

ஆடி மாதத்தில் அதிகரிக்கும் வாடைக்காற்று, மழை காரணமாக இருமல், சளி போன்ற தொற்றுகளைத் தவிர்க்க கொள்ளுப் பருப்பை உணவில் சேர்க்க வேண்டிய அவசியத்தை இந்த கட்டுரை விளக்குகிறது. உடல் பருமன் குறைப்பிலும் கொள்ளு உதவுவதைச் சொல்கிறது. கொள்ளுத் துவையல் மற்றும் கொள்ளு ரசம் செய்வது எப்படி என்று படிப்படியாக கூறப்படுகிறது.
ஆடி மாதம் பிறந்தாலே வாடைக்காற்றும், மழையும் வர ஆரம்பிக்கும். அதுசமயம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருமல், சளித் தொற்று வராமல் இருக்க கொள்ளுப் பருப்பை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். "கொழுத்தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழிக்கு ஏற்ப, உடல் பருமனை குறைக்கவும் கொள்ளு உதவும். இவ்வளவு பயனுள்ள கொள்ளுப் பருப்பை நாம் எப்படி நம் சமையலில் (கொள்ளுத் துவையல் மற்றும் கொள்ளு ரசம் சேர்த்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
கொள்ளுத் துவையல்:
தேவையான பொருட்கள்:
கொள்ளு....100 கிராம்
புளி.... சிறிதளவு
சின்ன வெங்காயம்...10
காய்ந்த மிளகாய்...3
பூண்டு....3 பல்
கறிவேப்பிலை,மஞ்சள் தூள்,எண்ணெய், சீரகம்..... சிறிது
உப்பு..தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் கொள்ளை நன்கு சுத்தம் செய்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் கொள்ளு வேகத் தேவையான தண்ணீருடன், சிறிது மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து கால்மணி நேரம் வேகவைக்கவும். நன்கு வெந்ததும், கொள்ளுவில் உள்ள தண்ணீரைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
புளியை கொள்ளுடன் சேர்த்து கலந்துவிடவும். அரைக்கும்பொழுது சுலபமாக மசிந்துவிடும். தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் போடவும். பின் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறிவிட்டு கொள்ளுடன் சேர்க்கவும். நன்கு ஆறியதும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து கொள்ளுத் துவையலை சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கொள்ளு ரசம்:
தேவையான பொருட்கள்:
புளி... எலுமிச்சை அளவு
உப்பு... தேவையான அளவு
மஞ்சள் தூள்... கால் தேக்கரண்டி
பெருங்காயம்... கால் தேக்கரண்டி
தாளிக்க:
தேவையான எண்ணெய், கடுகு,காய்ந்த மிளகாய்..2, கறிவேப்பிலை.. சிறிது
அரைக்க:
சீரகம்.....1 தேக்கரண்டி
மிளகு....1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை...1 மேசைக்கரண்டி
பூண்டு....4 பல்
சின்ன வெங்காயம்..2
செய்முறை:
புளியை அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்கு கரைத்து, முன்பு வடித்து வைத்துள்ள கொள்ளுத் தண்ணீரில் சேர்க்கவும். சீரகம், மிளகு, கொத்தமல்லி விதை மூன்றையும் நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நைசாக அரைக்கவும். இந்த விழுதை கொள்ளுத் தண்ணீர் கரைசலில் சேர்க்கவும். இதனுடன் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி, புளிப்பு, உப்பு சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள கரைசலைச் ஊற்றவும்.
அடுப்பை மீடியமாக வைத்து கொதிக்கவிடவும். சிறிது நேரத்தில் நுரைகட்டி கொதிக்கவரும்போது அடுப்பை அணைத்து சிறிது கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். சாதத்தில் இந்த ரசத்தை நன்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இருமல், சளி இருக்கும்போது எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கொள்ளுத் துவையல் மற்றும் கொள்ளு ரசம் செய்வதன் மூலம் மழைக்கால நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்து, இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.