

சோயா சங்க்ஸ்யை கிரேவி மற்றும் கூட்டு இதுபோல்தான் சமைத்து வந்துள்ளோம். இன்று நாவிற்கு விருந்தளிக்குமாறு சோயா சங்க்ஸ்யில் கருவேப்பிலை மிளகு சேர்த்து சுடு சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு சோயா வறுவல் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
மேலும் சோயா சங்ஸில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உங்களுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
சோயா சங்ஸ்யில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து அடிக்கடி பசி எடுக்காமல் உடல் எடை குறைப்பிற்கு அதிகமாக உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. சோயா சங்க்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் சோயா சங்க்ஸ் உண்பதற்கு அசைவ உணவுபோல் அதற்கு இணையான சுவை மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இவ்வாறு பல நன்மைகளைக் கொண்டுள்ள சோயா சங்க்ஸில் கருவேப்பிலை மிளகு வறுவல் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 3 டீஸ்பூன்
சோயா சங்க்ஸ் - 50 கிராம்
பட்டை ,கிராம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
வெங்காயம் - 2
தக்காளி - 3
உப்பு - தேவையானஅளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
மிளகு - 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை:
தேவையான அளவு கருவேப்பிலையை நன்கு காயவைத்து உலர்த்தி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் இரண்டு ஸ்பூன் மிளகு தேவையான அளவு உலர வைத்த கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ஆரியவுடன் ஒரு மிக்ஸி சாரல் சேர்த்து பவுடராக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்கவைத்து தேவையான அளவு சோயா சங்க்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பின் நன்கு நீரைப் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிகொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி கொடுக்க வேண்டும். அதனுடன் நாம் அரைத்து வைத்திருந்த கறிவேப்பிலை, மிளகு மசாலாவை சேர்த்து ஊறவைத்த சோயா சங்க்ஸ் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு நீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் மூடிவைத்து வேகவைக்க வேண்டும்.
இறுதியாக மல்லித்தழை கருவேப்பிலை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கவேண்டும். சுவையான கமகமக்கும் சோயா சாங்க்ஸ் கருவேப்பிலை மிளகு வறுவல் தயார். இது சுடு சாதத்துடனும் சப்பாத்தி மற்றும் பூரியுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைடு டிஷ் ஆக அமையும்.
இந்த ஆரோக்கியமான செய்முறையை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், செரிமானக் கோளாறுகள் நீங்கி, உடலுக்குத் தேவையான புரதச்சத்துக்கள் எளிதாகக் கிடைப்பதுடன் உணவின் சுவையும் இரட்டிப்பாகும்.