

வெள்ளைச் சோளம் (White Jowar) என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பாரம்பரிய சிறுதானியம் ஆகும். இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. இதில் குளுகோஸ் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. எலும்புகளை வலுவாக்கும் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற கனிமச் சத்துக்களும் உள்ளன. குளூட்டன் (Gluten free) அற்றது என்பதால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்கள் இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
1. சோள பாலக் முறுக்கு:
தேவையான பொருட்கள்:
சோள மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
பாலக்கீரை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையானது
பெருங்காயத்தூள் - சிறிது
வெண்ணெய் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையானது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
முதலில் பச்சை மிளகாய் பாலக்கீரை இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, வெண்ணெய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும். இதில் அரைத்த கீரைக் கலவையை சேர்த்து தேவையான நீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் எண்ணையை வைத்து சூடானதும், பிசைந்த மாவை முறுக்கு அச்சில் சேர்த்து பிழிந்து எடுக்க மிகவும் ருசியான சோள பாலக் முறுக்கு தயார். கரகரப்பாக மிகவும் சுவையாக இருக்கும். ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு ஏற்றது.
2. சோள புட்டு:
தேவையான பொருட்கள்:
வெள்ளைச் சோள மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
வெதுவெதுப்பான தண்ணீர் - தேவையானது
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் - தேவைக்கேற்ப
செய்முறை:
சோள மாவை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் வறுக்கவும். மாவு நிறம் மாறக்கூடாது. லேசான வாசனை வந்தால் போதும். வறுத்தபின் மாவை நன்றாக ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் ஆறிய வெள்ளைச் சோள மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கையால் நன்கு பிசிறி விட்டுக்கொண்டு, வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து மாவை உதிரியாகப் பிசைந்து கொள்ளவும்.
மாவை கையில் பிடித்தால் பிடிக்க வரவேண்டும், உதிர்த்தால் உதிரவேண்டும். இதுதான் சரியான புட்டு மாவு பக்குவம். சிறு கட்டிகள் இருந்தால் கையால் உடைத்துவிடவும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
இட்லி பாத்திரத்தில் அல்லது புட்டுக் குடத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். புட்டுக் குழாயின் அடியில் முதலில் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய், அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள சோள மாவு, மீண்டும் தேங்காய் துருவல், அதன் மீது மாவு என்று மாற்றி மாற்றி அடுக்கவும். இறுதியாக மேல் பகுதியில் தேங்காய் துருவல் கொண்டு மூடவும். புட்டுக் குழாயை மூடி, மிதமான தீயில் ஆவியில் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்க மிகவும் சத்தான புட்டு தயார்.
வெந்த புட்டை ஒரு தட்டிற்கு மாற்றி ஏலக்காய் தூள், நாட்டு சக்கரை மற்றும் நெய் சேர்த்து சூடாக ஒரு வாழைப் பழத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
3. வெள்ளைச் சோள இட்லி:
தேவையான பொருட்கள்:
வெள்ளைச் சோளம் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானது
செய்முறை:
சோளம் மற்றும் உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்து தனித்தனியாக ஊறவைக்கவும். மூன்று மணி நேரங்கள் கழித்து முதலில் ஊறிய உளுந்து மற்றும் வெந்தயத்தை மசிய அரைக்கவும். அதன் பிறகு சோளத்தை சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். இதில் தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்கு கரைத்து புளிக்கவிடவும். சிறுதானிய மாவு என்பதால் சீக்கிரமே புளித்து விடும்.
4 மணி நேரங்கள் கழித்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதி வந்ததும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இட்லியை வேகவைத்து எடுக்க பஞ்சு போன்ற ஆரோக்கியமான, சுவையான சோள இட்லி தயார். இதே போல் தோசையும் செய்யலாம்.
வெள்ளைச்சோளத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. இதனை தோசை, ரொட்டி, அடை என செய்து சாப்பிடலாம். கஞ்சி காய்ச்சியும் குடிக்கலாம். சப்பாத்தி, உப்புமா, பொங்கல் என செய்தும் சாப்பிடலாம்.
4. வெங்காயப் பொடி:
தேவையான பொருட்கள்:
தேங்காய் பொடி போல் இதனை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் - 6
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையானது
செய்முறை:
வெங்காயத்தை மெல்லியதாக நீள நீளமாக நறுக்கி வைக்கவும். வாணலியில் தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு நன்கு வறுக்கவும். பொன் கலரில் வந்ததும் அதனை ஒரு தட்டில் கொட்டி விட்டு புளியை நன்கு வறுத்தெடுக்கவும்.
கறிவேப்பிலையை சேர்த்து பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். கடைசியாக 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு பொன் கலர் வரும் வரை வறுக்கவும். நன்கு வறுத்ததும் ஒரு கைப்பிடி அளவு தனியாக எடுத்து வைத்துவிட்டு, வறுத்த சாமான்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.
மிகவும் ருசியான வெங்காயப் பொடி தயார். இதனை சூடான சாதத்தில் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்து சாப்பிட ஆகா அமிர்தம் என்று பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.
பாரம்பரியச் சிறுதானியமான வெள்ளைச் சோளத்தை வைத்து குடும்பத்தினருக்குப் பிடித்தமான சுவையான பலகாரங்களையும் உணவுகளையும் தயாரிக்கும் முழுமையான வழிகாட்டி.