியே எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பாகில் நன்றாக ஊறியதும் பரிமாறவும். சுவையான பைனாப்பிள் பூந்தி ரெடி.
4. தேங்காய்பால் ஜாமூன்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 200 கிராம்,
புழுங்கல் அரிசி - 100 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 4,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - சுட தேவையான அளவு.
செய்முறை:
தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். ஏலக்காயை பொடி செய்யவும்.
சர்க்கரை, தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும்.
அரிசியும் பாசிப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக, நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை தேங்காய் பாலில் 1 மணி நேரம் ஊறவைத்து பரிமாறவும். வித்தியாசமான சுவையில் தேங்காய்ப் பால் ஜாமூன் ரெடி.
5. பைனாப்பிள் பாயாசம்
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் துண்டுகள்- 1 கப்
பச்சரிசி - 1 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
பாதாம் , முந்திரி - தலா 10
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலை நீக்கி நைசாக அரைக்கவும். பச்சரிசியை வாணலியில் வறுத்து ரவை போல பொடிக்கவும். அன்னாசி பழத் துண்டுகளை அரைத்து சாறு எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் மூன்று கப் நீரை விட்டு கொதிக்கவிடவும். அதில் அரிசி ரவையைத் தூவி கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் விழுது, நெய், பைனாப்பிள் சாறு கலந்து கிளறி இறக்கி வைக்கவும். சுவையான, புதுமையான பைனாப்பிள் பாயாசம் தயார்.
ஒரே தொகுப்பில் பல வகையான புதிய மற்றும் பாரம்பரிய பலகாரம் செய்து அசத்தும் வாய்ப்பை பெறுகின்றனர்.