ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி: வெள்ளை நிறம் மாறாமல், கெட்டியாக வர 4 ரகசியங்கள்!

விருந்தினர்கள் வியக்கும் வண்ணம் ஹோட்டல் ஸ்டைல் சட்னி செய்யும் ரகசியங்கள் இதோ.
தேங்காய் சட்னி - white-coconut-chutney-recipe-tamil
தேங்காய் சட்னி - white-coconut-chutney-recipe-tamil
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி நிறம் மாறாமல், கெட்டியாக வர இந்த 4 ரகசியங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு அவசரத்தில் கைகொடுக்கும் ஒரே சட்னி தேங்காய் சட்னிதான். வேலைக்கு நேரம் ஆச்சா? திடீரென விருந்தினர் வந்துவிட்டார்களா? காரமில்லாமல் ஹெல்தி சட்னி வேண்டுமா? எல்லாவற்றுக்கும் இருக்கவே இருக்கிறது எளிய முறையில் செய்யும் தேங்காய் சட்னி.

அதிலும் இட்லி, தோசைக்கு எத்தனை வகையான சட்னி சாம்பார்கள் இருந்தாலும், ஹோட்டலில் கொடுக்கும் வெள்ளை நிறத் தேங்காய் சட்னிக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தேங்காயின் இயற்கையான வெண்மை நிறம், கெட்டியான பதம், மிதமான காரம், கடுகு தாளிப்பின் மணம் என அனைத்தும் சேரும்போது அதன் சுவையே தனிதான். ஹோட்டலில் மட்டும் எப்படி தனி சுவை என யோசிப்போம். வீட்டில் பெரும்பாலும் இந்த ருசி வருவதில்லை ஏன்?

வீட்டில் தேங்காய் சட்னி அரைக்கும்போது சில நேரங்களில் நிறம் மாறிவிடும். சில சமயங்களில் நீர்த்து தண்ணீராகிவிடும். ஆனால் இந்த எளிய ரகசியங்கள் தெரிந்தால் ஹோட்டலில் கிடைப்பது போன்ற வெள்ளை நிறத்திலும் கெட்டியான பதத்திலும் சட்னியை நம்மாலும் வீட்டிலேயே செய்ய முடியும்.

முதலில் தேங்காய் சட்னி செய்முறையை பார்ப்போம்.

தேவையானவை:

துருவிய தேங்காய் -1 கப்

பொட்டுக்கடலை -2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் -2

இஞ்சி- சிறிய துண்டு

உப்பு- தேவையான அளவு

எலுமிச்சைச் சாறு

½ தேக்கரண்டி (விருப்பப்பட்டால்) அல்லது புளி சிறிது.

தாளிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த சிவப்பு மிளகாய் – 1

இதையும் படியுங்கள்:
கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!
தேங்காய் சட்னி - white-coconut-chutney-recipe-tamil

செய்முறை:

துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து மின் அம்மியில் சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் ஊற்றி முதலில் கொரகொரப்பாக அரைக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து உடனே ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சட்னியில் கொட்டினால் தேங்காய் சட்னி தயார்.

வெள்ளை நிறமும் கெட்டியான பதமும் கிடைக்க இந்த 4 ரகசியங்கள் உங்களுக்காக இங்கு.

தேங்காயைத் தேர்ந்தெடுக்கும்போது உள்ளே அதிகம் காய்ந்துபோகாத, நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும் முற்றிய தேங்காயைப் பயன்படுத்துங்கள். தேங்காயைத் திருவும் போது அடிவரை திருவாமல் பழுப்பு நிறத் தோலை நீக்கிவிட்டு பூப் போன்ற வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தினால் சட்னியின் நிறம் அழகாக இருக்கும்.

தேங்காய் அரைக்கும்போது சூடான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்ந்த அல்லது சாதாரண குளிர்நிலைத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகத் தண்ணீர் ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். இது கெட்டியான பதம் கிடைக்க உதவும்.

பொட்டுக்கடலையின் அளவு இந்த சட்னி யின் ருசிக்கு மிக முக்கியம்.

தேங்காய் சட்னி - white-coconut-chutney-recipe-tamil
தேங்காய் சட்னி - white-coconut-chutney-recipe-tamil

ஒரு கப் தேங்காய்க்கு 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சரியான அளவு. இது சட்னிக்குக் கெட்டியான பதத்தைக் கொடுக்கும். அதிகமாகச் சேர்த்தால் தேங்காயின் இயற்கையான சுவை குறைந்து, சட்னியின் நிறமும் மாறலாம்.

அதேபோல் அதிக நேரம் மிக்ஸியில் அரைப்பதும் தவறு. தேங்காயை நீண்ட நேரம் தொடர்ந்து அரைக்கும்போது மிக்ஸியின் வெப்பம் அதிகரிக்கலாம். இதனால் தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து சட்னியின் தன்மை மாறக்கூடும். இடையிடையே நிறுத்தி அரைத்தால் நல்ல பதம் கிடைக்கும்.

சட்னி தயாரிக்கும்போது தவிர்க்கவேண்டிய இந்த 4 தவறுகள் என்ன தெரியுமா?

காரத்திற்கு அதிகப்படியான பச்சை மிளகாய் சேர்ப்பது சட்னியின் நிறத்தை மாற்றலாம்.

அதிகத் தண்ணீர் ஊற்றுவது சட்னியை நீர்த்துப் போகச் செய்யும்.

தேங்காயின் பழுப்பு நிறத்தோலை அதிகமாகச் சேர்ப்பது வெள்ளை நிறத்தைக் குறைக்கும்.

அரைத்த சட்னியை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருப்பது சுவை மற்றும் தரத்தைப் பாதிக்கலாம்.

ஹோட்டல் சுவைக்கான கூடுதல் குறிப்பு இதோ...

சில ஹோட்டல்களில் தேங்காய் சட்னியுடன் சிறிதளவு பொட்டுக்கடலை, இஞ்சி (சிலர் பூண்டு சேர்ப்பதுண்டு) சேர்ப்பார்கள். ஒவ்வொரு ஹோட்டலிலும் செய்முறை மாறுபடும். வீட்டில் தேங்காயின் இயற்கையான சுவை மேலோங்க வேண்டும் என்றால் பொட்டுக்கடலையை அளவோடு சேர்ப்பதே சிறந்தது. சரியான தாளிதமும் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக வெள்ளை நிறம், கெட்டியான பதம், தேங்காயின் இயற்கையான மணம் இந்த மூன்றும் சரியாக அமைந்துவிட்டால் உங்கள் வீட்டு இட்லி, தோசைக்கும் ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி ருசிக்கும்.

இதையும் படியுங்கள்:
சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
தேங்காய் சட்னி - white-coconut-chutney-recipe-tamil