

எள் துவையல்
தேவை:
கறுப்பு எள் - அரை கப், பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, புளி - கோலி அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அவ்வளவுதான், சத்தான, சுவையான எள் துவையல் தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்ற உணவு இது.
எள்ளு பொடி
தேவை:
கருப்பு எள் – 1 கப்
சிவப்பு மிளகாய் – 4
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் எள்ளை ஒரு வெறும் வாணலியில் வறுக்கவும். வறுக்கும்போது “டிக் டிக்” என்ற சத்தம் வரும் அப்போது இறக்கவும். இதை முற்றிலும் குளிரவிடவும். பின்னர் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு மிளகாயை பொன்னிறமாக வறுக்கவும். இறுதியில் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கவும்.
மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பு, மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வறுத்த எள் சேர்த்து அரைக்கவும்.
(எள்ளு அதிக நேரம் அரைக்கக்கூடாது, இல்லையெனில் எண்ணெய் சுரந்து பேஸ்ட் ஆகிவிடும்). இதை காற்று புகாத டப்பாவில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.
எள்ளு கொழுக்கட்டை
தேவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
கறுப்பு எள் – ஒரு கப்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்),
கொள்ளு, இட்லி மிளகாய்ப்பொடி – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து எடுத்து வைத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, எள்ளு பொடி கொள்ளு பொடி, இட்லி மிளகாய்ப்பொடி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். இவற்றுடன் சிறிது நீர் சேர்த்து பூரணமாக செய்து கொள்ளவும்.
இரண்டு கப் நீருடன் சிறிதளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் கறுப்பு எள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை மோதக சொப்புகளாக செய்து பூரணத்தை உள்ளே வைத்து, 10 நிமிடம் ஆவியில் விட்டு இறக்கவும். சுவையான எள் கொழுக்கட்டை தயார்.
எள்ளு கடக் பூரி
தேவை:
மைதா மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
உருக்கிய நெய் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
கருப்பு, வெள்ளை எள் (இரண்டும் கலந்தது) – 1/2 கப்,
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.
செய்முறை:
மைதாவை வாய் அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு, உருக்கிய நெய் சேர்த்து, உப்புப் போட்டு பிரெட் தூள் மாதிரி கலக்கவும். கையில் பிடித்தால் உதிராமல் கொழுக்கட்டை மாதிரி சிறிது நேரம் உடையாமலும் இருக்கவேண்டும். அதை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து, பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும்.
அதை பூரியாகத் தேய்த்து அதன் மேல் 1 டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தடவி, மைதா 1 டீஸ்பூன் தூவி, உருட்டி பூரிகளாகத் தேய்க்கவும். அது ஈரமாக இருக்கும் போதே கருப்பு, வெள்ளை எள் கலந்து, எள் கலவையை 1/2 டீஸ்பூன் அளவாக பூரியில் வைக்கவேண்டும். சிறிது அழுத்தி ஒட்டவேண்டும். கடாயில் எண்ணெய் சூடாக்கி இந்த எள்ளு பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து, வடித்து வைத்துக்கொள்ளவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான எள்ளு கடக் பூரி ரெடி.