

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவு பட்டியலில் கண்டிப்பாக பூரிக்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு. பூரி என்றாலே உடனே நினைவுக்கு வருவது உருளைக்கிழங்கு மசாலாதான். சிலர் வீட்டில் என்னதான் பலமுறை செய்து பார்த்தாலும் ஹோட்டல் பூரி மசாலா போல வரவில்லையே என்று அலுத்துக்கொள்வது உண்டு.
இதற்கு சில ரகசிய டிப்ஸ்களை பயன்படுத்தினால் போதும் ஹோட்டல் சுவையை மிஞ்சும் அளவுக்கு வீட்டிலேயே ருசியாக மசாலா பூரியை தங்க நிறத்தில் செய்து அசத்தலாம்.
ஹோட்டல் சுவையில், தண்ணீர் போல் ஆகாமல் நல்ல கெட்டியான பக்குவத்தில், ஈர்க்கும் மஞ்சள் நிறத்துடன் பூரி மசாலா செய்ய சில முக்கிய குறிப்புகளைப் பின்பற்றினாலே போதும்.
கடலை மாவு கரைசல் சேர்த்தல்:
மசாலா தண்ணீர் போல் ஆகாமல் கெட்டியாக இருப்பதற்கு இதுவே முக்கியமான ரகசியமாகும். உருளைக்கிழங்கை வேகவிட்டு, தோல் நீக்கி மசித்துப் போட்ட பிறகு மசாலா தண்ணீர் போல் இருந்தால் அதற்கு மசாலா தயாராகும் பொழுது ஒரு ஸ்பூன் கடலைமாவை கால் கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து மசாலாவில் ஊற்றிவிடவும்.
மாவை ஊற்றிய பிறகு 2 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இது மசாலாவிற்கு ஹோட்டல் போன்ற பளபளப்பான, கெட்டித் தன்மையைத் தரும்.
உருளைக்கிழங்கை மசிக்கும் பக்குவம்:
உருளைக்கிழங்கை முழுமையாக நைசாக மசிக்கக் கூடாது. பாதி உருளைக்கிழங்கை நன்றாக மசித்தும், மீதியை சிறிய துண்டுகளாக உடைத்தும் சேர்க்க வேண்டும். மசித்த கிழங்கு மசாலாவிற்கு கெட்டித் தன்மையையும், துண்டுகள் சாப்பிடும் போது வாயில் பட்டு நல்ல சுவையையும் கொடுக்கும்.
மஞ்சள் தூள் சேர்க்கும் நேரம்:
நல்ல பிரகாசமான மஞ்சள் நிறம் கிடைப்பதற்கு மஞ்சள் தூளை உருளைக்கிழங்கு சேர்த்த பிறகு போடாமல் வெங்காயம் வதக்கும் பொழுதே எண்ணெயில் சேர்த்து விட வேண்டும். தண்ணீரோ அல்லது உருளைக்கிழங்கோ சேர்த்த பிறகு மஞ்சள் தூளை சேர்த்தால் நிறம் மங்கலாகிவிடும். எண்ணெயில் மஞ்சள் தூள் வதங்கும் பொழுது அதன் பச்சை வாசனை நீங்குவதுடன் மசாலாவிற்கு ஹோட்டல் போல நல்ல பிரகாசமான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும்.
வெங்காயத்தை வதக்கும் முறை:
பூரி மசாலாவிற்கு வெங்காயம் பொன்னிறமாகவோ அல்லது சிவப்பாகவோ வதங்கக் கூடாது. வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை மட்டுமே வதங்க வேண்டும். வெங்காயம் சிவந்துவிட்டால் மசாலாவின் நிறம் மாறிவிடும்.
அதேபோல் தக்காளி சேர்த்தால் நிறம் மாறிவிடும் என்பதால் ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலாவிற்கு தக்காளி சேர்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதேபோல் காரத்திற்கு தனி மிளகாய்த்தூள் சேர்க்காமல் பச்சை மிளகாயை மட்டும் நீளவாக்கில் கீறி சேர்க்க வேண்டும். இது மஞ்சள் நிறம் மாறாமல் இருக்க உதவும்.
மொத்தத்தில் ஹோட்டல் சுவையில் பூரி மசாலா வருவதற்கு உருளைக்கிழங்கை சரியான பதத்தில் வேக வைப்பதும், கடலை மாவுக் கலவையை சேர்ப்பதும் (இதுதான் மசாலாவிற்கு பளபளப்பான ஹோட்டல் நயத்தையும், சரியான பக்குவத்தையும் தரும்), காரத்திற்கு மிளகாய்த்தூளுக்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்ப்பதும் நிறத்தையும் மணத்தையும் கூட்டும்.
அசல் ஹோட்டல் மசாலாவில் தக்காளி சேர்க்க மாட்டார்கள். தக்காளி சேர்த்தால் அது குருமாபோல மாறிவிடும்.
எனவே, மஞ்சள் நிறம் மாறாமல் இருக்க தக்காளியைத் தவிர்த்து விடவேண்டும். முக்கியமாக மசாலா தயாராகி அடுப்பை அணைத்த பிறகு அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கினால் ஹோட்டல் ஸ்டைல் புளிப்பு சுவையும் பூரி மசாலாவிற்கு கிடைக்கும். கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவிட வாசனை தூக்கலாக இருக்கும்.