விசேஷ தின ஸ்பெஷல்: நாவில் கரையும் மூங்தால் பணியாரம் & கோதுமை புட்டு!

இனிப்பு பலகாரம் செய்ய இனி கவலை வேண்டாம்; எளிய செய்முறை இதோ!
இனிப்பு பலகாரம்
இனிப்பு பலகாரம்AI image
Updated on

வீடுகளில் பணியாரமும், புட்டும் எப்போதும் செய்யப்படுவது கிடையாது. பண்டிகை தினங்கள், விருந்தினர் வருகை, வீட்டில் ஸ்பெஷல் விசேஷ தினம் போன்றவைகளில் தான் இவைகள் செய்யப்படும். செய்வதற்கு நேரம் சற்றே அதிகம் செலவாகும்.

மூங்தால் சலங்கை பணியாரம் மற்றும் தேங்காய்- கோதுமை புட்டு செய்யும் முறைகளைத் தெரிந்துகொள்ளலாமா?

பாசிப்பருப்பு கொண்டு சுவையான இனிப்பு பலகாரம் தயாரிக்கும் முறை

தேவை:

பாசிப் பருப்பு -1/2 கிலோ

வெல்லம் -1/2 கிலோ

பொட்டுக்கடலை -1 கப்

பச்சரிசி - 2 கப்

புழுங்கல் அரிசி -1/2 கப்

வறுத்த வெள்ளை எள் -50 கிராம்

ரீஃபைன்ட் ஆயில் -300 மி.லி.

செய்முறை:

முதலில் மூங்தாலை (பாசிப்பயறை) வெறும் வாணலியில் பச்சை வாசனை போக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதேபோல் புழுங்கலரிசியையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பாசிப்பயறு, புழுங்கலரிசி, பொட்டுக்கடலை ஆகியவைகளை மிக்ஸியிலிட்டு நன்கு திரித்து, சலித்தெடுக்கவும். பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து அலம்பி தோசைக்கு அரைப்பதைப்போல அரைத்துக் கொள்ளவும். சற்றே நீர்க்க இருப்பது அவசியம்.

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்து இளம் பாகாக காய்ச்சவும். நன்கு கொதிக்கையில் அடுப்பை அணைக்கவும். சலித்து வைத்திருக்கும் மாவு, வறுத்த வெள்ளை எள் ஆகியவைகளை மெல்ல வெல்ல பாகில் கலந்து பிசையவும். உடனே இதை சிறு எலுமிச்சை அளவு உருட்டவும். ஆறிப்போனால் மாவு உருட்ட வராது.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டு காய்ந்ததும், வெல்லமாவு உருண்டையை, நீர்த்த அரிசிமாவில் தோய்த்தெடுத்து மெதுவாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து சாப்பிட சுவையோ சுவைதான் இந்த மூங்தால் சலங்கை பணியாரம்.

இனிப்பு பலகாரம்
இனிப்பு பலகாரம்AI image

தேங்காய் சேர்த்து மணக்கும் கோதுமை புட்டு எனும் இனிப்பு பலகாரம்

தேவை:

நல்ல கோதுமை மாவு -250 கிராம்

சர்க்கரை -100 கிராம்.

நல்ல தேங்காய்ப் பூ -3 கப்

ஏலக்காய்ப் பொடி -1 டீ ஸ்பூன்

உப்பு -தேவையானது

தண்ணீர் -தேவையானது

தேங்காய் எண்ணை -1/2 கப்

இதையும் படியுங்கள்:
நாவிற்கு விருந்தாகும் சேலம் தட்டுவடை செட்! ஆரோக்கியமான செய்முறை இதோ!
இனிப்பு பலகாரம்

செய்முறை:

முதலில் கோதுமை மாவை சலித்து வாசனை வரும் வரை வறுத்து பெரிய தட்டில் போட்டு ஆறவிடவும். உப்பை தண்ணீரில் கரைத்து மாவின் மீது சிறிது - சிறிதாக தெளித்து உதிரியாக பிசையவும். இத்துடன் ஏலப்பொடியை மிக்ஸ் செய்து கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து வைக்கவும்.

புட்டுக்குழாயில் நன்கு எண்ணெய் தடவி முதலில் கொஞ்சம் தேங்காய்பூ, அடுத்தது கொஞ்சம் உதிரியாக பிசைந்த கோதுமை மாவு, கொஞ்சம் பொடி செய்த வெல்லம் என மாற்றி-மாற்றி போட்டு லேசாக அழுத்திவிட்டு புட்டுக் குழாயை மூடி இட்லி பாத்திரத்தினுள் வைத்து வேகவைக்கவும்.

வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி உதிர்க்க சுவையான தேங்காய் -கோதுமைப் புட்டு ரெடி. கமகமவென வாசனை ஊரைத் தூக்கும். சர்க்கரைப் பொடியை புட்டுக் குழாயில் போடாமல், தனியாக வெந்த கோதுமை மாவு, தேங்காய்ப் பூவுடன் கடைசியில் கலந்தும் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு சுவையில் உருளைக்கிழங்கு மசாலா - ஈஸியா செய்வது எப்படி?
இனிப்பு பலகாரம்

தேங்காய், கோதுமை புட்டுடன் வேகவைத்த பச்சைப்பயறு, பொரித்த பப்படம் இவைகளை சேர்த்து சாப்பிட. செம யம்மியாக இருக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த செய்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குறைந்த நேரத்தில் அதிக சுவையுடன் கூடிய தரமான இனிப்பு பலகாரங்களை உருவாக்கி, விசேஷ நாட்களின் மகிழ்ச்சியை பலமடங்கு அதிகரிக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com