

ஹோட்டலில் சப்பாத்தி, பூரி, பட்டூராவுடன் பரிமாறப்படும் சன்னா மசாலாவின் சுவையே தனி. அடர்த்தியான கிரேவி, மசாலா மணம், மென்மையான கொண்டைக்கடலை என அனைத்தும் சேர்ந்தால்தான் அந்த ஹோட்டல் சுவை கிடைக்கும். ஆனால் நாமும் எப்படி எப்படியோ ரெசிபியை மாற்றி செய்து பார்த்தாலும் ஹோட்டல் ருசி மட்டும் வரவே வருவதில்லை. இதனாலேயே சென்னா மசாலாவை மறந்து ஹோட்டல் செல்லும் போது மட்டும் விரும்பி சாப்பிடுவோம். இனி அந்தக் கவலைவேண்டாம்.
சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் இதை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் (சிறியது)
பெரிய வெங்காயம் – 2( நறுக்கியது)
தக்காளி – 2 ( நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
சன்னா மசாலா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 2 டே.ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
கொத்தமல்லித்தழை- சிறிது
எலுமிச்சை – சிறிதளவு.
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே நன்கு கழுவி 8 முதல் 10 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்த நாள் அதைக் கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 6 - 8 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை , சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகாய்த்தூள் உள்ளிட்ட மசாலாத்தூள்கள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு மசாலா வாசம் போய் சற்றே கெட்டியானதும் வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி நறுக்கிய கொத்தமல்லித்தழை , எலுமிச்சைச்சாறு சேர்த்து மூடி வைக்கவும்.
ஹோட்டல் சுவைக்கான 4 ரகசியங்கள்
1. கொண்டைக்கடலையை நன்றாக ஊறவைப்பதில் இருக்கிறது முதல் ரகசியம். குறைந்தது 8 மணி நேரம் ஊறவைத்தால் கொண்டைக்கடலை விரைவாகவும் மென்மையாகவும் வேகும். இதனால் சாப்பிடும்போது நறுக்கென்று கடினமாக இல்லாமல் நல்ல மென்பதம் கிடைக்கும்.
2. மசாலாவை பச்சை வாசனை போக வதக்க வேண்டியது அவசியம். சிலர் கடமைக்கு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு அவசரமாக வதக்கி சட்டு புட்டுனு செய்து முடிப்பார்கள். அதைத் தவிர்த்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக நன்றாக வதக்குவது முக்கியம். குறிப்பாக மசாலாவின் பச்சை வாசனை முழுமையாக நீங்கவேண்டும்.
3. கிரேவியின் கெட்டித்தன்மைக்கு இந்த ரகசியத்தை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள். சின்ன டிப்ஸ்தான். வேகவைத்த கொண்டைக்கடலையில் சிறிதளவு எடுத்து மிக்சியில் மசித்துக் கிரேவியில் சேர்க்கவும். இதனால் தண்ணீராக இல்லாமல் கெட்டியான ஹோட்டல் ஸ்டைல் கிரேவி கிடைக்கும்.
4. கடைசியாக சிறிதளவு கரம் மசாலா, சன்னா மசாலா தூள், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். விருப்பப்பட்டால் கஸ்தூரி மேத்தியை உள்ளங்கையில் நசுக்கிச் சேர்க்கலாம். இதுவே ஹோட்டல் ரெசிபி ரகசிங. கஸ்தூரி மேத்தி நல்ல தனித்துவமான மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.
கூடுதல் டிப்ஸ் உங்களுக்காக...
கொண்டைக்கடலையை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் கிரேவிக்குப் பயன்படுத்தலாம்.
சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் உணவகச் சுவை நிச்சயம் கிடைக்கும்.
வெங்காயத்தை நன்றாகப் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
மசாலாப் பொருட்களைத் தீ அதிகமாக இல்லாமல் வறுக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு வாசனை போகும் வரை வதக்கவேண்டும்.
தேங்காயை தேங்காய் விழுது சிறிது சேர்த்தால் கூடுதல் கிரேவி கிடைக்கும். அதேசமயம் அளவுக்கு அதிகமாகவும் சேர்க்கக் கூடாது.
மசாலாவை நைசாக அரைத்தால்தான் கிரேவிக்கு நல்ல பதம் கிடைக்கும்.
இன்னொரு ரகசியம் என்று தெரியுமா? சன்னா மசாலாவைச் செய்தவுடன் சாப்பிடுவதைவிட சில நிமிடங்கள் மூடிவைத்துப் பரிமாறினால் மசாலா சுவை கொண்டைக்கடலையில் நன்றாக இறங்கியிருக்கும். ருசி மேம்படும்.
என்ன ஹோட்டல் சென்னா மசாலா கிரேவி வைக்க கொண்டைக்கடலை ஊற வைக்க கிளம்பிட்டீங்களா? ஜமாய்ங்க...