

தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கிய இடம் வகிப்பது வெந்தயக் குழம்பு. இந்தக் குழம்பு சுவையாகவும் மணமாகவும் இருப்பதால் பல வீடுகளில் விரும்பிச் சமைக்கப்படும் பாரம்பரிய உணவாகும். இது சாதத்துடன் மட்டுமல்லாமல், இட்லி, தோசைக்கும் சைட் டிஷ்ஷாகப் பட்டையைக் கிளப்பும்!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் கசப்பில்லாமல், நல்ல மணத்துடன் வெந்தயக் குழம்பு தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
ஹோட்டல் ஸ்டைல் வெந்தயக் குழம்பு செய்முறை!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெரிய தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - அரை கப்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மல்லி விதைகள் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிதமான தீயில் வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மல்லி, மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த பொருட்களை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.
ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிதமான தீயில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளியைச் சேர்த்துக் குழைய வதக்கியதும் மஞ்சள் தூள், அரைத்த மசாலா விழுது சேர்த்துக்கிளறவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கி, சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
இறுதியாகப் புளிக்கரைசல், தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். குழம்பு ஓரளவு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
வெந்தயக் குழம்பு செய்யும்போது கவனிக்க வேண்டியவை!
ஹோட்டல் ஸ்டைலில் கசப்பில்லாமல், நல்ல மணத்துடன் வெந்தயக் குழம்பு தயாரிக்க நான்கு ரகசியங்களைத் தெரிந்துகொள்வோம்.
வெந்தயக் குழம்பு கசக்காமல் இருக்க 4 ரகசியங்கள்!
வெந்தயத்தின் அளவும் வறுத்தலும்!
பொதுவாக வெந்தயத்தில் லேசான கசப்புச் சுவை இருக்கும். எனவே குழம்புக்குத் தேவையான அளவைச் சரிபார்த்துச் சேர்க்க வேண்டும். அதேபோல மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். கருகிவிட்டால் குழம்புக்குக் கசப்புச் சுவையைக் கொடுத்துவிடும்.
மசாலாப் பொருட்களைத் தனித்தனியாக வறுக்க வேண்டும்!
மல்லி, மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை மிதமான தீயில் நிதானமாகத் தனித்தனியாக வறுத்து எடுத்து ஆறவிட்டுப் பிறகு அரைக்க வேண்டும். இப்படி அரைத்தால்தான் மசாலாவின் இயற்கையான மணம் கிடைக்கும். இதுதான் ஹோட்டல் ஸ்டைல் குழம்பின் முக்கியமான
ரகசியம். அரைத்த மசாலா அதிகமாக இருந்தால், மீதியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
சின்ன வெங்காயம், பூண்டு, நல்லெண்ணெய் கூட்டணி!
வெந்தயக் குழம்பின் சுவையைக் கூட்டுவதில் நாம் சேர்க்கும் சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவற்றை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கிச் சேர்க்க வேண்டும்.
சின்ன வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கிச் சேர்த்தால், அது குழம்புக்கு நல்ல சுவையையும் மணத்தையும் கொடுக்கும்.
எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும்!
குழம்பில் புளிக்கரைசல், அரைத்த மசாலா சேர்த்த பிறகு மிதமான தீயில் நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். குழம்பு கெட்டியாகி மேலே எண்ணெய் பிரிந்து வரும்போதுதான் மசாலாவின் பச்சை வாசனை நீங்கி, ஹோட்டல் ஸ்டைல் சுவையும் கிடைக்கும். இப்படி நன்றாகக் கொதிக்கவிட்டு எண்ணெய் பிரியச் செய்தால், குழம்பைச் சரியாகச் சேமித்து வைக்கும்போது சில நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
சூடான சாதத்துடன் இந்த வெந்தயக் குழம்பை ஊற்றிப் பிசைந்து, அப்பளம் அல்லது பொரித்த உருளைக்கிழங்கு ஃபிரை வைத்துச் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த முறையில் செய்து பாருங்கள். வீட்டிலேயே ஹோட்டல் சுவையை ருசிக்கலாம்!