
ஆரஞ்சு, எலுமிச்சைப் பழத்தோல்களை தூக்கி எறியாமல், அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃப்ரிட்ஜிலிருந்து கெட்ட வாடை வராது.
வடுமாங்காய் தயாரிக்கும்போது உப்பு, விளக்கெண்ணெய், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துக் குலுக்க நீண்ட நாட்கள் அழுகாது. நன்கு சுருங்கி சுவையுடனும் இருக்கும்.
காலையில் செய்த கீரை மசியல் மீந்துவிட்டால், அதை கோதுமை மாவில் கலந்து சுவையான, சத்தான சப்பாத்தி செய்யலாம்.
முட்டைக்கோஸின் கனமான மேல் தோலை கடலைமாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் பஜ்ஜியின் சுவையே அலாதிதான்.
சூடான தவாவில் ஆறிய மோரை ஊற்றித் தேய்க்க பிசு பிசுப்பு அறவே நீங்கிவிடும்.
பிரட், பன் போன்றவை உலர்ந்துவிட்டதா? சிறிது தண்ணீரில் நனைத்து அவற்றை நன்றாக பிசையவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவையை எண்ணெயில் வடை போல் பொரித்து எடுத்தால் பிரட் வடை சூப்பர் சுவையுடன் இருக்கும்.
மிக்ஸியில் தயிர் கடையும்போது, சிறிது நேரம் மிக்ஸி ஓடியபின் நிறுத்திவிட்டு, பிறகு மீண்டும் ஓடவிட்டால் வெண்ணைய் நன்கு திரண்டு வரும்.
பச்சரிசியை விட புழுங்கல் அரிசி தட்டையில் கூடுதல் சுவையும், கர கரப்பும் கிடைக்கும்.
சின்ன வெங்காயத்தை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து வைத்தால் ஒரு மாதம்வரை அழுகாமலும், முளைவிடாமலும் இருக்கும்.
தக்காளி சாஸ் காலியாகிவிட்டால் கடைசியில் இருப்பதை எடுக்க வராது. அதில் சிறிது நீர் விட்டு ரசம் செய்யும்போது ஊற்றிவிட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து, ஆறியதும் தயிரில் ஊறப்போட்டு அதில் உப்பு, பச்சை மிளகாய், கடுகு தாளித்து கொத்துமல்லி இலை சேர்த்தால் வித்தியாசமான தயிர்பச்சடி ரெடி.
கத்தரிக்காய் சமைக்கும்போது, அதனுடன் சிறிது தயிரைச் சேர்த்துக்கொண்டால் காயின் நிறம் மாறாது.