

வீட்டில் வெள்ளை பட்டாணி குருமா செய்யும்பொழுது கல்யாண வீடுகளில் செய்வது போல் வீட்டில் செய்ய முடியாதா? அப்படி கல்யாண வீடுகளில் பரிமாறப்படும், சுவையான வெள்ளை பட்டாணி உருளைக்கிழங்கு குருமாவை வீட்டிலேயே அதே சுவையில் செய்யக்கூடிய எளிய செய்முறை இதோ:
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (நடுத்தரம்)
வெள்ளை பட்டாணி - 1 கப் (ஊறவைத்த காய்ந்த பட்டாணி)
அரைக்க:
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 8 முதல் 10 (அரை மணி நேரம் ஊறவைத்தது)
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (காரத்திற்கு ஏற்ப)
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 6 பற்கள்
தாளிக்க:
எண்ணெய் / நெய் - 2 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
கல்பாசி - சிறிதளவு (கூடுதல் சுவை தரும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் (தனியா தூள்) - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்கைத் தோலுரித்துச் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியைச் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் (1 விசில்) மிதமாக வேகவைத்துத் தனியாக வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் (தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு) சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நல்ல மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். (முந்திரியும் கசகசாவும்தான் கல்யாண வீட்டு குருமாவிற்கு அந்தப் கெட்டித்தனத்தையும் தனித்துவமான சுவையையும் தரும்).
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து அது குழைந்து வரும் வரை வதக்க வேண்டும். அடுப்பைச் சிறிய தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய்-முந்திரி விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
குருமா கொதித்து வரும்போது, வேகவைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியைச் சேர்த்துக் கிளறிவிடவும். மூடி போட்டு மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் மசாலா காய்கறிகளோடு ஒன்று சேரும் வரை கொதிக்க வைக்கவும்.
குருமா பதம் வந்ததும் கரம் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
மணமணக்கும் இந்த வெள்ளை பட்டாணி உருளைக் கிழங்கு குருமா பூரி, சப்பாத்தி, பரோட்டா, நெய் சாதம் (Ghee Rice), ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு மிகச்சிறந்த ஜோடியாகும்.
குறிப்பு:
இதேபோல் பச்சை பட்டாணி காய்ந்த பச்சை பட்டாணி போன்றவற்றிலும் செய்யலாம்.
வேகவைக்கும் போது வெள்ளை பட்டாணியை இரண்டு விசில் விட்டு பிறகு உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைத்தும் எடுக்கலாம்.
கசகசாவையும் சோம்பையும் வறுத்து அரைத்தால் இன்னும் கூடுதல் மணம் கிடைக்கும்.
கல்யாணப் பந்திகளில் மணக்கும் அந்த வெள்ளை பட்டாணி குருமாவை எந்தவொரு குறையும் இல்லாமல் அதே நறுமணத்துடனும் கெட்டித் தன்த்துடனும் உங்கள் வீட்டு சமையலறையில் தயாரித்து அசத்தலாம்.