

உடம்புக்கும், வயிற்றிற்கும் மிகவும் நல்லது என்று எல்லோராலும் கூறப்படுவது முருங்கைக்கீரை. முருங்கைக்கீரை சேர்த்த அடை, சாம்பார், ரசம், சாதம் என அனைத்துமே ருசியாக இருக்கும். இப்போது ரெஸிபியைப் பார்க்கலாம்.
ஆரோக்கியமான சமையல்: முருங்கைக்கீரை சாதம் தயாரிக்கும் எளிய வழிமுறை
தேவை:
முருங்கைக்கீரை -1 கப் (ஆய்ந்தது)
பச்சரிசி -1 கப்
துவரம்பருப்பு -1/4 கப்
பெரிய வெங்காயம் -1
பூண்டு -2 பல்
நெய் -2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையானது
வறுக்கத் தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை 2 டீ ஸ்பூன், காய்ந்த சிகப்பு மிளகாய் 4, பச்சரிசி 2 டீஸ்பூன், கொப்பரைத் துருவல் 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு காய்ந்ததும், மேற்கூறியவைகளைப் போட்டு நன்கு வறுத்து எடுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்றாக அலம்பவும். குக்கரில் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு போட்டு அலம்பிய அரிசியை அத்துடன் சேர்த்து மூடவும். 2 விசில் வந்ததும், அடுப்பை மிதமாக வைத்து சில நிமிடங்கள் எரியவிடவும். பிறகு ஐந்து நிமிடங்கள் சென்று அணைக்கவும்.
அடுப்பிலிருந்து குக்கரை இறக்கி, சாதத்தை வெளியே எடுத்து தட்டில் ஆறவிடவும். முருங்கைக்கீரை, வெங்காயம் மற்றும் பூண்டை அரிந்து கொள்ளவும்.
வாணலியில் மீதி எண்ணெயை விட்டு சிறிது கடுகு, சீரகம் தாளித்து பொடியாக அரிந்து வைத்துள்ள முருங்கைக் கீரை, வெங்காயம், பூண்டு ஆகியவைகளைச் சேர்த்து வதக்கவும். வறுத்த பொடிகளைப் போட்டு கலக்கவும் பிறகு தட்டிலுள்ள சாதத்தின் மீது பரவலாக, வதக்கி வைத்திருக்கும் முருங்கைக் கீரையை போட்டு நெய் விட்டு மிக்ஸ் செய்து சாப்பிடசுவையாக இருக்கும்.
ஆரோக்கியமான சமையல்: ஓவன் இல்லாமல் தயாரிக்கும் மாம்பழ கேக்
தேவை:
நல்ல மாம்பழம் - 1
பொடி ரவை (சுத்தம் செய்தது) -1 கப்
ஜீனி - அரை கப்
கெட்டி தயிர் - முக்கால் கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நல்ல பால் - அரை கப்
கோதுமை மாவு - முக்கால் கப்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ் -1 கப்
டூட்டி ஃப்ரூட்டி - அரை கப்
செய்முறை:
முதலில் மேங்கோவைத் தோல் சீவி, கட் செய்து, அதை மிக்ஸியில் போட்டு அத்துடன் ரவை, ஜீனி, எண்ணெய், தயிர், கால் கப் பால் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி, பத்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.
பின்னர் டூட்டீ ஃப்ரூட்டியை கொஞ்சம் ஒரு வாயகன்ற பௌலில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், கால் கப் பால் சேர்த்து மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் மேங்கோவுடன், மேலே கூறியவைகளை கலக்கவும். இக்கலவையில், சிறிது பால் விட்டு மிக்ஸ் செய்யவும். சுமார் 6" உயரமுடைய மோல்டில், சற்றே நெய் தடவிய க்ரீஸ் பேப்பரை பரத்தவும். இதில் மேங்கோ- கோதுமைக் கலவையை கொஞ்சம் விட்டு, பொடித்த ஃட்ரை ஃப்ரூட்ஸ்களைப் பரவலாகத் தூவி மீதிக்கலவையைக் கொட்டி சமன் செய்யவும். இதன் மீது பாக்கியிருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ்களை மீண்டும் தூவவும்.
சுமார் 5 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்த PAN ற்குள் மோல்டை வைத்து, மூடவும். அடுப்பை மீடியமாக எரியவிட்டு, 40-45 நிமிடங்கள் சென்று வெளியே எடுத்து திறக்கவும். பின்னர் கட் செய்து சாப்பிடுகையில், சூப்பரான டேஸ்ட்டாக இருக்கும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் குடும்பத்தின் உணவு முறையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். சத்தான கீரைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலை வலுப்படுத்துவதோடு, ஆரோக்கியமான இனிப்பு வகைகளை வீட்டிலேயே தயாரித்து மனதிற்கும் வயிற்றிற்கும் இதமான உணர்வைப் பெறலாம்.