
-அகிலா சிவராமன்
கொள்ளு ஒருவகை பயறு. இதற்கு கொள், முதிரை என்று வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் 'ஆர்ஸ் கிராம்' என்று பெயர்.
ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். வாரத்திற்கு ஒருமுறை கொள்ளு சாப்பிட்டால் உடன் பருமன் மற்றும் தொப்பை குறையும். கொள்ளு கிச்சிடி எப்படி செய்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.
கொள்ளு கிச்சடி ரெசிபி
தேவையான பொருட்கள்:
கொள்ளு 200g
பயத்தம்பருப்பு 100g
தக்காளி 1(medium size) பொடியாக நறுக்கியது
கேரட், காளி ஃபளவர், பீன்ஸ், குடை மிளகாய் - எல்லாம் சிறிதளவு எடுத்துக்கொண்டு துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். (காய்கறி சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை.
இஞ்சி பூண்டு விழுது – ½ spoon
கடுகு – ¼ spoon
சீரகம் – ¼ spoon
மஞ்சள் தூள் – ¼ spoon
பச்சை மிளகாய் - 2(நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்)
மிளகாய் துள் - ½ spoon
கரம் மசாலா தூள். – ½ spoon
பிரியாணி மசாலா தூள் -1/4 spoon(optional)
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை;
முதலில் கொள்ளை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பிறகு வெந்நீரில் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு அந்த தண்ணீரோடு கொள்ளை குக்கரில் மூன்று அல்லது நான்கு சிட்டிகள் விட்டு வேகவைக்கவும். ஆறியவுடன் அந்த கொள்ளை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
இப்போது அதே குக்கரை கழுவி அடுப்பில் வைக்கவும்.
குக்கரில் தண்ணீர் வற்றியவுடன் இரண்டு அல்லது மூன்று spoon எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும், காய்ந்த பிறகு கடுகு மற்றும் சீரகத்தை தாளிக்கவும்.
கடுகு வெடித்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு சிறிது வதக்கவும். நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலா தூளையும் சேர்த்து வதக்கவும்.
இப்போது சுத்தம் செய்து கழுவிய பயத்தம் பருப்பு, வேகவைத்த கொள்ளு மற்றும் தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீரை சேர்க்கவும், தண்ணீர் சிறிது அதிகமாக இருந்தால்தான் கிச்சடி நன்றாக தளர்வாக இருக்கும்.
குக்கரை மூடி மூன்று சிட்டிகள் விடவும். ஆறிய பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி தழைகளை சேர்க்கவும். சுவையான சூடான கொள்ளு கிச்சடி ரெடி. இதில் அரிசி கொஞ்சம் கூட சேர்க்காத காரணத்தினால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும் உண்ணலாம். தயிர் பச்சடி அல்லது அப்பளத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.
கொள்ளு டால் தடுகா ரெசிபி
தேவையான பொருட்கள்:
கொள்ளு : ஒரு கப்
பச்சை பயிறு – ¼ கப்
கடலைப் பருப்பு – ¼ கப்
தனியா தூள் – 1 spoon
சீரகத் தூள். – ½ spoon
மஞ்சள் தூள். – ¼ spoon
கரம் மசாலா தூள் – ½ spoon
பிரிஞ்சி இலை – 2
சீரகம் – ½ spoon
தயிர் – 3 spoon
உப்பு – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
மசாலா அரைப்பதற்கு;
தக்காளி – 3 medium
வெங்காயம – 2 medium
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 1(இல்லையென்றால் பரவாயில்லை)
பூண்டு. – நான்கு அல்லது ஜந்து பல்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகு. – ¼ spoon
காய்ந்த மிளகாய். – 2
செய்முறை;
முதலில் எல்லா பருப்புகளையும் கழுவி நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
பிறகு அவற்றை குக்கரில் 3 சிட்டிகள் விடடு வேகவைத்து எடுத்து கொள்ளவும். ஆறிய பிறகு அந்த பருப்புகளை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். (மிகவும் நைஸாக அரைக்க வேண்டாம். ஒரு சுற்று சுற்றினால் போதும்).
வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாமல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மசாலா செய்வதற்கு;
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் முதலில் dry பொருட்களை எல்லாம் அதாவது பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மிளகு, காய்ந்த மிளகாய் முதலியவற்றை லேசாக வறுக்கவும்.
வறுத்த பின் அவற்றை எடுத்து விட்டு 2 spoon எண்ணெய் ஊற்றி தக்காளி வெங்காயம் மற்றும் இஞ்சியை நறுக்கி போடவும். பூண்டையும் சிறிது இடித்து போடவும். பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
ஆறிய பிறகு இவை எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் குக்கரை வைத்து மூன்று spoon எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு சீரகத்தை தாளிக்கவும்.
பிரிஞ்சி இலையை போடவும், சிறிது வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்டை போடவும். இத்துடன் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். காரம் அதிகமாக சாப்பிடுபவர்கள் சிறிது மிளகாய் தூளையும் சேர்த்து கொள்ளலாம். நன்றாக வதக்கவும். 5 முதல் 8 நிமிடம் வரை அடுப்பை low heat ல் வைத்து வதக்கவும். இப்போது பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி போடவும்.
தயிரை நன்றாக கலக்கி இத்துடன் சேர்க்கவும். பிறகு கலவையை நன்றாக கலக்கிவிடவும்.
இத்தருணத்தில் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை கலக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலக்கவும். வேகவைத்த தண்ணீரையும் ஊற்றவும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரை சேர்க்கவும். கலவைக்கு மேலே தண்ணீர் இருக்க வேண்டும்.
குக்கரை மூடி இரண்டு சிட்டிகள் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும.
ஆறிய பிறகு குக்கரை திறந்து டாலை வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே சிறிது நெய் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து பரிமாறவும். மேலே சிறிது எலுமிச்சபழச்சாற்றை புழிந்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
இதை சப்பாத்தி மற்றும் தோசைக்கு தொட்டு கொள்ளலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். இது பிரியாணி மற்றும் புலாவிற்கும் உகந்த side dish.