ஹோட்டல் பரோட்டா போல வீட்டிலேயே லேயர் லேயராக வருவதற்கு இந்த ரகசியங்கள் போதும்!

வீட்டிலேயே கடையைப் போல லேயர் பிரியும் பரோட்டா சுட எளிய வழிகள்.
பரோட்டா
பரோட்டாGemini image
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

என்னதான் மைதா உடலுக்கு நல்லதல்ல என்று எச்சரித்தாலும் மைதா சேர்க்கப்படும் பேக்கரி அயிட்டங்கள் மற்றும் பரோட்டா போன்றவைகளை வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பி உண்கிறோம். வெறும் தீமை என்றால் ஏன் மைதாவை தடை செய்ய வில்லை எனும் கேள்வி வரும். ஆனால் இதிலும் நன்மை தீமை இரண்டும் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மைதாவின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை முதலில் அறிவோம்.

மைதா என்பது கோதுமையைச் சுத்திகரித்துத் தயாரிக்கப்படும் மாவு. இதில் நன்மைகளும் குறைபாடுகளும் சம அளவில் உள்ளன.

மைதாவின் நன்மைகள்

மைதா உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். கார்போஹைட்ரேட் இதில் உள்ளதால் உடனடி ஆற்றல் தரும் உணவாக உள்ளது. மேலும் இதில் இயற்கையாகவே கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது.

மென்மையான உணவுகளுக்கு பொருந்தும் மைதா பரோட்டா, பிஸ்கட், கேக், ரொட்டி போன்றவற்றை சுவையுடனும் தயாரிக்க உதவுகிறது.

மைதாவின் தீமைகள்

இதில் நார்ச்சத்து குறைவு என்பதால் மலச்சிக்கல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். அதிக அளவில் சாப்பிடும்போது ரத்தச் சர்க்கரை வேகமாக உயரலாம்.

முழுக் கோதுமை மாவுடன் ஒப்பிடும்போது நார்ச்சத்து மற்றும் சில வைட்டமின்கள், தாதுக்கள் என ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்.

மைதா உணவுகளை அதிகமாகவும், அதிக எண்ணெய் அல்லது சர்க்கரையுடனும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

பரோட்டா
பரோட்டாGemini image

சரி மைதா உணவுகளை சாப்பிடலாமா?

தாராளமாக சாப்பிடலாம். ஆனால் மைதாவை எப்போதாவது அளவோடு சாப்பிடுவது பெரும்பாலான ஆரோக்கியமானவர்களுக்குப் பிரச்சினையில்லை. அதே சமயம் அன்றாட உணவில் முழுக் கோதுமை மாவு, சிறுதானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. ஆகவே மைதா சாப்பிடுவதால் மட்டுமே நோய்கள் ஏற்படும் என்று கூற முடியாது. சாப்பிடும் அளவு, உணவு தயாரிக்கும் முறை, ஒட்டுமொத்த உணவுப் பழக்கம் ஆகியவையும் முக்கியம் என்கின்றனர் உணவு வல்லுநர்கள்.

இதெல்லாம் சரி.. மைதா என்றாலே பரோட்டா தான் நினைவுக்கு வரும். எப்போதாவது பரோடா சாப்பிட ஆசைப்பட்டால் ஹோட்டல் தான் போக வேண்டும். காரணம் வீட்டில் செய்யும் பரோட்டா ஹோட்டல் பரோட்டா போல லேயர் லேயராக இருப்பதில்லை என்பதே. ஹோட்டல் பரோட்டா போல வீட்டில் செய்ய முடியுமா?

நிச்சயம் முடியும்.. கொஞ்சம் நேரம் ஒதுக்கினால்..ஹோட்டலில் கிடைக்கும் பரோட்டாவைச் சாப்பிடும்போது அதன் மிருதுவான தன்மையும், ஒன்றன் மேல் ஒன்றாகப் பிரியும் மெல்லிய லேயர்களும் நம்மை சாப்பிடத் தூண்டும். அதேபோன்ற பரோட்டாவை வீட்டிலும் செய்யலாம். அதற்கு மாவின் பதம், பிசையும் முறை, ஓய்வெடுக்கும் நேரம், எண்ணெய் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.

ஹோட்டல் பரோட்டா போல லேயர் லேயராக வர மாவு பிசையும் முறை மற்றும் 5 ரகசியங்கள் உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்

உப்பு –1 டீஸ்பூன்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – சுமார் ¾ கப் அல்லது தேவைக்கேற்ப

மாவை ஊறவைக்க எண்ணெய் – தேவையான அளவு

சமைக்க எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

மாவு பிசையும் முறை

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் எண்ணெய் சேர்த்துப் பிசிறி கலந்துகொள்ளவும். இப்போது அந்த மாவில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைப் பிசையவும். தண்ணீரை ஒரே நேரத்தில் ஊற்றாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பிசைவது முக்கியம்.

சப்பாத்தி மாவைப் போலக் கெட்டியாக இல்லாமல், மென்மையாகவும் சற்று ஒட்டும் தன்மையுடனும் இருக்குமாறு மாவை பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் விட்டு மீண்டும் மாவைச் சுமார் 10–15 நிமிடங்கள் நன்றாகப் அழுத்திப் பிசையவும். இதனால் மாவு மென்மையாகி, இழுக்கும்போது எளிதில் கிழியாமல் இருக்கும்.

இப்போது மாவு முழுவதும் மீண்டும் சிறிது எண்ணெய் தடவி மூடி வைக்கவும். குறைந்தது 1–2 மணி நேரம் ஊற வைப்பது நல்லது.

இப்போது மாவைச் சம அளவுள்ள உருண்டைகளாகப் பிரிக்கவும். ஒவ்வொரு உருண்டைக்கும் எண்ணெய் தடவி, முடிந்தவரை மெல்லியதாக விரித்துத் தேய்க்கவும். இப்போது லேயர்களை உருவாக்க விரித்த மாவின் மீது சிறிது எண்ணெய் தடவவும். பின்னர் விசிறி மடிப்பைப் போல முன்னும் பின்னுமாக மடித்து, நீளமான பட்டையாக மாற்றவும். அந்தப் பட்டையை சுருள் போலச் சுருட்டி ஒரு தட்டில் வைத்து மேலே சிறிது எண்ணெய் விட்டு மீண்டும் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

தயார் செய்த பரோட்டாவைத் தட்டவும். உருண்டையாக சுருட்டி வைத்த மாவை மெதுவாகக் கையால் அழுத்தி வட்டமாகத் தட்டவும். மிகவும் அழுத்தித் தேய்க்க வேண்டாம்; அப்படிச் செய்தால் லேயர்கள் ஒன்றாகச் சேர்ந்துவிடலாம். அடுப்பில் மிதமான சூட்டில் தோசைக்கல்லைச் சூடாக்கி, சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவவும். பரோட்டாவை இருபுறமும் பொன்னிறமாகவும் நன்றாக வெந்தும் வரும் வரை சுட்டு எடுக்கவும்.

இறுதியாக, சுட்ட பரோட்டாவைக் கைகளால் இருபுறமும் மெதுவாகத் தட்டிவிட்டால் லேயர்கள் பிரிந்து, பரோட்டா மென்மையாகும். மேலே சொன்ன அளவில் சுமார் 6–8 பரோட்டாக்கள் செய்யலாம்.

ஹோட்டல் பரோட்டாவின் 5 முக்கிய ரகசியங்கள் இவைகள் தான்

1. மாவு மென்மையாக இருக்கும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் பரோட்டா கடினமாகிவிடும். மென்மையான, சற்று ஒட்டும் தன்மையுள்ள மாவுதான் எண்ணெய் விடும் போது மெல்லியதாக விரிக்க உதவும்.

2. பிசைந்த மாவை உடனே விரிக்க முயற்சிக்க வேண்டாம். 1–2 மணி நேரம் ஊற விடும்போது, மாவை இழுப்பது எளிதாகும். விரிக்கும்போது மாவு மீண்டும் சுருங்குவதும் குறையும்.

இதையும் படியுங்கள்:
சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
பரோட்டா

3. பரோட்டாவின் லேயர்கள் நன்றாக வருவதற்கு மாவை முடிந்தவரை மெல்லியதாக விரிப்பது முக்கியம். மாவு கிழியாமல் விரிக்கப் போதுமான அழுத்தம் கொடுப்பதும் அவசியம்.

4. ஒவ்வொரு மடிப்பிலும் எண்ணெய் தடவுவது அதி முக்கியமானது. மெல்லியதாகத் திரட்டிய மாவு லேயர் மீது எண்ணெய் தடவி மடிக்கும் நிலையினால் பரோட்டா சுடும்போது லேயர்கள் ஒன்றோடொன்று எளிதாகப் பிரிய உதவுகிறது. இப்போது எண்ணெயை அளவோடு பயன்படுத்தவும்.

5. அதிக கனல் ஆகாது. மிக அதிகமான சூட்டில் சுட்டால் வெளிப்புறம் சீக்கிரம் சிவந்துவிடும் என்பதுடன் உள்ளே சரியாக வேகாமல் போகலாம். மிதமான சூட்டில் இருபுறமும் நன்றாகச் சுட்டு எடுப்பது நல்லது.

எப்படி செய்தாலும் பரோட்டா கடினமாகிறதே ? என்ன செய்ய வேண்டும் ?

மாவு சரியாக ஊறவில்லை எனில் ரப்பர் போல இருக்கும். ஆகவே மாவைத் தயாரித்து நீண்ட நேரம் மூடி விடவும்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் ரகசியம் கசிந்தது… இப்படி மாவு பிசைந்தால் பட்டுரே பலூன் போல உப்பி வரும்!
பரோட்டா

லேயர்கள் வரவில்லை

மாவு தடிமனாக விரிக்கப்பட்டிருந்தால் லேயராக வராது என்பதால் கூடியவரை மெல்லிய தாளாக விரித்து மடிக்கவும்.

பரோட்டா மிகவும் கடினமாக உள்ளதற்கு காரணம் மாவு கெட்டியாகவோ அல்லது அதிக நேரம் தீயில் சுடப்பட்டோ இருக்கலாம். மேலும் பரோட்டா உலர்ந்து போகாமல் இருக்க சுட்ட பிறகு திறந்தவெளியில் வைக்காமல் மூடிய பாத்திரத்தில் வைக்கவும்.

மேலும் கூடுதல் ருசிக்கு விருப்பப்பட்டால் தண்ணீரின் ஒரு பகுதியை பாலால் மாற்றலாம். இதனால் பரோட்டாவின் மென்மையும் சுவையும் மாறலாம். சர்க்கரை சேர்ப்பதும் சுவை அதிகரிக்கும்.

இறுதியாக சுருக்கமாக ஹோட்டல் பரோட்டாவின் உண்மையான ரகசியம் மாவை மென்மையாகப் பிசைப்பது, போதுமான நேரம் ஓய்வெடுக்க விடுவது, மெல்லியதாக விரிப்பது, ஒவ்வொரு மடிப்பிலும் எண்ணெய் தடவுவது ஆகிய நான்கும் தான். இவற்றைச் சரியாகச் செய்தால் வீட்டிலேயே லேயர் லேயராகப் பிரியும் சுவையான பரோட்டாவைத் தயாரிக்கலாம்.

மாவு பிசையும் பதம் முதல் சுடும் முறை வரை ஹோட்டல் சமையல்காரர்களின் அத்தனை ரகசியங்களையும் அறிந்துகொள்ளும் திருப்தி.