

தீபாவளிக்கு அதிரசம் உடையாமல், எண்ணெய் அதிகம் குடிக்காமல், எண்ணெயில் போட்டதும் பிரிந்துவிடாமல் பஞ்சுபோல் வருவதற்கான முக்கியமான குறிப்புகள்.
1. அதிரசம் செய்ய சாதாரண பச்சரிசியைவிட மாவு பச்சரிசியைப் பயன்படுத்துவது சிறப்பு.
2. அரிசி மற்றும் மாவுப் பதம் மிகவும் முக்கியம். பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டியதும் வெள்ளைத் துணியில் சிறிது நேரம் உலரவைக்க வேண்டும். அரிசியில் உள்ள ஈரம் முழுமையாக வற்றி விடக்கூடாது. கையில் தொட்டால் லேசான ஈரப்பதம் இருக்க வேண்டும்.
3. குறைவாக செய்வதாக இருந்தால் மிக்ஸியில் அரைக்கலாம். நிறைய அளவில் செய்வதாக இருந்தால் மிஷினில் கொடுத்து அரைத்து வரலாம். அரைத்தவுடன் சல்லடையில் கொட்டி சலிக்க வேண்டியது அவசியம்.
4. மாவுப் பதம் மிகவும் முக்கியம். மாவு ரொம்பவும் ஆறியோ அல்லது காய்ந்தோ போனால் வெல்லப்பாகை உறிஞ்சாது.
5. அதிரசம் சொதப்புவதற்கு முக்கிய காரணம் பாகுபதம் தவறுவது தான். பாகுபதம் ரொம்பவே முக்கியம். வெல்லப்பாகை தண்ணீரில் இரண்டு சொட்டு விட்டு கையால் உருட்ட உருண்டு வரவேண்டும். தக்காளிப்பதம் என்று சொல்லுவோம் அல்லவா. அந்த மென்மையான உருண்டை பதத்திற்கு வரவேண்டும்.
6. பாகுபதம் கூடினால் அதிரசம் கல் போல ஆகிவிடும். பதம் குறைவாக இருந்தாலோ அதிரசம் எண்ணெயில் கரைந்து விடும். பாகுபதம் பார்ப்பதற்கு பாகை கையால் உருட்டி தண்ணீரில் போடும்போது ஜெல்லிபோல மென்மையாக இருக்க வேண்டும்.
7. அதிரச மாவை தயாரித்ததும் உடனே தட்டாமல் குறைந்தது 1 அல்லது 2 நாட்களாவது காற்றுப் புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் மாவு பதமாக ஊறி மென்மையாகவும் பாரம்பரிய சுவையுடனும் வரும்.
8. அதிரசத்தை பொரிக்கும் முறையில் கவனம் தேவை. எண்ணெய் அதிகம் காய்ந்துவிட்டால் அதிரசம் மேலே கருகிவிடும். ஆனால் உள்ளே வேகாது.
9. சின்ன எலுமிச்சையளவு மாவை எடுத்து வாழையிலைத் துண்டில் வைத்து மெலிதாக இல்லாமல் ஓரளவு தடிமனான வடையாகத் தட்ட வேண்டும். எண்ணெயில் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே போட்டு பொரிக்க வேண்டும்.
10. எண்ணெயில் போட்டதும் லேசாகக் கரண்டியால் அதிரசத்தின் மேல் எண்ணெய் ஊற்றி பொரிக்கவும். அதிரசம் வெந்து எண்ணெயின் மேல் எழும்பி பொன்னிறமாக வந்ததும் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் உள்ளேயும் நன்கு வெந்து சுவையைக்கூட்டும்.
11. பொதுவாகவே அதிரசம் எண்ணெயை அதிகம் குடிக்கும். எனவே பொரித்தெடுத்த உடனே இரண்டு கரண்டிகளுக்கு நடுவில் வைத்து அழுத்தி உபரி எண்ணையை வெளியேற்றி விடவேண்டும். இது அதிரசத்தை நீண்ட நாட்களுக்கு மிருதுவாக வைத்திருக்க உதவும்.
அதிரசம் சரியாக வராமல் போனால் சரி கட்ட சில உபயோகமான குறிப்புகள்;
12. ஒருவேளை எண்ணெயில் போட்டதும் கரைந்தால் கவலைப்படாமல் அதிரச மாவுடன் இரண்டு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவை சேர்த்துப் பிசைந்து சுடலாம். இது மாவை பிரிந்து போகாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ளும்.
13. ஒருவேளை வெல்லப்பாகு பதம் முற்றிப்போய் அதிரசம் கல் போல கடினமாக வந்தால், ஒரு சிறிய துண்டு கனிந்த வாழைப்பழத்தை மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து சுட சாஃப்ட் ஆகிவிடும்.
14. சில அரிசி மாவு வெல்லப்பாகை அதிகமாக உறிஞ்சி மாவை தட்ட வராத அளவிற்கு கெட்டியாக்கிவிடும். அப்போது சில துளிகள் காய்ச்சிய பால் அல்லது வெதுவெதுப்பான நெய் சேர்த்து மாவை மென்மையாகப் பிசைந்து செய்ய சரியாக வரும்.
இந்த டிப்ஸை எல்லாம் பாலோவ் பண்ணினால் மிகவும் மென்மையான, மெத்து மெத்தென்ற அதிரசத்தை செய்து சுவைக்கலாம்.
பாரம்பரிய சுவையுடன், வாயில் வைத்தவுடன் கரையும் மென்மையான அதிரசத்தை முதல்முறை செய்பவர்களும் உதவும் நிபுணர் குறிப்புகள்.