

வீட்டில் முட்டைக்கோஸ் வாங்கினாலே, ஒன்று பொரியல் செய்வோம் அல்லது கூட்டாக வைப்போம். அதையே சாப்பிட்டுப் பலருக்கும் நிச்சயம் சலித்துப் போயிருக்கும். முட்டைக்கோஸை சமைக்காமல், அதன் முழுமையான சத்துக்களும் அப்படியே கிடைக்கும்படி, மொறுமொறுப்பான சுவையில் ஒரு அட்டகாசமான உணவு செய்ய முடியுமா?
கண்டிப்பாக முடியும். அதுதான் இந்த 'ஏசியன் முட்டைக்கோஸ் சாலட்'. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்றுபவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். சரி வாங்க, இந்த சாலட்டை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாலட் செய்ய:
பச்சை முட்டைக்கோஸ் - 1 கப்
ஊதா முட்டைக்கோஸ் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கைப்பிடி
வறுத்த வேர்க்கடலை அல்லது வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்
ஏசியன் டிரஸ்ஸிங் செய்ய:
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது அல்லது துருவல் - 1/2 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை!
முதலில் முட்டைக்கோஸ், கேரட் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை எவ்வளவு மெல்லியதாக நறுக்க முடியுமோ, அவ்வளவு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கிய காய்கறிகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனையும் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். ஊதா நிற முட்டைக்கோஸ் சேர்ப்பது சாலட்டிற்குப் பார்ப்பதற்கே ஒரு ரம்மியமான தோற்றத்தைக் கொடுக்கும்.
இந்த சாலட்டின் உயிர்நாடியே நாம் தயார் செய்யும் அந்த 'டிரஸ்ஸிங்' சாஸில்தான் அடங்கியுள்ளது. ஒரு சிறிய கிண்ணத்தில் சோயா சாஸ், வினிகர், தேன், இஞ்சி பூண்டு துருவல், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயைச் சேர்ப்பதுதான் அந்த அசலான ஆசிய உணவின் மணத்தைக் கொடுக்கும். இவை அனைத்தையும் ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்துக் கலக்கினால், இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு கலந்த ஒரு அருமையான டிரஸ்ஸிங் ரெடி.
நீங்கள் சாலட்டைச் சாப்பிடப் போகும் ஒரு நிமிடத்திற்கு முன்புதான், தயார் செய்து வைத்துள்ள இந்த டிரஸ்ஸிங்கை காய்கறிகளின் மேல் ஊற்ற வேண்டும். முன்னதாகவே ஊற்றிவிட்டால் காய்கறிகள் தண்ணீர் விட்டு, அதன் மொறுமொறுப்புத் தன்மையை இழந்துவிடும். டிரஸ்ஸிங்கை ஊற்றியதும், இரண்டு முட்கரண்டிகளை வைத்து காய்கறிகள் முழுவதும் சாஸ் படும்படி நன்றாகக் கலந்து விடுங்கள்.
இறுதியாக, வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் வெள்ளை எள்ளைத் தூவிப் பரிமாறுங்கள். டயட்டில் இருப்பவர்கள் இரவு உணவாக இதை மட்டும் சாப்பிட்டாலே போதும், வயிறும் நிறையும், ஆரோக்கியமும் மேம்படும்.