தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொள்கிறதா? கிரிஸ்ப்பியான தோசைக்கு இதோ எளிய ட்ரிக்ஸ்!

தோசை மென்மையாவதையும் கல்லில் ஒட்டுவதையும் தவிர்க்க உதவும் எளிய சமையல் குறிப்புகள்.
மொறுமொறு தோசை - Crispy Dosa Tips
மொறுமொறு தோசை - Crispy Dosa Tips
Updated on

மொறு மொறு தோசைக்காக இட்லி மாவை விட தனி தோசை மாவை தளர்வாக தயார் செய்வது முக்கியம். கல்லின் சூட்டை தண்ணீர் தெளித்து சோதித்து, மிதமான சூட்டில் கரண்டியால் வட்டமாக மெதுவாகப் பரப்ப வேண்டும். ஓரங்களில் நெய் அல்லது எண்ணெய் சில துளிகள் போதுமானது; அதிக எண்ணெய் தோசையை கனமாக்கும். முதல் தோசையை சோதனை தோசையாகக் கொண்டு, ஒவ்வொரு தோசைக்கும் இடைவெளி விட்டு சுடினால் சுடச்சுட கிரிஸ்பி தோசை கிடைக்கும்.

எப்படி பார்த்துப் பார்த்து “தோசை ஊற்றினாலும் ஹோட்டல் மாதிரி மொறுமொறுப்பாக வரவே மாட்டேங்குது!” – இது பல வீடுகளின் அம்மாக்களின் கவலை.

எத்தனை சிக்கல்கள் நமக்குத்தான். மாவு நன்றாக அரைத்திருந்தாலும், தோசைக்கல்லில் ஊற்றியதும் தோசை மென்மையாகிவிடுகிறது. சில நேரம் கல்லில் ஒட்டிக்கொள்கிறது. இன்னும் சில நேரம் ஓரங்கள் மொறுமொறுப்பாகவும், நடுப்பகுதி தடிமனாகவும் ஆகிவிடுகிறது.

“எப்படித்தான் அந்த ஹோட்டல் தோசை இவ்வளவு மொறு மொறுப்பாக வருகிறதோ?” என்று யோசிப்பவர்களுக்கு இதோ அந்த ரகசியம்!

உண்மையில், மொறு மொறு தோசையின் ரகசியம் மாவில் மட்டும் இல்லை… மாவு, கல், சூடு, ஊற்றும் முறை – இந்த நான்கின் கூட்டணியில்தான் இருக்கிறது!

மாவில்தான் முதல் ரகசியம்!

ஹோட்டல் ஸ்டைல் தோசைக்கு இட்லி மாவை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தோசைக்கான மாவைச் சற்றுத் தளர்வாக வைத்துக்கொள்வது நல்லது.

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை சரியான விகிதத்தில் ஊறவைத்து அரைக்க வேண்டும்.

சிறிதளவு வெந்தயம் சேர்த்தால் மாவு நன்றாகப் புளிக்க உதவும்.

முக்கியமான விஷயம் – மாவை அதிகமாகப் புளிக்க விடக்கூடாது. அதிகப் புளிப்பு வந்தால் தோசையின் சுவையும், பதமும் மாறிவிடும்.

மாவு நன்றாகப் புளித்த பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கரண்டியில் எடுத்தால் எளிதாக வழியும் அளவுக்கு பதப்படுத்த வேண்டும்.

மொறுமொறு தோசை - Crispy Dosa Tips
மொறுமொறு தோசை - Crispy Dosa Tips

கல்லின் சூடு… மிக முக்கியம்!

தோசைக்கல் அதிகமாகச் சூடாக இருந்தால் மாவு ஊற்றியவுடன் பிடித்துக்கொள்ளும். மிகவும் குறைவான சூட்டில் ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வராது. எனவே, மிதமான முதல் மிதமான அதிக சூடு சரியானது.

கல்லில் சிறிது தண்ணீர் தெளித்துப் பார்த்தால் அது ‘சுர்’ என்று ஆவியாக வேண்டும். உடனே மாவை ஊற்றாமல், தேவையான அளவுக்கு சூடு சமநிலைக்கு வந்ததும் தோசை ஊற்றலாம்.

மாவை எப்படி ஊற்றுவது?

இதுதான் அடுத்த ரகசியம்!

கரண்டி நிறைய மாவை ஒரே இடத்தில் ஊற்றி, வேகமாகவும் மெதுவாகவும் வட்டமாகச் சுற்றி தேய்க்க வேண்டும். மிகவும் அழுத்தித் தேய்த்தால் மாவு கல்லிலிருந்து பிரியாமல் போகலாம்.

மெல்லிய தோசை வேண்டுமென்றால் மாவை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஓரங்களில் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டால், அந்த ஓரங்கள் அழகாகப் பொன்னிறமாகி ‘கிரிஸ்ப்’ ஆகும்.

தோசையை உடனே திருப்ப வேண்டிய அவசியமில்லை. கீழ்ப்பக்கம் நன்றாக வெந்து, ஓரங்கள் கல்லிலிருந்து தானாகவே பிரியத் தொடங்கும்போது எடுத்தால் போதும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
மொறுமொறு தோசை - Crispy Dosa Tips

மொறு மொறு தோசைக்கு மேலும் சில டிப்ஸ்!

1. மாவின் பதம்:

மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் தோசை தடிமனாகிவிடும். மிகவும் நீர்த்துப் போனால் கல்லில் பிடிக்காது. கரண்டியில் எடுத்துத் தூக்கும்போது மாவு சீராக வழியும் பதமே சிறந்தது.

2. எண்ணெய் அதிகம் வேண்டாம்:

மொறுமொறுப்பாக வேண்டும் என்பதற்காக அதிக எண்ணெய் ஊற்ற வேண்டியதில்லை. ஓரங்களில் சில துளிகள் எண்ணெய் அல்லது நெய் விட்டாலே போதும். அதிக எண்ணெய் தோசையைச் சற்று கனமாக்கிவிடும்.

3. முதல் தோசை ஏன் சரியாக வருவதில்லை?

முதல் தோசை சரியாக வரவில்லை என்றால் மாவில் மட்டும் குறை இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். கல்லின் சூடு சரியான நிலைக்கு வராமல் இருக்கலாம். முதல் தோசையை ‘சோதனை தோசை’ என்று வைத்துக் கொள்ளுங்கள்!

4. ஒவ்வொரு தோசைக்கும் இடைவெளி:

தோசை எடுத்தவுடன் உடனே அடுத்த மாவை ஊற்றாமல், கல்லின் சூட்டைச் சற்று கவனியுங்கள். அதிகச் சூடு இருந்தால் லேசாகத் தண்ணீர் தெளித்து சமப்படுத்தலாம்.

5. தோசையை மூடி வைக்காதீர்கள்:

மொறுமொறுப்பான தோசைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூடி வைத்தால், ஆவி காரணமாக அவற்றின் மொறுமொறுப்பு குறைந்துவிடும். பரிமாறும் வரை திறந்தவாறே வைத்திருப்பது நல்லது.

6. பரிமாறும் நேரம்தான் முக்கியம்:

தோசை கல்லிலிருந்து இறங்கிய அடுத்த சில நொடிகள்தான் அதன் உச்சமான ‘கிரிஸ்பி’ நேரம். எனவே சுடச்சுடத் தட்டில் வைத்து, உடனே சட்னி அல்லது சாம்பலுடன் பரிமாறினால் சுவை இரட்டிப்பாகும்.

இதையும் படியுங்கள்:
சைட் டிஷ் வேண்டாம்… 10 நிமிடத்தில் சுவையான வெங்காய சப்பாத்தி ரெடி!
மொறுமொறு தோசை - Crispy Dosa Tips

7. கடைசி ரகசியம் – பொறுமை!

தோசை என்பது அவசர சமையல் அல்ல. கல்லின் சூட்டை உணர்ந்து, மாவின் பதத்தைப் பார்த்து, கையைப் பழக்கப் படுத்தினால் மட்டுமே ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான அழகான தோசை கிடைக்கும்.

கடைசியாக ஒரு விஷயம்…

மொறுமொறு தோசைக்கு மாவை மட்டும் குறை சொல்லாதீர்கள். கல்லையும், சூட்டையும், உங்கள் கையையும் கொஞ்சம் கவனியுங்கள்!

சரியான மாவு + சரியான பதம் + சரியான சூடு + சரியான கைப்பக்குவம் = வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு தோசை!

சாம்பார், தேங்காய் சட்னி, காரச் சட்னி எதுவாக இருந்தாலும், சூடான தோசையின் ஓரம் ‘கிரக்’ என்று உடையும் அந்த முதல் சத்தமே… சமையல் வெற்றியின் அறிவிப்பு!

என்னங்க… எங்கே கிளம்பிட்டீங்க?

உங்கள் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கிறவங்களுக்கும் இன்று மொறு மொறு தோசை சுட்டுக் கொடுக்க ரெடியாயிட்டீங்களா?

இத்தனை ரகசியங்களையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, இனிமேல் வீட்டுத் தோசைக்கல்லிலேயே ஹோட்டல் ஸ்டைல் தோசைதான்!

சரி… மாவு ரெடியா? தோசைக்கல் ரெடியா?

அப்படியென்றால் நீங்களும் ரெடியா?

ஓகே… போய் மொறு மொறுன்னு தோசை சுடுங்க!

சுடச்சுட எங்களுக்கும் ஒரு தோசை எடுத்து வையுங்க!

logo
Kalki Online
kalkionline.com