எண்ணெய் பிரியும் ஹோட்டல் தக்காளி தொக்கு: கைகொடுக்கும் 4 எளிய குறிப்புகள்!

பக்காவான புளிப்புச் சுவையுடன் வீட்டிலேயே தொக்கு செய்யும் விதம்.
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு Gemini image
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

வீட்டில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு நாம் தக்காளி தொக்கு செய்தாலும் ஹோட்டலில் செய்யும் சுவை கிடைப்பதில்லை. தக்காளி தொக்கு எண்ணெய் பிரிந்து சரியான புளிப்பு சுவையுடன் வர செய்முறை மற்றும் 4 குறிப்புகள் பெரிதும் உதவும்.

செய்முறை: 

வெறும் வாணலியில் ½ டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ½ டீஸ்பூன் கடுகு சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து தனியே வைக்கவும்.

½ கிலோ நாட்டுத் தக்காளியை நன்றாகக் கழுவி, துணியால் ஈரம் துடைத்துப் பொடியாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் தக்காளியுடன் ஒரு நெல்லிக்காய் அளவு கொட்டை நீக்கிய புளியையும் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடிகனமான கடாயில் 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ½ டீஸ்பூன் கடுகு சேர்த்துப் பொரிய விடவும். அதனுடன் 8 பூண்டு பற்கள், இடித்து சேர்த்து தண்ணீர் துடைத்த கறிவேப்பிலை மற்றும் ½ ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து அத்துடன் ½ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு முழு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். தக்காளியின் பச்சை வாசனை போய், நீர் சற்று வற்றியதும் 11/2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் 1 ஸ்பூன் சாதாரண மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து, அடிபிடிக்காமல் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் தக்காளி சுருண்டு அல்வா பதத்திற்கு வரும்போது, ஊற்றிய எண்ணெய் ஓரங்களில் பிரிந்து மேலே மிதக்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் வறுத்து அரைத்த வெந்தய-கடுகு பொடி மற்றும் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைக்கவும்.

ஹோட்டல் சுவையில் வர 4 குறிப்புகள்

1. சரியான தக்காளித் தேர்வு:

பெங்களூர் தக்காளிக்குப் பதிலாக புளிப்புச் சுவை நிறைந்த நாட்டுத் தக்காளிதான் தொக்குக்குத் தேவையான இயற்கைப் புளிப்புத் தன்மையைத் தரும். தக்காளி வாங்கும் போது நன்றாகப் பழுத்த, கெட்டியான ரகமாகப் பார்த்து வாங்குவது தொக்கின் அமைப்பைச் சிறப்பாகத் தரும்.

2. தாராளமான நல்லெண்ணெய்:

ஹோட்டல் ஸ்டைல் தொக்கு நீண்ட நேரம் கெடாமலும், எண்ணெய் மேலே மிதந்து வரவும் நல்லெண்ணெய் தான் மிகச் சிறந்தது. சமையல் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைக் காட்டிலும் நல்லெண்ணெய் சேர்க்கும் போது நறுமணமும், சுவையும் பன்மடங்கு கூடும். வதக்கும் போது எண்ணெய் சற்று அதிகமாக இருப்பது போலத் தெரிந்தாலும், தொக்கு சுருண்டு வரும் போது எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும்.

தக்காளி தொக்கு
தக்காளி தொக்குGemini image

3. நீரின் அளவு முற்றிலும் வற்றுதல்: 

தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்தோ அல்லது பொடியாக நறுக்கியோ வதக்கும் போது அதிலுள்ள ஈரப்பதம் முற்றிலுமாக ஆவியாக வேண்டும். கடாயின் ஓரத்தில் எண்ணெய் பிரிந்து தெரியும் வரை மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிதளவு ஈரப்பதம் இருந்தாலும் தொக்கு சீக்கிரம் கெட்டுப்போய் விடும்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி: வெள்ளை நிறம் மாறாமல், கெட்டியாக வர 4 ரகசியங்கள்!
தக்காளி தொக்கு

4. புளிப்பு மற்றும் காரம் சமநிலையில் இருத்தல்: 

நாட்டுத் தக்காளி இயற்கையாகவே புளிப்பாக இருந்தாலும், கூடுதல் சுவைக்காகத் தக்காளி வதக்கும் போது சிறிதளவு புளிக் கரைசல் ஊற்றி வைக்கலாம். காரத்திற்கு சாதாரண மிளகாய்த்தூள் மற்றும் அழகான சிவப்பு நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் இரண்டையும் சமமாகச் சேர்த்தால், ஹோட்டல் தோற்றமும் சரியான காரமும் கிடைக்கும். இறுதியாகச் சிறிதளவு வெல்லம் சேர்ப்பது புளிப்பு மற்றும் காரத்தைச் சமன் செய்யும். மேலும் இதன் சுவையைக் கூட்ட வெந்தயம் மற்றும் கடுகு ஆகியவற்றை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து, பொடி செய்து கடைசியாகத் தொக்கில் சேர்க்க வேண்டும். இது ஹோட்டல் தொக்கிற்கே உரிய தனித்துவமான நறுமணத்தைக் கொடுக்கும்.

இந்தச் சிறிய நுணுக்கங்களைக் கவனத்தில் கொண்டு சமைத்தால், வீட்டிலேயே அசல் ஹோட்டல் சுவையில், எண்ணெய் மிதக்கும் மணமான தக்காளி தொக்கை எளிதாகத் தயாரிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
உடலுக்குத் தெம்பு தரும் வெள்ளைச் சோளம்: பாரம்பரிய முறையில் 3 அருமையான ரெசிபிகள்!
தக்காளி தொக்கு

சரியான பதத்தில் வதக்கி, சுத்தமான கண்ணாடிப் பாட்டிலில் சேமித்து வைத்தால், நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு அருமையான பக்க உணவாக இது அமையும்.

நீர்த்த தன்மையை முற்றிலுமாக நீக்கி, அசல் ஹோட்டல் சுவையைப் பெறும் வகையில், துல்லியமான படிப்படியான வழிகாட்டிகளையும் தொழில்முறை ரகசியங்களையும் வாசகர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.