

மொச்சை உசிலி
தேவை:
மொச்சை – 100 கிராம், கத்திரிக்காய், முட்டைகோஸ் – தலா 100 கிராம், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 4 பல்,
கீறிய பச்சை மிளகாய் – 6, கடலைப்பருப்பு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மொச்சையை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம், கோஸை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து… பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு வதக்கி, வேக வைத்த மொச்சையைச் சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். வித்தியாசமான சுவையில் மொச்சை வெஜிடபிள் உசிலி தயார்.
பச்சை மொச்சை தோசை
தேவை:
பச்சை மொச்சை பருப்பு - 2 கப்,
பச்சரிசி - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை 2 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறவைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து, நான்கு மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் தோசைகளாக வார்க்கவும். இந்த தோசைக்கு உளுந்து தேவையில்லை. சத்தும், சுவையும் நிரம்பிய தோசை இது.
மொச்சை கூட்டு
தேவை:
பச்சை மொச்சை - கால் கிலோ,
தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சை மொச்சையைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, வேகவைத்த மொச்சை, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான பச்சை மொச்சை கூட்டு தயார்.
வடு மாங்காய் மொச்சைப் பிரட்டல்
தேவை:
வடு மாங்காய் - 250 கிராம்
மொச்சை - 250 கிராம்
பூண்டு - 25 கிராம்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - ஒன்றரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
புளித்தண்ணீர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
வடு மாங்காயைக் கழுவி ஈரம்போக துடைத்து சின்னதாக வெட்டிக்கொள்ளவும்.
மொச்சையைத் தண்ணீரில் ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ள வேண்டும். மறுநாள் தண்ணீர் இறுத்து புது தண்ணீர் ஊற்றி வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளியை சேர்த்து மைய வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புளிக்கரைசலைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். பின்பு இதில் வடு மாங்காய், உப்பு, மொச்சையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
பின்பு கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும். சுவையான வடு மாங்காய் மொச்சை பிரட்டல் தயார்.