
கொள்ளு (Horse gram) ஒரு மிகவும் சத்துள்ள பாரம்பரிய தானியமாகும். இது வெப்பம் தரும் தன்மையுடையது, ஆகவே சாதாரணமாக குளிர்காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளு வைத்து செய்யக்கூடிய பிரபலமான உணவாகிய...
கொள்ளு புளி குழம்பு
தேவையான பொருட்கள்:
கொள்ளு – ½ கப்
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 6 பல் (சிதைத்தது)
மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கருவேப்பிலை – சில
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விருப்பம் இருந்தால்)
செய்முறை:
கொள்ளுவை நன்கு கழுவி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய கொள்ளுவை வேகவைக்கவும் (ப்ரெஷர் குக்கரில் 3 விசில் வரைக்கும்). வேகவைத்த கொள்ளுவில் இருக்கும் நீரை வடித்து வைத்து கொள்ளுங்கள் – அதுதான் குழம்புக்கு முக்கியமான சுவை தரும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து மென்மையாக மசாலா போல் வதக்கவும். புளியை இத்துடன் கலந்து கொதிக்க விடவும். இதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், வேகவைத்த கொள்ளுவும், கொள்ளு வடிக்கப்பட்ட நீரும் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். இறுதியில் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை அதிகம் வரும். வெறும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். உருளைக்கிழங்கு பொரியல், வெண்டைக்காய் வறுவல் துணையாக வைத்துக்கொண்டால் சூப்பரா இருக்கும்.
கொள்ளு பருப்பு சட்னி
தேவையான பொருட்கள்:
கொள்ளு – ½ கப்
சிறிய வெங்காயம் – 6 முதல் 8
பூண்டு – 3 பல்
வத்தல் மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – 1 இஞ்ச் அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கருவேப்பிலை – சில
செய்முறை:
கொள்ளுவை 4-5 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும். ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, வத்தல்மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்கு வதக்கவும். இதனுடன் வேகவைத்த கொள்ளுவும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தேங்காயும் இப்போது சேர்த்து வதக்கவும். பின்னர் அனைத்தையும் குளிரவைத்து மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து பக்குவமாக வைக்கவும்.
ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். இட்லி, தோசைக்கு மற்றும் சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும். சிறிது வித்தியாசமாக செய்து மகிழலாமே.