ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க... தட்டே காலியாகிடும்! சுடச்சுட ‘ஸ்வீட் கார்ன் பக்கோடா’!

ஸ்வீட் கார்ன் வைத்து இன்று ‘மொறு மொறு ஸ்வீட் கார்ன் பக்கோடா’ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
ஸ்வீட் கார்ன் பக்கோடா
ஸ்வீட் கார்ன் பக்கோடாAI Image
Updated on

ஸ்வீட் கார்ன் (இனிப்புச் சோளம்) சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமானது. மேலும் கார்போஹைட்ரேட் நிறைந்தது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தி, கண் ஆரோக்கியத்தை பாதுகாத்து, இதயத்தை காக்கிறது. மேலும், உடல் ஆற்றலை அதிகரித்து ஒட்டுமொத்த உடல்நலனுக்குப் பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தை சீராக வைக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதுடன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

வைட்டமின் பி மற்றும் கார்போஹைட்ரேட் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. ஸ்வீட் கார்னில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காரணமாக, இனிப்பு சோளம் உங்கள் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக ஸ்வீட் கார்ன் என்னும் இனிப்பு சோளம் பலருக்கும் பிடித்த சிற்றுண்டி என்று சொல்லலாம். இதை வைத்து ஆரோக்கியமான உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான பல வகையான ஸ்நாக்ஸ் செய்யலாம். அந்த வகையில் இன்று ஸ்வீட் கார்ன் வைத்து ‘மொறு மொறு ஸ்வீட் கார்ன் பக்கோடா’ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

மொறு மொறு ஸ்வீட் கார்ன் பக்கோடா :

தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் (சோளம்)- 1

கடலை மாவு - 1 கப்

வெங்காயம் - 2

ப.மிளகாய் - 1

பூண்டு - 5 பல்

ஓமம் - சிறிதளவு

தனியா - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

பெருஞ்சீரகம் - சிறிதளவு

தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - சிறிதளவு,

corn pakoda|கார்ன் பக்கோடா
kids eating corn pakodaAI Image

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ஸ்வீட் கார்னை உதிர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைத்து கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தனியாவை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றிரண்டாக தட்டி வைத்த ஸ்வீட் கார்னை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, கொரகொரப்பாக பொடித்த தனியா, ஓமம் (ஓமத்தை கைகளால் நன்றாக மசித்து போடவும்), கடலை மாவு, தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், சீரகம், பெருஞ்சீரகம், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
சுடச் சுட ஆரோக்கியம்! சத்தான அக்கி ரொட்டி மற்றும் கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி?
ஸ்வீட் கார்ன் பக்கோடா

அடுத்து அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை பக்கோடா போன்று உதிர்த்து போடவும்.

அடுப்பை வேகமாக வைத்தால் ஸ்வீட் கார்ன் வேகாது. அதுமட்டுமின்றி மேலே வெந்து விடும். உள்பகுதியில் வேகாது. எனவே அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை பொறுமையாக வேகவிடவும். பக்கோடா கலர் மாறி பொன்னிறமாக மாறியதும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும்.

இப்போது சூடான சுவையான ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெடி.

மாலை நேரத்தில் சூடான டீயுடன் சாப்பிட இந்த பக்கோடா சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பிரெட் இல்லாமலேயே பிரெட் பக்கோடா செய்யலாமா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா அசந்துடுவீங்க!
ஸ்வீட் கார்ன் பக்கோடா

ஸ்வீட் கார்னை முழுசாகவும் போடலாம். ஆனால் சில சமயம் கார்ன் வெடிக்கும் என்பதால் ஒன்றிரண்டாக தட்டி போடுவது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com