
ராகி பூரி
தேவை:
ராகி மாவு - 1/2 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
வெண்ணெய் - 1 ஸ்பூன்,
வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் வெண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடுபடுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூரிகளைப் பொரித்து எடுக்கவும். சத்தான, சுவையான ராகி பூரி தயார்.
ராகி பூசணிக்காய் அல்வா
தேவை:
கேழ்வரகு மாவு - 1/4 கிலோ
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
முந்திரி - 10
சர்க்கரை - 1/4 கிலோ
நெய் - ½ கப்
வெள்ளைப் பூசணி - 100 கிராம்
பால் - 1 கப்
செய்முறை:
முதலில் கேழ்வரகு மாவை சுத்தம் செய்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்த கேழ்வரகை ஆறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்
அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப்பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய வெள்ளை பூசணித் துண்டுகளைச் சேர்த்து, வேகவைக்கவும்
இதனுடன், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். பின்னர், முந்திரி, திராட்சை இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்துக் கிளறினால், சுவையான ராகி பூசணிக்காய் அல்வா ரெடி.
ராகி சுண்டல்
தேவை:
ராகி - 1 கப்
கடுகு - கால் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை -1 கொத்து
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதல் நாள் ஆறு மணிநேரம் கேழ்வரகை ஊறவிட்டு வடித்து ஒரு மூட்டையில் கட்டி, ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். ஆறு மணி நேரத்தில் இது முளைத்து விடும். வர மிளகாயைப் பொடித்துக் கொள்ளவேண்டும்.
இந்த முளைத்த ராகியை இட்லி தட்டில் பரப்பி, ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, பொடித்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இதில் வேகவைத்த கேழ்வரகு, உப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சத்து நிறைந்த ராகி சுண்டல் ரெடி.
ராகி வாழைப்பழ அடை
தேவை:
ராகி மாவு - ஒரு கப்,
வெல்லம் - முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
கனிந்த செவ்வாழைப் பழம் - 1
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் ராகி மாவு, சவ்வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான, சத்தான ராகி வாழைப்பழ அடை ரெடி.