

ஹோலிப் பண்டிகை என்றாலே வண்ணமயமான கலர்ப் பொடிகளும், தண்டாயும், கோகனெட் குஜியாவும் கண்டிப்பாக உண்டு. ஹோலியன்று, தண்டாய் செய்வதற்கு ஏற்றவாறு, அதற்குரிய மசாலாப் பொடிகளை இரண்டு நாட்கள் முன்பாகவே அநேகர் வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொள்கின்றனர். இப்பொடி செய்யும் விதம் தெரிந்துவிட்டால், தண்டாயை ஹோலியன்று சுலபமாக செய்து ஜமாய்த்து விடலாம் (Holi Special recipes).
தண்டாய் மசாலா ரெடிமிக்ஸ் செய்யும் முறை
தேவை:
பாதாம் பருப்பு 1/2 கப்
பிஸ்தா பருப்பு 1/2 கப்
முந்திரிப் பருப்பு 1/2 கப்
பாப்பி விதைகள் 2 டேபிள்ஸ்பூன்
பெனல் விதைகள் 2. " "
ஏலக்காய் 10 (பொடித்துக் கொள்ளவும்)
கல்கண்டு 1/2 கப் (பொடித்தது)
குங்குமப்பூ 1 சிட்டிகை
ஜாதிக்காய் பவுடர் 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்
ரோஜா இதழ் 1 கப்
செய்முறை:
முதலில், ட்ரை ஃப்ரூட்ஸ் பருப்பு வகைகளையும், விதைகள் வகைகளையும் ஒரு PAN இல் போட்டு அடுப்பின் மீது வைத்து மீடியம் சூட்டில் 5-6 நிமிடங்கள் வறுக்கவும். அவைகள் ஃப்ரௌன் நிறம் ஆகும்போது, ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். இத்துடன், ஏலக்காய்ப்பொடி, கல்கண்டுப் பொடி, நட்மெக் பவுடர், மிளகுத் தூள், ரோஜா இதழ் இவைகளைக் கலந்து மீண்டும் லேசாகப் பொடி செய்து கொள்ளவும். தண்டாய் ரெடி மிக்ஸ் இப்போது ரெடி.
ஹோலியன்று, நன்கு காய்ச்சி ஆறவிட்ட அரை லிட்டர் பாலில், 5 டேபிள் ஸ்பூன் தண்டாய் ரெடிமிக்ஸ் பொடி கலந்து ஃப்ரிட்ஜ்ஜில் ஒருமணி நேரம் வைத்திருந்து எடுக்கவும்.
இதன் மீது, கொஞ்சம் துருவிய பாதாம், முந்திரிப் பருப்புக்களையும், சிறிது ரோஜா இதழ்களையும் போட்டு அலங்கரித்து குடிக்கக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சிலர் பாலிற்குப் பதிலாக புளிக்காத கெட்டித் தயிரில், தண்டாய்ப் பொடியை மிக்ஸ் செய்து அருந்துவதுண்டு.
ஹோலி தண்டாய், ஹெல்தி தண்டாய்!
கோகனெட் குஜியா
தேவை:
நல்ல தேங்காய்ப் பூ 2 கப்
கசகசா 1 டீ ஸ்பூன்
ட்ரை ஃப்ரூட்ஸ் (பொடித்தது) 1 கப்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
வெண்ணை 2 டேபிள் ஸ்பூன்
நெய் 1/4. கப்
சலித்த கோதுமை மாவு 2 கப்
பால் 1 கப்
ரீஃபைன்டு ஆயில் 1/2 லிட்டர்
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில், சிறிது நெய்யை வாணலியில் விட்டு சுடவைத்து, தேங்காய்ப்பூவைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்தெடுக்கவும்.
எள்ளை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பொடித்த. ட்ரை ஃப்ரூட்ஸ், எள்பொடி, கச கசா ஆகியவைகளை வறுத்த தேங்காயுடன் மிக்ஸ் செய்துகொள்ளவும். இத்துடன் பொடித்த வெல்லம், ஏலப்பொடி, சிறிது வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
வாயகன்ற கிண்ணத்தில், கோதுமை மாவைப் போட்டு, நடுவே குழிக்கவும். மீதி நெய்யை காய்ச்சி மாவின் நடுவே விட்டு மிக்ஸ் செய்தபின், கொஞ்சம் தண்ணீர், பால் விட்டுப் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் அந்த மாவை மீண்டும் நன்றாக பிசைந்து ஒரே அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சப்பாத்தி மாதிரி சிறிய அளவில் இட்டபின், அதனுள்ளே தேங்காய்பூ மசாலா மிக்ஸை கொஞ்சமாக வைத்து மூடி, ஓரங்களை வளைவுபோல் அழகாக மடித்துவிடவும். அனைத்து உருண்டைகளையும் இது போல் ரெடி செய்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தயார் செய்து வைத்து இருக்கும் குஜியாவை இரண்டிரண்டாக மெதுவாக போட்டு பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும். நன்றாக ஆறிய பிறகு, காற்று புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும். சாப்பிட மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும் ஹோலி ஸ்பெஷல் குஜியா.