
பள்ளி திறந்தாயிற்று. பள்ளிகளுக்கு சென்றால் நாம் தந்துவிடும் உணவை நிச்சயமாக பிள்ளைகள் சாப்பிடுவது உண்டு. அதற்கு ஏற்ப சத்தான உணவுகள் தரவேண்டும். அதற்கு ஏற்ற சாய்ஸ் அவல்.
அவல் என்றுமே நம் பாரம்பரியமிக்க சத்தான உணவுகளில் முதன்மையானது. அவல் பல நன்மைகளை வழங்குகின்றது, குறிப்பாக செரிமானத்திற்கு எளிதானதாகவும் உடல் பருமனை கட்டுப்படுத்தி ஆற்றலை அதிகரிக்கும் உணவு. அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் இதில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த அவல் வைத்து குழந்தைகளுக்கு பிடித்த சில ரெசிபிகளை இங்கு பார்ப்போம்.
இனிப்பு அவல்
தேவை:
வெள்ளை அல்லது சிவப்பு அவல் - 1/2 கப்
கெட்டிப்பால் - 1 கப்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்- 4
பொடித்த பாதாம் - 1 டீஸ்பூன்
நாட்டு சக்கரை - தேவையான அளவு
செய்முறை:
அவலை நன்கு நல்ல தண்ணீரில் அலசி ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் காய்ச்சிய கெட்டியான பாலை அவல் மூழ்கும் அளவு ஊற்றி ஊறவைக்கவும். அரைமணி நேரத்தில் அவல் நன்கு ஊறிவிடும். இதில் தேவையான அளவு நாட்டுச்சக்கரை, பொடித்த ஏலக்காய் தூள், பாதாம் பருப்பு, துருவிய தேங்காய் ஆகியவற்றை கலந்து பிள்ளைகளுக்கு தரலாம்.
இது உடனடி எனர்ஜி தரும் ஒரு உணவு. தேவைப்பட்டால் இதில் கெட்டி பாலுக்கு பதில் முதலில் கெட்டியாக பிழிந்த தேங்காய் பாலையும் உபயோகிக்கலாம். குங்குமப்பூ இருந்தாலும் சேர்க்கலாம்.
புளி கார அவல்
தேவை:
சிவப்பு அவல்- 1 கப்
புளிக் கரைசல் ஊற வைத்தது- தேவையான அளவு
கடுகு ,உளுந்து, கடலைப்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன் (தாளிக்க )
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிது வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை அலசி அதில் புளி கரைசல், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் வைத்த வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து கல்லப் பருப்பு போட்டு தாளித்து, காய்ந்த மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து தாளித்து வதக்கியதும் புளிக்கரைகலில் ஊற வைத்த அவலை சேர்த்து புரட்டி வேர்க்கடலை பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம்.
அவல் கேசரி
தேவை:
அவல்- 1/2 கப்
சர்க்கரை 1/2 கப்( அதிகம் இனிப்பு வேண்டும் என்றால் 3/4 கப்)
தண்ணீர் - தேவைக்கு
நெய்- 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 4 தூள்
முந்திரி திராட்சை- தலா 5
ஆரஞ்சு நிறம் - 1 சிட்டிகை
செய்முறை:
அவலை கருகாமல், மிதமான தீயில் 5 நிமிடங்கள் உலர்வாக வறுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் பொடி செய்யவும். ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து ஒடித்த முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் பொடித்த அவலைப் போட்டு 2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து சேர்த்து கிளறவும்.
மிதமான தீயில் அவலைக் கிளறி வேகவிடவும். சமைக்கவும். அனைத்து தண்ணீரையும் அவல் எளிதில் உறிஞ்சி வேகும். அவல் கைகளில் ஒட்டாமல் இருந்தால் முழுமையாக வெந்துவிட்டது என்று அர்த்தம்.
இப்போது மேலும் தீயை குறைவாக்கி இதனுடன் சர்க்கரையைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். குறைந்த தீயில் 7முதல் 10 நிமிடங்கள் நிறம் மாறாமல் கிளறி சிட்டிகை கேசரிப்பவுடர் வறுத்த முந்திரி திராட்சை, பொடித்த ஏலக்காய் சேர்த்து இறுதியில் நெய்யூற்றி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி விடவும். இது குழந்தைகள் விரும்பும் மாலை நேர உணவாகும்.