

சென்னையில் பெரும்பாலான ஹோட்டல் மெனுவில் வடைகறி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என எதற்கும் ஏற்ற வகையில் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஹோட்டல் ஸ்டைலில் அதே டேஸ்டில் வீட்டிலேயும் வடகறி செய்து சாப்பிட ஆசையா? வாருங்கள் இப்பொழுதே ஹோட்டல் வடகறியின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
ஹோட்டல் ஸ்டைல் வடகறி என்றாலே அதன் தனித்துவமான மசாலா மணமும், மென்மையான வடைத் துண்டுகளும்தான் சிறப்பு. ஹோட்டல் சுவையில் நல்ல மொறு மொறுப்பான, வாசனையான வடகறி வீட்டிலேயே செய்ய கடலைப்பருப்பு அரைப்பது மற்றும் மசாலா வதக்கும் முறை தான் மிகவும் முக்கியம். ஹோட்டல் வடகறியின் அதே அசல் சுவையை வீட்டிலும் கொண்டு வருவதற்கு நான்கு முக்கிய ரகசியங்களைப் பின்பற்றினால் போதும்.
வடகறி செய்முறை:
பருப்பை கொரகொரப்பாக அரைப்பது:
வடகறிக்கான கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் முற்றிலும் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுதும் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீர் அதிகமானால் வடை எண்ணெயை குடிக்கும் அல்லது குழம்பில் கரையும் பொழுது கெட்டித் தட்டிவிடும். பருப்பை நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக 80% பருப்பு அரைபட்டும், 20% முழு பருப்பாகவும் இருக்குமாறு 'பல்ஸ் மோடில்' அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் வடை மென்மையாக இருக்கும்.
சோம்பு மற்றும் பூண்டு சேர்ப்பது:
ஹோட்டல் வடகறியின் பிரத்தியேகமான மணத்திற்கும் ருசிக்கும் காரணம் சோம்பும் பூண்டும் தான். கடலைப்பருப்பை அரைக்கும் பொழுதே அதனுடன் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, 1 ஸ்பூன் சோம்பு மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். பூண்டை தோல் உரித்து சேர்ப்பதை விட தோலோடு நசுக்கி சேர்த்து பிசைய வடை வேகும் பொழுதே மணம் தூக்கலாக இருக்கும். இது வடை வெந்து குழம்பில் ஊறும்போது மேலும் அலாதியான ஹோட்டல் ருசியையும் வாசனையையும் தரும்.
வடையை உதிர்ப்பது:
அரைத்த மாவை எண்ணெயில் பக்கோடா போல பொரித்து எடுக்கலாம் அல்லது இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வடகறியை ஆரோக்கியமாகவும், அதே சமயம் சாஃப்டாகவும் செய்ய வடையை எண்ணெயில் பொரிப்பதற்கு பதில் இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது சிறப்பு. வடை வெந்ததும் நன்றாக ஆறவிட்டு, மிகவும் நைசாக இல்லாமல் நடுத்தரமான மிகச் சிறிய துண்டுகளாக கைகளால் உதிர்த்துக் குழம்பில் சேர்க்க, அவை குழம்பின் சாற்றை நன்றாக உறிஞ்சி மேலும் சாஃப்ட் ஆகும்.
மசாலா மற்றும் புதினா வதக்கல் (The Gravy Secret):
வடகறிக்கு தக்காளி அதிகமாக இருக்கக் கூடாது. அதிகமாகிவிட்டால் புளிப்புச் சுவை வந்துவிடும். எனவே வெங்காயம் 2 பங்கு என்றால் தக்காளி 1 பங்கு என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். அதாவது வெங்காயம் தான் தூக்கலாக இருக்க வேண்டும். அத்துடன் வெங்காயம் நன்றாக வதங்கி சுருங்க வேண்டும்.
வதக்கும்போது பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காயோடு நிறைய புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை எண்ணெயிலேயே வதக்கவேண்டும்.
இது வடகறிக்கு ஒரு பிரியாணி போன்ற பிரமாதமான வாசனையையும், ஹோட்டல் ஸ்டைல் நறுமணத்தையும் கொடுக்கும். இதுதான் ஹோட்டல் வடகறியின் பிரத்தியேகமான மணத்திற்கு காரணமாகும்.
குழம்பு நன்றாகக் கொதித்ததும் உதிர்த்த வடைகளைப் போட்டு 5 நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைக்கக் கூடாது. வடகறி ஆறியவுடன் கெட்டியாகும் என்பதால் சற்றே தண்ணீராக இருக்கும்போதே இறக்கிவிட வேண்டும்.
இது இட்லி, தோசை, பரோட்டா என எதற்கும் தோதாக இருக்கும்.
கூடுதல் டிப்ஸ்:
வடகறிக்கு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் பொழுது எப்பொழுதும் புதிதாக அரைத்த விழுதை சேர்த்தால் மணம் கூடுதலாக இருக்கும்.
ருசியை மேலும் கூட்ட சிறிது முந்திரி மற்றும் கசகசாவைக் கூட ஊறவைத்து அரைத்து சேர்க்கலாம். இவை வடகறி மசாலாவை கெட்டித் தன்மையுடனும் அதிக ருசியுடனும் இருக்கச் செய்யும்.
உட்டாலங்கடி கிரி கிரி! சைதாப்பேட்டை வடகறி கம கம வாசனையுடன் தயார்.