சமையல்... சின்ன சின்ன சிக்கல்கள்... சந்தேகங்கள்... நொடியில் சரிசெய்ய சில தந்திரங்கள்!

Cooking
Cooking
Published on

சமையல் என்பது ஒரு கலை. அது அனுபவத்தின் மூலமாக மட்டுமே முழுமை பெறும். இருந்தாலும், சில சமயங்களில் சில சின்ன சின்ன தவறுகள் நம்முடைய சமையல் அனுபவத்தை முழுமையாக கெடுத்துவிடுகின்றன. ஆனால் கவலை வேண்டாம். இந்த மாதிரியான சமையல் குழப்பங்களை எளிமையாக சரிசெய்ய சில தந்திரங்கள் உள்ளன. இந்த தொகுப்பில், நாம் தினமும் சமையலில் எதிர்கொள்ளும் சில சிக்கல்களையும், அவற்றுக்கான எளிய தீர்வுகளையும் காணலாம்.

Q

உளுந்தவடைக்கு அரைத்த மாவில் தண்ணீர் அதிகமானால் என்ன செய்யலாம்?

A

வடை மாவில் சிறிது பச்சரிசி மாவு தூவினாலும், அது தண்ணீரை உறிஞ்சி விடும். அல்லது ஒரு டீஸ்பூன் நெய் விட்டாலும் மாவு இறுகிவிடும். பச்சரிசி மாவு இல்லை என்றால் கொஞ்சம் அவலை பொடித்து கலந்து வடை தட்டினாலும் வடை சுவையாக இருக்கும். நன்றாக வரும்.

Q

பாலுக்கு உறை ஊற்ற தயிர் இல்லை... என்ன செய்யலாம்?

A

கவலை வேண்டாம். ஒரு மிளகாய் வற்றலை உடைத்து ஆறிய பாலில் போட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் தயிர் ரெடி.

Q

சப்பாத்தி செய்த பின் தோசை சுடும் போது கல்லிலிருந்து தோசை வராமல் ஒட்டிக் கொள்ளும். இதற்கு என்ன செய்யலாம்?

A

ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக வெட்டி கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை சுடுவதற்கு முன் தேய்த்தால் போதும் சுலபமாக தோசையை எடுக்க வரும்.

Q

குலோப் ஜாமுன் செய்யும்போது உருண்டைகள் கடினமாகிவிட்டால் என்ன செய்வது?

A

ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து எடுத்தால் அந்த சூட்டில் ஜாமூன் மென்மையாகிவிடும்.

Q

பாயாசம் செய்யும் போது பால் திரிந்து போனால் என்ன செய்வது?

A

பாயாசத்தில் 2 சிட்டிகை சமையல் சோடா மாவு போட்டால் சரியாகிவிடும்.

Q

கலந்த சாதம், வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது பொல பொலவென்று உதிரியாக இருக்க என்ன செய்யலாம்?

A

குக்கரில் வைத்து எடுக்கும் போது மூடியைத் திறந்ததும் சிறிது எலுமிச்சை சாறை விட்டு கிளறி விட்டால் உதிரியாக வரும்.

Q

பக்கோடா பொரிக்கும்போது மொறு மொறுப்பாக இருக்க என்ன செய்யலாம்?

A

பக்கோடா மாவில் ரவை அல்லது வேர்கடலை பொடி செய்து கலந்து போட்டால் பக்கோடா கரகரப்பாக இருக்கும்.

Q

வெங்காய பக்கோடா கம கமவென வாசனையாக இருக்க என்ன செய்யலாம்?

A

ஒரு வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை மாவில் கலந்து பக்கோடா செய்தால் அந்த வாசமே தெருவையே கூட்டும்.

Q

முட்டை வேக வைக்கும் போது விரிசல் விடாமல் இருக்க என்ன செய்யலாம்?

A

முட்டை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைத்தால் விரிசல் வராது.

Q

சேமியா பாயசம் செய்யும் போது குழைந்து போகாமல் இருக்க என்ன செய்யலாம்?

A

சேமியா பாயாசம் செய்யும் போது இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் போதும். சேமியா பிரிந்து தனித்தனியாகி விடும்.

Q

தயிர் வடை உடனே ஊற என்ன செய்யலாம்?

A

வடை சுட்டு எடுத்த பின் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறிவிடும்.

Q

கொழுக்கட்டை சொப்பு செய்யும் போது விரிசல் விடாமல் இருக்க என்ன செய்யலாம்?

A

மாவு அரைக்கும் போது சிறிது உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து செய்யலாம்..

மாவு கிளறும் போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினாலும் விரிசல் வராது.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடல் கூறும் ரகசியங்கள்: வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகள்!
Cooking
Q

பனீர் வெட்டும் போது உடையாமல் துண்டுகளாக எப்படி போடலாம்?

A

பனீர் வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்து பின் பனீரை வெட்டினால், உடையாமல் , உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும்

Q

எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க என்ன செய்யலாம்?

A

எலுமிச்சம்பழம் வாடாமல் இருக்க தினமும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால் வாடாமலும், கெட்டுப் போகாமலும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பயன்படுத்தாத பொருட்களைக் கொண்டு அசத்தலான சமையல் செய்வது எப்படி?
Cooking
Q

பாகற்காய், கோவைக்காய் பழுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

A

பாகற்காய், கோவைக்காய் நீரில் கழுவி விட்டு நறுக்கி டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் வாடாது.

Q

தயிர் புளிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

A

தயிரில் தேங்காயை சிறு துண்டுகளாக போட்டு வைத்தால் புளிக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com