

உங்களுக்கு என்றாவது வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றினால் இந்த ‘மூங்லெட் (Moonglet)’ முயற்சித்துப் பாருங்கள். பார்ப்பதற்கு அப்படியே முட்டை ஆம்லெட் போலவும், சற்று தடிமனான பீட்சா போலவும் உப்பலாக இருக்கும் இந்த உணவு, முழுக்க முழுக்கப் பாசிப்பருப்பால் செய்யப்படுவது.
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில் சேர்க்கப்படும் காய்கறிகள், வெண்ணெயின் மணம், இந்த உணவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அதிக புரதச்சத்து நிறைந்த இந்த வெஜிடபிள் மூங்லெட்டை, நம் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே மிகவும் சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், குடைமிளகாய் - தலா 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
சமையல் சோடா - ½ டீஸ்பூன்
வெண்ணெய் மற்றும் எண்ணெய் - சுடுவதற்கு
உப்பு, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு.
செய்முறை!
முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பருப்பு நன்கு ஊறியதும், தண்ணீரை முழுமையாக வடிகட்டிவிட்டு, மிக்ஸியில் சேர்க்கவும்.
இதோடு 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மட்டும் சேர்த்து, இட்லி மாவை விடச் சற்று கெட்டியான பதத்திற்கு நைஸாக அரைத்துக்கொள்ள வேண்டும். மாவு அதிக தண்ணீராகிவிட்டால் மூங்லெட் உப்பலாக வராது.
அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும். மாவை ஒரு கரண்டியால் 5 நிமிடங்கள் தொடர்ந்து ஒரே திசையில் நன்கு அடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மாவுக்குள் காற்று புகுந்து, மூங்லெட் மிகவும் மென்மையாகவரும்.
இப்போது இந்த மாவில் மஞ்சள் தூள், சீரகம், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக்கலக்கவும்.
மூங்லெட் சுடுவதற்குச் சற்று முன்பு மட்டுமே மாவில் ஈனோ அல்லது சமையல் சோடாவைச் சேர்க்கவேண்டும். ஈனோ சேர்த்ததும் மாவு லேசாக நுரைத்து வரும், உடனடியாக ஒரு கரண்டியால் மெதுவாகக் கலந்துவிடவும்.
இப்போது ஒரு சிறிய பேன் அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றவும். மிதமான சூட்டில், தயார் செய்து வைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடிமனாக ஊற்றவும்.
மாவின் மேலே சிறிது கொத்தமல்லித் தழைகளைத் தூவி, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மூடி போட்டு வேகவிடவும். ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும், மெதுவாகத் திருப்பிப் போட்டு மறுபக்கமும் வேகவைக்க வேண்டும்.
நடுவில் மாவு வேகாமல் இருப்பதைத் தவிர்க்க, திருப்பிப் போட்ட பிறகு கரண்டியால் நடுப்பகுதியில் ஒரு X போல சிறிய கீறல் போட்டு, அங்குச் சிறிது வெண்ணெயை வைக்கவும். வெண்ணெய் உருகி உள்ளே சென்று மாவைச் சுவையாக வேகவைக்கும்.
இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாகவும், உள்ளே பஞ்சு போலவும் வெந்தவுடன் எடுத்தால், சுடச்சுட வெஜிடபிள் மூங்லெட் தயார். இன்றே இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.