

1. பிள்ளையார் பிடித்து:
தீபாவளிக்கு பட்சணங்கள் செய்ய ஆரம்பிக்கும்போது முதலில் பிசைந்த மாவில் சிறிது மாவை எடுத்து கையால் பிள்ளையார் பிடித்து வைத்து, பண்டிகை சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு ஆரம்பிக்க வேலை சுலபமாக முடியும். முடிந்ததும் மாவுப் பிள்ளையாரை சிறிது தண்ணீரில் கரைத்து விடவும்.
2. லட்டு பூந்தி:
ஒரு கப் கடலை மாவிற்கு 2 ஸ்பூன் அரிசி மாவு பயன்படுத்தி செய்யும் போது லட்டு பூந்தி முத்து முத்தாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். பாகில் ஒரு கரண்டி நெய் விட்டு பூந்தி போட்டு கிளறுங்கள். நெய் மணத்துடன் லட்டு கம கமக்கும். சுவையோ அசத்தலாக இருக்கும். லட்டு பிடிக்கும் சமயம் டிரை ஃப்ரூட்ஸ் கலந்து பிடிக்கலாம் அல்லது சிறிது கிராம்பு, டைமண்ட் கல்கண்டு சேர்த்து பிடிக்கலாம்.
3. எண்ணெய் குடிக்காமல் வர:
முறுக்கு, தட்டை, தேன்குழல், ரிப்பன் பக்கோடா போன்ற பலகாரங்கள் எண்ணெய் குடிக்காமல் இருப்பதற்கு மாவைப் பிசைந்தவுடன் சூடான எண்ணெயை ஒரு கரண்டியளவு எடுத்து மாவில் விட்டு பிசைந்து பிறகு செய்ய கரகரப்பாகவும், எண்ணெய் குடிக்காமலும் இருக்கும்.
4. அதிரசம் பிரியாமல் வர:
அதிரசம் பிரியாமல் வருவதற்கு பாகு காய்ச்சும் பதம் மிகவும் முக்கியம். கெட்டி பாகாக இல்லாமல் தக்காளி பதத்தில் வெல்லப்பாகை காய்ச்ச வேண்டும். அதிரசத்திற்கு புதிய வெல்லம் பயன்படுத்துவது சுவையை அதிகரிக்கும். மாவு பிசைந்த பிறகு சில மணி நேரம் ஊற வைத்தால் அதிரசம் மிகவும் மென்மையாக நன்றாக வரும். விருப்பப்பட்டால் பேரிச்சம் பழங்களை கொட்டை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்து அதிரசம் செய்ய ருசி தூக்கலாக இருக்கும்.
5. பட்சணங்கள் எண்ணெயில் உதிராமல், ஒட்டிக் கொள்ளாமல் இருக்க எண்ணெய் சரியான சூட்டில் இருக்க வேண்டும். அதிகமாக சூடானால் பட்சணங்கள் சீக்கிரம் சிவந்து, கருகி விடும். குறைவான சூட்டில் இருந்தால் எண்ணெய் குடித்து விடும்.
6. பலகாரங்கள் செய்து முடித்ததும் உடனடியாக மூடாமல், நன்கு ஆறிய பிறகு காற்று புகாத டப்பாவில் போட்டு பாதுகாக்க ஒரு மாதமானாலும் கரகரப்பாகவும், சுவை மாறாமலும் இருக்கும்.
7. முறுக்கு, தேன்குழல் போன்றவை செய்யும்போது வெண்ணெய் சேர்ப்பதுடன், தேங்காய் பாலும் சேர்த்து பிசைய ருசியும் மணமும் கூடும்.
8. சரியான அளவு:
5:1 என்ற ரேஷியோவில் ஐந்து பங்கு அரிசி, ஒரு பங்கு வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து மிஷினில் அரைத்து வைத்துக்கொண்டால் தேன்குழல், தட்டை, முறுக்கு வகைகளுக்கு பயன்படுத்த எளிதாக இருக்கும். பதப்படுத்திய மாவில் பட்சணங்கள் செய்தால் எளிதில் சிவக்காமல், வெளுப்பாகவும் வரும்.
9. ஃ பிரஷ்ஷாக இருக்க:
மிக்ஸருக்கு எண்ணெயில் பொரித்த ஓமப்பொடி, தேன்குழல், பூந்தி போன்றவற்றை வடிதட்டில் எடுத்து எண்ணெய் வடிந்ததும், டிஷ்யூ பேப்பரில் போட்டு சிறிது நேரம் வைத்து பிறகு மிக்ஸரில் போட எண்ணெய் காரல் வாசனை வராமல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
10. ஏலப்பொடி:
இனிப்பு வகைகளுக்கு ஏலக்காய் போடுவதற்கு ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பொடித்துக்கொண்டு இருக்காமல் 50 கிராம் ஏலக்காயை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து மிக்ஸியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டால் இனிப்பு வகைகளுக்கு போட எளிதாக இருக்கும்.
11. சுவையைக் கூட்ட:
எந்த வகையான இனிப்பு செய்தாலும் ஒரு சிமிட்டு பொடி உப்பை சேர்த்து செய்ய ருசி கூடுவதுடன் இனிப்பு திகட்டாமல் இருக்கும். அதே போல் கார வகைகளுக்கு ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்து செய்ய ருசி கூடும்.
12. சிக்கு வாடை வராமல் இருக்க:
முறுக்கு, தேன்குழல் போன்றவற்றை தேங்காய் எண்ணெயில் பொரிக்க மணம் கூடும். மற்ற பலகாரங்களை கடலை எண்ணெயில் செய்தால் சீக்கிரம் பழைய வாசனை வராது. அத்துடன் ஒரு சின்னத் துணியில் 2 ஸ்பூன் கல் உப்பை போட்டு முடிச்சாக கட்டி பட்சணங்கள் வைத்துள்ள பாத்திரத்தின் அடியில் போட்டு வைக்க சிக்கு வாடை வராமல் கடைசி துண்டு வரை ருசியாக இருக்கும்.
தீபாவளிக்கு உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்குச் செல்லும் போது பொதுவாக இனிப்பையே வாங்கிச் செல்வோம். ஆனால் தீபாவளி சமயம் எல்லோர் வீட்டிலும் இனிப்பு அதிகமாக இருக்கும். எனவே அதற்கு பதிலாக பழங்கள், டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர் பழங்கள், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளை வாங்கிச் செல்லலாம்.
13. பர்ஃபி பதம்:
பர்ஃபி வகைகள் செய்யும்பொழுது சரியாக துண்டு போட வருமா என்று சந்தேகம் வந்தால் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் பர்ஃபி கலவையை போட்டு, கையில் எடுத்து உருட்டி பார்க்க உருட்ட வந்தால் சரியான பதம் என்றும், தண்ணீரில் கரைந்தால் சரியான பதம் வரவில்லை இன்னும் கிளற வேண்டும் என்றும் அர்த்தம்.
அதிரசம், லட்டு போன்ற கடினமான தீபாவளி பலகாரங்களை, சரியான பதத்துடன் செய்து முடிக்க உதவும் நிபுணர் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.