

ஹோட்டலில் வாங்கும் அதே சுவையுடன் பரோட்டா சால்னா வீட்டிலேயே மிகவும் சுவையாகவும் எளிதாகவும் எப்படி செய்வது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ஹோட்டல் பரோட்டா சால்னா
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2 (மெலிதாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ½ டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 ½ டீஸ்பூன்
கரம்மசாலா - ½ டீஸ்பூன்
எண்ணெய் – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, சோம்பு, வற்றல், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, லவங்கம்_ தலா 1 தாளிப்பதற்கு
அரைக்க
துருவிய தேங்காய் - ½ கப்
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
சோம்பு – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
கல்பாசி – சிறிய துண்டு
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிகவும் நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களைப் போடவும். பின் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர், தக்காளி, உப்பு சேர்த்து மைய வதக்கி அத்துடன் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதங்கும் வரை வேகவிடவும். பிறகு தீயைக் குறைத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து லேசாக வதக்கவும். மசாலா வதங்கியதும் 2 முதல் 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து கலக்கவும்.
சால்னா சற்று தண்ணியாக இருக்க வேண்டும், கொதிக்கும் போது கெட்டியாகும். மிதமான தீயில் 10 முதல் 12 நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து, இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான சால்னா தயார்.
சுடச்சுட பரோட்டாக்களின் மீது, நல்ல சூடான சால்னாவை தாராளமாக ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைத்து சாப்பிட்டால் ஹோட்டல் சுவையை மிஞ்சும் பரோட்டா சால்னா தயார்.
சால்னா தயாரிப்பில் சுவைக்கு பின்னால் உள்ள ரகசியங்கள்
1. ஹோட்டல் சால்னாவின் பிரத்யேக சுவைக்கு தேங்காய், கசகசா, முந்திரி, பெருஞ்சீரகம் பொட்டுக்கடலை மற்றும் கல்பாசி சேர்த்து நைசாக அரைத்துச் சேர்ப்பதே முக்கிய காரணம்.
2. கடைகளில் வாங்கும் பொடிகளை விட, முழு மசாலாப் பொருட்களை லேசாக வறுத்து அரைத்துச் சேர்க்கும்போது ஹோட்டல் வாசனை முழுமையாகக் கிடைக்கும்.
3. சால்னாவிற்கு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி, பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கினால்தான் சால்னாவிற்கு நல்ல நிறமும் கெட்டியான பக்குவமும் கிடைக்கும்.
4. தக்காளியின் அளவு வெங்காயத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும்; தக்காளி அதிகமானால் சால்னா புளிப்புச் சுவையாக மாறிவிடும்.
மேலே குறிப்பிட்ட எளிய முறைகளையும், 4 முக்கிய ரகசியங்களையும் பின்பற்றினால், கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் சுவையான மற்றும் சுகாதாரமான ஹோட்டல் பரோட்டா சால்னாவை நம் வீட்டிலேயே மிக எளிதாகச் செய்து மகிழலாம். சரியான பக்குவத்துடன் செய்து, குடும்பத்தினருடன் இந்த சுவையான உணவைப் பகிர்ந்து உண்பது தனி மகிழ்ச்சியைத் தரும்.
ஹோட்டல் சுவையை அப்படியே மிஞ்சும் அசத்தல் பரோட்டா சால்னாவை எந்தவிதக் கலப்படமும் இன்றி உங்கள் வீட்டிலேயே மிகச் சுவையாகத் தயாரித்து அசத்தலாம்.