
மிளகாய் தூள் போடாமல் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து, அந்த விழுதை மாவில் கலந்து பஜ்ஜி செய்தால் பஜ்ஜியின் சுவையே அலாதிதான்.
சட்னிக்கு உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதில் போட்டால் போதும் உப்பை உருளைக்கிழங்கு உறிஞ்சி எடுத்துவிடும்.
கடலைப்பருப்பு, பாசிப்பருப்புகளை ஊறவைக்காமல் களைந்து அப்படியே வேகவைத்தாலே போதும், சுவையான சுண்டல் தயாராகி விடும்.
பொரியலுக்குப் போடும் தேங்காய்த் துருவல் இளசாக இருந்தால் சிறிது வறுத்துப் பின் பொரியலில் சேர்த்தால் பொரியல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
குருமா, மசாலா போன்ற கிரேவியான அயிட்டங்களில் காரம் அதிகமாகி விட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து கொதிக்க வையுங்கள். காரம் எங்கேயென்று கேட்பீர்கள்.
அரிசியைக் களைந்து குக்கரில் வைக்கும்போது சில சொட்டு எலுமிச்சைச்சாறு விடுங்கள். சாதம் பொல பொலவென்றும், வெண்மையாகவும் இருக்கும்.
வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன் துருவி வேகவைத்து மசித்த கேரட் மற்றும் சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, சட்டென நிறம் மாறாமல் இருக்க, சிறிதளவு தண்ணீரில் கடலைமாவைக் கரைத்து உருளைக் கிழங்கை சீவிப்போட்டு எடுத்து சுத்தமான வெள்ளைத் துணியில் உலர்த்தி வறுக்கலாம்.
ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும்போது, இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவையும் பாலில் கலந்து பாயசத்தில் ஊற்றினால் பாயசம் கெட்டியாக இருப்பதுடன் மணமாகவும் இருக்கும்.
தேங்காய் சாதம் கலந்து வைத்து பரிமாறும் சமயத்தில் பொரித்த அப்பளம் இரண்டை நொறுக்கி சாதத்தில் தூவி பரிமாறினால் தேங்காய் சாதம் சுவை நன்றாக இருக்கும்.
சாம்பார், வத்தக்குழம்பு வைக்கும்போது, காரம் அதிகமாகிவிட்டால் அதில் நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்கள். காரம் மட்டுப்படும்.
வெந்த கீரையை மிக்ஸியில் போட்டு வைப்பரில் ஒரு சுற்று சுற்றினால் நொடியில் மசிந்துவிடும் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.