

வீட்டிற்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து வந்தால், வீட்டில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். உணவில் தினமும் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள் அதிலும் முருங்கைக்கீரை எடுத்துக்கொண்டால் அவ்வளவு நன்மை உள்ளது.
முருங்கை கீரையில் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாது உப்புகள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வியக்கத்தக்க மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் முருங்கைக் கீரை உதவுகிறது.
முருங்கைக் கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது. இக்கீரை மலிவானது மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும், அனைத்து காலங்களிலும் கிடைக்கும் அற்புத மூலிகையாகும்.
முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடல் நலத்தைப் பாதுகாக்கிறது.
மற்ற கீரைகளைப்போல் அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துக்கள் குறையாது. அப்படியே இருப்பதுதான் இதன் மற்றொரு மகத்துவமாகும். காய்ந்த முருங்கைக்கீரை பொடியில் (100 கிராம் அளவில்) புரதம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் செறிவாக நிறைந்துள்ளன.
முருங்கைக்கீரையில் பல்வேறு ரெசிகளை செய்யலாம். முருங்கைக்கீரை பொரியல், கூட்டு, சாம்பார், அடை என பல்வேறு சத்தான உணவுகளை செய்யலாம். அந்த வகையில் இன்று முருங்கைக்கீரையை வைத்து சூப்பரான சத்தான முருங்கைக்கீரை கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
ரவை அல்லது பிரட் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை, பொடியாக நறுக்கி வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு ஒன்று திரட்டி பிசைந்த கொள்ளவும்.
பிறகு அந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை வட்ட வடிவில் அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவில் செய்து கொள்ளவும்.
ஒரு தட்டில் ரவை அல்லது பிரட் தூளை கொட்டி பரப்பி விடவும்.
பின்னர் அந்த கட்லெட்டுகளை ரவை அல்லது பிரட் தூளில் மேலும் கீழுமாக பிரட்டி எடுக்கவும்.
அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கட்லெட்டுகளை போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு இரு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான முருங்கைக்கீரை கட்லெட் ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சூப்பராக இருக்கும்.
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.