
சேமியாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். சேமியாவில் பாயாசம் கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வித்தியாசமாக சேமியாவில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு மதியத்திற்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். சரி இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 சிறியது
கேரட் - 1
பீன்ஸ் - 10 எண்ணிக்கை
உருளைக்கிழங்கு - சிறியது ஒன்று
பட்டாணி - ஒரு கைப்பிடி
காலிஃபிளவர் - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
முந்திரி, திராட்டை - விருப்பத்திற்கேற்ப
தாளிக்க :
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் (சிலருக்கு இந்த பொருட்களை அதிகம் சேர்த்தால் பிடிக்காது என்பதால் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம். )
செய்முறை :
காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் சோமியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும். வறுத்து போட்டால் வாசனையாகவும், குழையாமலும் உதிரி உதிரியாக வரும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன், தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கி, மசாலாக்கள் பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லி, புதினாவை (கொஞ்சம் புதினா, கொத்தமல்லியை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்) சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் காய்கறிகள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு காய்கறிகள் பாதியளவு வேகும் வரை வைக்கவும்.
இப்போது தீயை வேகமாக வைத்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் வறுத்து வைத்துள்ள சோமியா, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து ஒருமுறை கிளறி விடவும். சேமியாவை வறுத்து போடுவதால் 10 முதல் 12 நிமிடங்களில் வெந்து விடும்.
இப்போது தண்ணீர் வற்றி சேமியா வெந்தவுடன் அதில் நெய், மீதமுள்ள கொத்தமல்லி, புதினா, வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி போட்டு 5 நிமிடங்கள் வைத்த பின்னர் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி ரெடி.
விருப்பம் உள்ளவர்கள் பிரெட் துண்டுகளை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து கடைசியாக இதில் சேர்த்தும் பரிமாறலாம்.
இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி சூப்பராக இருக்கும். வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்க. அசந்து போயிடுவீங்க.